கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கால்நடை மருத்துவ P1030488 e1614630695332

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

ங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார். நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி என்று, பெண்களைக் கும்மியடிக்கச் சொன்னார் மகாகவி பாரதி.

ஆனாலும், அந்நாள் முதல் இந்நாள் வரையில், பெண்களை அடிமைகளாக நினைக்கும் போக்கு இன்னும் தொடரத்தான் செய்கிறது. வேலைக்குச் செல்லும் இடங்களில் கூட அவர்களுக்குப் போதிய ஊதியம் கிட்டுவதில்லை. இந்நிலையில், 8.3.1857 இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தையல் தொழில் செய்யும் பல்லாயிரம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 28.2.1909 அன்று, அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி, பெண்களின் கோரிக்கைகளை ஆதரித்து, தேசிய பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.

பிறகு, 1910 இல், ஜெர்மனைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின், டங்கர், பாலா தீடா ஆகிய மகளிர் மூவர் இணைந்து, முதன்முதலாக, உலக மகளிர் நாளை 8.3.1914 இல் கொண்டாடினர். அன்று தொடங்கிய மகளிர் நாள்விழா, ஆண்டுதோறும் ஓர் இலட்சிய நோக்குடன் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சில நாடுகளில் மார்ச் 8, அரசு விடுப்பு நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக, பொருளாதார, கலை, பண்பாடு, அரசியல் ஆகிய துறைகளில், சாதனை படைத்த மகளிர்க்கு விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கின்றனர். மகளிரின் சாதனைகளைப் பாராட்டுவது, ஆண்களுக்கு நிகராகப் பெண்களை நடத்த வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆண்களின் பாலினக் கவர்ச்சிக்கு மட்டும் ஆளாகாமல் துணிந்து இயங்குவது, பெண்கள் முன்னேற்றத்துக்கு நன்கொடை வசூலிப்பது ஆகியன, உலக மகளிர் நாள் விழாவின் நோக்கங்களாகும். Choose To Challenge அதாவது, சவாலை எதிர்கொள் என்பது 2021 ஆண்டின் நோக்கமாகும்.

மங்கையர் திலகங்கள்

இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இவரைப் போல, இசையுலகில் மேதைமையுடன் விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, அவரின் தொடர்ச்சியாக அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையைச் சிறப்பாக இயக்கிய மருத்துவர் சாந்தா போன்றோரும் பெண்ணினத்தைப் பெருமைப்படுத்தும் மங்கையர் திலகங்களாகத் திகழ்கின்றனர். இவர்களைப் போல, கால்நடை மருத்துவத் துறையில் சிறப்பாக விளங்கிய மகளிரின மருத்துவர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மரு.ஆலன் இசபெல் கஸ்ட்: இவர், 1922 இல் இராயல் கால்நடை மருத்துவக் கல்லூரியால் சிறப்பிக்கப்பட்ட முதல் பெண் கால்நடை மருத்துவர். முதலில், இலண்டன் மருத்துவ மனையில் செவிலியராக இருந்தார். 1897 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பை முடித்துத் தங்கப் பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.

மரு.நிக்னன் நிக்கல்சன்: இவர், சிகாகோ மிக்கில்ஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1903 இல் கால்நடை மருத்துவர் பட்டத்தைப் பெற்றார். செல்லப் பிராணிகள் மருத்துவத்தில் ஈடுபட்ட முதல் பெண் மருத்துவர். சிறந்த கால்நடை மருத்துவர் எனப் பாராட்டப் பெற்றவர்.

மரு.எலினார் மாக்ரெத்: இவர், 1910 இல் சிகாகோ கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து, செல்லப் பிராணிகள் மருத்துவத்தில் வல்லுநராகத் திகழ்ந்தார்.

பாட்ரீசியா கூனூர்: இவர், ஸ்டேடன் ஐலேன்ட் மிருகக்காட்சிச் சாலையில் பணியாற்றிய, முதல் வன விலங்குகள் பெண் கால்நடை மருத்துவர் ஆவார்.

மரு.கேப்டன் டாய்சி தீன்னே: இவர், 1938 இல் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில், கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து, இராணுவத்தில் பணியாற்றிய முதல் கால்நடை மருத்துவர் ஆவார்.

மரு.மேரி நைட் டன்லப்: இவர், மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். உலகப் பெண்கள் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தை, சின்சினடி நகரில் தொடக்கியவர்.

மரு.பேலிஸ்லாஸ்: இவர், பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்பை முடித்து, குதிரைகளுக்கு மருத்துவம் செய்த முதல் பெண் மருத்துவர் ஆவார்.

இந்திய கால்நடை மருத்துவர்கள்

1948 முதல் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பெண்களும் பயில அனுமதி கிடைத்தது. இவ்வகையில், பெங்களூரைச் சேர்ந்த மரு.சக்குபாய் இராமச்சந்திரன், 1952 இல் கால்நடை மருத்துவர் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் மருத்துவர் ஆவார். தொடர்ந்து கால்நடை மருத்துவத் துறையில் பணியாற்றி வந்த இவர், இறுதியில் ஐவிஆர்ஐ அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவரைத் தொடர்ந்து, வட இந்தியாவைச் சேர்ந்த மரு.புஷ்பா ரானா பார்கே, மரு.அம்ரிதா படேல் போன்ற பெண் கால்நடை மருத்துவர்கள் பணியாற்றினர். இப்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர், கால்நடை மருத்துவர்களாக உள்ளனர். கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பயில்வோரில் 50%க்கும் மேற்பட்டோர் மாணவிகள் ஆவர். கால்நடை மருத்துவம் படித்த மகளிர், பேராசிரியர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, கல்லூரி முதல்வர்களாக, கால்நடைப் பராமரிப்புத் துறையில் முக்கிய அலுவலர்களாக உள்ளனர்.

மகளிர் கால்நடை மருத்துவர்கள் சங்கம்: 1985 அக்டோபர் 2 இல் அகில இந்திய பெண் கால்நடை மருத்துவர்கள் சங்கம், கேரள மாநிலம் திருச்சூர் கால்நடை மருத்துவக் கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் மரு.அன்னம்மா ஜேக்கப் தலைமையில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பெண் கால்நடை மருத்துவர்கள்: கால்நடை மருத்துவர் லீலாவதி, தமிழகக் கால்நடைப் பராமரிப்புத் துறையின் இயக்குநராக இருந்தார். சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி ஈனியல் துறையில் மரு.ஸ்ரீதேவி அசோகன் தலைமைப் பேராசிரியாக இருந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே தங்கப் பதக்கங்களைப் பரிசாகப் பெற்றவர். இப்போது, நாய்களுக்கான செயற்கைக் கருவூட்டல் மருத்துவ மனையை, சென்னைக் கொளத்தூரில் நடத்தி வருகிறார்.

பெங்களூரு கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற மரு.பிரேமா, பல்வேறு பணிகளில் இருந்து விட்டு, 1986 இல், உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார். பெங்களூரு கால்நடை மருத்துவக் கல்லூரியின் உடலியல் துறையில் பேராசிரியராக இருந்த மரு.வீணா, சிறுநீர் மூலம் மாடுகளில் சினைத் தன்மையை அறியும், புண்ணியகோடி ஆய்வைக் கண்டறிந்து செயல்படுத்திய முதல் பெண் மருத்துவர் ஆவார். இம்முறையை, வன விலங்குகளிலும் கையாண்டு வெற்றிப் பெற்றவர். இவர், கர்நாடக மாநில மகளிர் கால்நடை மருத்துவச் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து, கர்நாடகத்தில் பணி புரிந்த மரு.இராஜேஸ்வரி, அகில இந்திய மகளிர் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாராகச் செயலாற்றியவர். இவரது சகோதரி மரு.ஜெயஸ்ரீ, பெங்களூரு கால்நடை மருத்துவக் கல்லூரியின் மரபியல் துறையில் பணியாற்றி வருவதுடன், தமிழில் மருத்துவக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து, 2002 இல் நடந்த பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்ற முதல் பெண் மருத்துவர் கிருத்திகா, கேரள மாநிலத்தில் பணி புரிகிறார். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்த, சரக்குந்து ஓட்டுநரின் மகளான ஆனந்தி, 2017 இல் நடந்த பட்டமளிப்பு விழாவில் 18 தங்கப் பதக்கங்களைப் பெற்றார். 2019 இல் நடந்த பட்டமளிப்பு விழாவில் 19 தங்கப் பதக்கங்களைப் பெற்றார் மரு.இலாவண்யா. மரு.சுபப்பிரியா 7 தங்கப் பதக்கங்களைப் பெற்று, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஆடவர்க்கு நிகராக மகளிரும் இயங்கி வருவது பாராட்டத் தக்கது. இதனால், பால் உற்பத்தியில் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கோழி முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் நான்காம் இடத்திலும் உள்ளது. இந்தியளவில் முட்டை உற்பத்தியில் ஆந்திரம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.


கால்நடை மருத்துவ Dr.Jegath Narayanan e1612953778555

மரு.ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,

மேனாள் மண்டல இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத்துறை, சேலம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!