My page - topic 1, topic 2, topic 3

மீன் வளர்ப்புக்கு உதவும் தொலை இயக்கி வாகனம்!

தொலை இயக்கி வாகனம் என்பது, தொலைவிலிருந்து நீருக்கடியில் இயக்கப்படும் வாகனம். இது, சில சமயங்களில் நீருக்கடியில் ரோபோ என்றும் அழைக்கப்படும்.

நீருக்கடியில் ரோபோக்கள்; தன்னிச்சையாக நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் மற்றும் தொலை இயக்கி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் என இரண்டு வகைப்படும்.

தன்னிச்சையாக நீருக்கடியில் இயங்கும் வாகனம் என்பது, மனிதனின் நேரடிக் கட்டுப்பாடு இல்லாமல் தானாகவே நீருக்கடியில் நகரும் திறன் கொண்டது.

தொலை இயக்கி மூலம் இயக்கப்படும் வாகனத்தின் இயக்கங்கள், நீரின் மேற்பரப்பில் இருந்து நேரடியாக மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும்.

தொலை இயக்கி வாகனம் என்றால் என்ன?

இது, நீருக்கடியில் வாகனம் மூலம் ஆளில்லாமல் மிகவும் தந்திரமாகச் செய்யும் பணி. இதை நீர்ப்பரப்பின் மேலிருந்து அல்லது கரையிலிருந்து விமானி இயக்குவார்.

இப்படி நீருக்கடியில் இயங்கும் இயந்திரம், வீடியோ கேம் விளையாட்டைப் போல, ஜாய்ஸ்டிக்கைப் பயன்படுத்தி நீரின் மேற்பரப்பில் உள்ள கப்பலிலிருந்து ஒருவரால் கட்டுப்படுத்தப் படும்.

புகைப்படக் கருவி பொருத்தப்பட்ட இந்த வாகனம், நீருக்கடியில் உள்ளதைப் பாதுகாப்பான முறையில் திறமையாகக் கண்காணிக்க உதவும்.

தொலை இயக்கி வாகனத்தின் பயன்கள்

ஆய்வு மற்றும் அறிவியலில், STEM கல்வி மற்றும் கல்வி ஆராய்ச்சியில், நீருக்கடியிலான ஆய்வில், தேடல், மீட்பு மற்றும் துறைமுகப் பாதுகாப்பில், தொலை இயக்கி வாகனம் பயன்படுகிறது.

தொலை இயக்கி வாகனத்தின் செயல்பாடு

இதில் புகைப்படக் கருவி அல்லது காணொளி, டிரான்ஸ்பான்டர், திசைகாட்டி, தூரங்களை அளவிடுதல், ஆழத்தைக் கணக்கிடுதல் மற்றும் பல பயன்பாடுகளின் தேவைகளைப் பொறுத்துக் கருவிகள் பொருத்தப்படும்.

இதில், விவரங்களை அறியும் இணைய தளம், கட்டுப்பாட்டுக் கருவி, நீருக்கடியில் கண்காணிப்பு மற்றும் வெளிப்புற நீரிலும் கண்டறிவதற்கான பல கூறுகளுடன் கூடிய கருவிகளைப் பொருத்தி இயக்கலாம்.

உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் அனைத்து விவரங்களையும் பயனாளர்கள் தெரிந்து கொள்ள உதவும்.

தொலை இயக்கி வாகனப் பயன்பாடு

இது, மனிதர்களால் ஆராய முடியாத, நீருக்கடியில் உள்ள தனித்தன்மை மிக்க உலகத்தை ஆராயப் பயன்படுகிறது.

இராணுவம், தேடுதல் மற்றும் மீட்புப்பணி, பொழுதுபோக்கு மற்றும் ஆராய்ச்சி, மீன் வளர்ப்பு, கடல் உயிரியல், எண்ணெய், எரிவாயு, கடல்சார் ஆற்றல் மற்றும் கப்பல் போக்குவரத்து என, பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.

மீன்வளத்தில் தொலை இயக்கி வாகனம்

தொலை இயக்கி வாகனத்தை மீன்வளத்தில் பயன்படுத்துவதற்கான காரணங்கள்: ஆக்கிரமிப்பு இனங்களின் தாக்கங்கள். கடலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மதிப்பிடுதல். ஆழமான பகுதியிலுள்ள மீன்களின் அளவுகளை மதிப்பிடுதல்.

கடல்மட்ட வாழ்விடத்தை வரைபடமாக்குதல். பாறைகளில் உள்ள பன்முகத் தன்மையை ஆய்வு செய்தல். கடல் குப்பைகளைக் கண்டறிதல்.

நீர்த்தர மாதிரிகளை ஆய்வு செய்தல். மீன்கள் மற்றும் அடிப்பகுதியில் உள்ள தாவர உணவுகளின் நிரந்தர மாற்றம் மற்றும் தற்காலிக மாற்றங்களை மதிப்பிடுதல்.

மீன் வளர்ப்பில் தொலை இயக்கி வாகனம்

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான உணவு, வருமானம் மற்றும் வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக மீன் வளர்ப்பு உள்ளது.

வெற்றிகரமான மற்றும் நிலையான மீன் வளர்ப்பு நடவடிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலம்; மீன்களின் நலம், அவற்றின் நடவடிக்கைகள்,

நீரில் மூழ்கிய உள்கட்டமைப்பு மற்றும் நீருக்கடியிலுள்ள சுற்றுச்சூழல் ஆகியவற்றை, தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தொலை இயக்கி வாகனம் மீன் பண்ணைகளைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இது, மீன் வளர்ப்பில் வலைகளின் ஆய்வுகள், விளக்குகள், உணவளித்தல், மீன்களின் இருப்பைக் கண்காணித்தல் போன்ற திறமையான செயல்களில் பயன்படுகிறது.

நீருக்கடியில் இயங்கும் தொலை இயக்கி வாகனத்தின் பயன்பாடு என்பது, நல்ல மீன்கள், திறமையான அறுவடை மற்றும் பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழல் காப்பையும் உறுதி செய்வதற்கான, செலவு குறைந்த வழியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

வலைகளின் ஆய்வு மற்றும் நீருக்கடியிலுள்ள கட்டமைப்பு

தொலை இயக்கி வாகனம், நீருக்கு அடியிலுள்ள கட்டமைப்பு, வலைகள் மற்றும் நங்கூரமிட உதவும் பொருள்களை, அவ்வப்போது ஆய்வு செய்ய அல்லது வழக்கமான ஆய்வுப் பணிகளில் பயன்படுகிறது.

தொலை இயக்கி வாகனத்தைப் பயன்படுத்துவோர், வலைகளை ஆய்வு செய்வதை, தினசரி ஒருமுறை என வழக்கமாகக் கொள்ளலாம்.

தினமும் வலைகளை ஆய்வு செய்யும் போது, வலைகளின் வரிகள், நங்கூரப் பொருள்கள் ஆகியவற்றின் தேய்மானம் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் சேதத்தைக் கண்காணிக்க முடியும்.

இந்த ஆய்வுகளைச் செய்வதன் மூலம், மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்கலாம். வலைகள் மற்றும் பண்ணைகள் பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்த முடியும்.

இப்படி, தினசரி ஆய்வின் மூலம் வலைகளின் சேதத்தைத் தற்காலிகமாகச் சரி செய்து பிறகு நிரந்தரமாகப் பழுது பார்க்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் சிக்கல்களை விரைவாகத் தீர்க்கலாம்.

தீவனக் கண்காணிப்பு

பண்ணைகளில் உள்ள மீன்களுக்கு உணவிடுவதைக் கண்காணிக்க, அவற்றுக்குச் சரியான அளவுகளில் முறையாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த, தொலை இயக்கி வாகனத்தைப் பயன்படுத்தலாம்.

மீன் பண்ணையில் தீவனம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாகும். அதனால், தொலை இயக்கி வாகனம் மூலம், இருப்பு மீன்கள் தீவனம் எடுத்துக் கொள்வதைக் கண்காணிக்க முடியும்.

மேலும், கூண்டுகளில் வழங்கப்படும் தீவனத்தை நன்றாக அளவிட முடியும். இதனால் இழப்புகளைத் தடுத்து, மீன்களின் வளர்ச்சியைக் கூடுதலாகப் பெற முடியும்.

மீன்களை ஆய்வு செய்தல்

தற்போதைய சூழ்நிலையில் மீன்களின் நலத்தைப் பராமரிப்பது நிலையான போராட்டமாக உள்ளது.

கடல் அமிலமயமாதல், கடல் வெப்பநிலை மிகுதல், நச்சுப் பாசிகள், வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களின் மாசு மற்றும் கடல் பேன்கள் போன்ற அனைத்தும் வளர்ந்து வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

எனவே, மாதிரி எடுப்பது மற்றும் கையாளுதலின் தேவைகளைக் குறைக்க, தொலை இயக்கி வாகனம் பயன்படுகிறது.

மீன்களை மாதிரி எடுப்பதால் மீன்களில் கார்டிசோலின் அளவு கூடுகிறது. சில நேரங்களில் ஆக்ஸிஜன் குறைந்து நீரின் வெப்பநிலை மிகும் போது கையாளுதலைக் குறைப்பது அவசியமாகிறது.

ஆனால், தொலை இயக்கி வாகனத்தில் உள்ள நீர்மூழ்கி கேமராக்கள் மூலம், மீன்களின் நலனைக் கவனிக்க முடியும். மீன்களைத் தாக்கும் பொதுவான நோய்களால் ஆண்டுதோறும் பில்லியன் டாலர்கள் கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.

இதனை முன்கூட்டியே கண்டறிவது, நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும்.

தொலை இயக்கி வாகனத்தில், வெப்பநிலை, ஆழமறிதல் மற்றும் ஆக்ஸிஜன் உணர்வுக் கருவிகளை அமைத்து, மீன் மாதிரிகளை எடுப்பது, பாதுகாப்பான மற்றும் திறமையான முறையைக் கையாளுவதாகும்.

மீன் பண்ணைகளில் தொலை இயக்கி வாகனத்தை மலிவான விலையில் எளிதாகப் பயன்படுத்தலாம்.

இன்றைய இயந்திரமய மீன் வளர்ப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டாலும், முழுமையான தன்னியக்கம் ஆக்கல் என்பது, இன்னும் வெகு தொலைவில் தான் உள்ளது.
மனிதர்களின் உறுதியான துணை இல்லாமல் முழுமையாக நிர்வகிக்கக் கூடிய மீன் பண்ணைகளை நாம் பார்க்க முடியாது.

ஆனால், செயற்கை நுண்ணறிவுள்ள தானியங்கி மூலம் முதலீடு செய்வது என்பது, வளர்ந்து வரும் உலக மக்கள் தொகைக்கு ஏற்ப, கடல் உணவுகளை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது.

அதே நேரம் மீன் வளர்ப்புச் செலவைக் குறைக்கவும் உதவுகிறது.


வெ.எழிலரசி, நா.இரம்யா, செரில் அன்டோனி, பா.அகிலன், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி, நிலையம், நாகை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks