நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை!

விவசாயம் 5R9A9252 Copy

ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

யாரும் வேண்டும் நீரும் நீ; யாவர்க்கும் வேண்டும் நிலமும் நீ; நீரும் நிலமும் தாங்கும் உயிர்கள், நிலைகொள வேண்டும் காற்றும் நீ; சீரும் பேறும் கொண்டே வையம், சிறக்க வேண்டும் கதிரும் நீ; கார்முகில் தாங்கும் வானும் நீ; காலமெல்லாம் வாழும் தலைவன் நீ.. எனப் போற்றித் துதிக்கும், அலைகடல் ஆற்றல்மிகு தொண்டர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, இந்த இதழின் விஐபி விவசாயம் பகுதிக்காக, வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

மாசற்ற அன்பு

அந்தக் காலையிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்களை, ஓய்வு உடையில் இருந்தபடி சந்தித்துக் கொண்டிருந்தார். தங்கள் தலைவரைக் கண்ட மகிழ்ச்சியில் அந்தத் தொண்டர்கள் செல்பேசியில் படங்களை எடுத்து அவரவர் முகநூலில் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். கொஞ்சமும் நோகாமல் எல்லோருடனும் படங்களை எடுத்து, அவர்கள் அன்பை ஏற்று, தோளில் கை போட்டு, கட்டிப் பிடித்து, இனிப்புகளை ஊட்டி, ஒவ்வொரு தொண்டனின் ஆசையையும், நியாயமான தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

திறந்த மனம் 

நம்முடைய வருகையின் காரணத்தை அறிந்ததுமே பலமாகச் சிரித்தவர், “எனக்குக் கால் காணி நிலம் கூட இல்லை தம்பி. ஆனால் விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. இந்த அரசியல் வாழ்வில் இருந்து விலகிய பிறகு, அரைக்காணி நிலமாவது வாங்கி அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. என் சிறு வயதில் நாங்கள் வைத்திருந்த அரைக்கால் காணி நிலத்தில் உழுவது முதல் ஆடு மாடு மேய்ப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்துள்ளேன். விவசாயக் கூலி வேலைகளுக்கும் சென்றிருக்கிறேன்’’ என்று, தனது பிஞ்சு வயது நினைவுகளை அசை போட்ட திருமாவளவன், அந்த வீட்டுத் தோட்டத்தில் நடந்தபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

அரைக்கால் காணி

“எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர். அப்பா தொல்காப்பியன், அம்மா பெரியம்மாள். எனது உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, மூன்று தம்பிகள். எங்கள் ஊரில் பெரும்பாலும் புன்செய் விவசாயம் தான். எங்கள் ஊரையொட்டிச் சின்னாறு என்னும் நதி உள்ளது. அது எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வெள்ளாற்றில் கலக்கிறது. பல்வேறு ஓடைகளின் கலவை இந்த ஆறு. இதை ஒட்டியுள்ள நிலங்கள் வளமாக இருக்கும். இந்த ஆற்றுநீரை இறைத்துப் பயிர் செய்வார்கள்.

இந்த ஆற்றுப் படுகையில் எங்களுக்கு அரைக்கால் காணி நிலம் இருந்தது. ஒரு காணி என்பது 133 சென்ட் நிலம். அரைக்கால் காணி என்பது அதில் எட்டில் ஒரு பங்கு. அதற்குப் பட்டா எல்லாம் கிடையாது. புறம்போக்கு நிலம் தான். எங்களைப் போல கிட்டத்தட்ட 10 பேருக்கு இதேயளவில் நிலம் இருந்தது.

கரம்பாகக் கிடந்த அந்த இடத்தை எங்கள் முன்னோர்கள் விவசாய நிலமாகப் பண்படுத்தி இருந்தார்கள். ஆண்டுக்கு இரண்டு போகம் பயிர் செய்வோம். நிலக்கடலை 6 மாதம், கம்பு, எள், வரகு, சோளம் ஆகியவை 3 மாதம். மீதமுள்ள 3 மாதம் பயிர் செய்ய மாட்டோம். அந்த நேரத்தில் ஆடு மாடுகளின் சாணம், ஆடு மாடு கிடை போடுதல் என, நிலத்தை அடுத்த விவசாயத்துக்குப் பண்படுத்துவோம்.

ஆட்டுக் குட்டிகளின் பாசம்

அப்போது எங்களிடம் ஐந்தாறு ஆடுகள் இருந்தன. அவைகளை மேய்ப்பது தான் எனது வேலையாகும். நான் பள்ளிக்குப் போவதற்கு முன், மாலை வேளையில் ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்து விட்டு ஓய்வெடுத்த போது மாடுகள் போட்ட சாணத்தை அள்ளி நிலத்தில் போட்டுவிட்டு வருவேன். ஆட்டுக் குட்டிகள் நம்மிடம் அவ்வளவு பாசமாக இருக்கும். நம்மைப் பார்த்ததும் பாய்ந்து ஓடி வரும். அவற்றைப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

நிலத்தில் கம்பு, சோளம் போன்றவை பயிர் செய்யும் காலத்தில், அவற்றின் கதிர்களைச் சாப்பிட, காக்கை, குருவிகள் வரும். குறிப்பாக, வெய்யில் குறைவாக இருக்கும் காலையிலும் மாலையிலும் அதிகமாக வரும். வெய்யில் அதிகமாகி விட்டால் அவ்வளவாக வராது. அதனால், விடியும் முன்பே எழுந்து சென்று பள்ளிக்குச் செல்வது வரையிலும், மாலையில் பள்ளி முடிந்து வந்து நன்கு இருட்டும் வரையிலும், காக்கை, குருவிகளை ஓட்டுவேன்.

பொழுது போக்கு

விடுமுறை நாள்களில் குருவிகளை ஓட்டி விட்டு, ஆற்றில் குளித்த ஈரத்தோடு வீட்டுக்கு ஓடி வந்து சாப்பிடும் போது 10 மணி ஆகிவிடும். அந்த ஆற்றிலுள்ள மீன்களைப் பிடிப்பது தான் எங்கள் பொழுதுபோக்காக இருக்கும். நிலத்தில் வேர்க்கடலை இருக்கும் சமயத்தில் அதற்குப் பாசனம் செய்வது, அப்பாவின் உழவுக்குப் பின்னால் நடந்து விதைகளைப் போடுவது, அம்மாவுடன் களையெடுப்பது போன்ற வேலைகளையும் செய்வேன்.

கூலி வேலை

சொந்த வேலை இல்லாத நேரத்தில், களையெடுக்க, கரும்புத்தோகை உரிக்க, கரும்பைக் கட்டுக்கட்ட என்று, அம்மாவுடன் கூலி வேலைகளுக்குச் செல்வேன். காலை 8 மணிக்குச் சென்றால் இருட்டிய பிறகு தான் வீடு திரும்ப முடியும். அப்போது ஆண்களுக்கு 3 ரூபாயும், பெண்களுக்கு 2 ரூபாயும் கூலியாகக் கொடுப்பார்கள். நான் சிறுவன் என்பதால் பெண்களுக்குக் கொடுக்கும் 2 ரூபாய் தான் எனக்குக் கூலியாகக் கிடைக்கும். அதிகாலையில் கொத்தமல்லி பறிக்கும் வேலைக்குச் செல்வேன். ஒரு மணி நேரம் வேலை செய்தால் 25 பைசா கொடுப்பார்கள்.

இப்படிக் கூலி வேலைகளுக்குப் போவது, பள்ளிக்குப் போவதை விட மகிழ்ச்சியாக இருக்கும். இதைப்போல் வேர்க்கடலைச் செடிகளைப் பிடுங்கும் போது, ஒன்றிரண்டு கடலைகள் மண்ணுக்குள்ளேயே நின்றுவிடும். இதைத் தப்புக்கடலை என்பார்கள். இதை அறுவடை முடிந்த பின்னர் வெட்டியெடுப்போம். எடுப்பதில் பாதி அந்தத் நிலத்துக்காரருக்கு, மீதி நமக்கு.

அதைப்போல நிறைய நிலம் உள்ளவர்களிடம் அன்றாடக் கூலி முறையில் வேலை செய்யாமல், அவர்களின் விவசாய வேலைகள் முழுவதையும் செய்வது. இதைக் குத்தகை வேலை என்பார்கள். அதற்கு, அவ்வப்போது கொஞ்சம் பணமும், ஆண்டுக்கு ஒருமுறை 12 வல்லம் வரகு, சோளம் போன்ற உணவு தானியங்களைக் கொடுப்பார்கள். ஒரு வல்லம் என்பது 3 படி.

அப்பாவிடம் பெற்ற அடி

ஒருமுறை வரப்புக்கட்டு வேலைக்குப் போனேன். ஒருமணி நேரம் வேலை செய்வதற்குள், கை கொப்பளித்துப் புண்ணாகி விட்டது. மாலை வரை வேலை செய்தால் தான் கூலி கிடைக்கும். அப்போது என்னுடன் இருந்தவர்கள், மண்வெட்டியை இறுக்கிப் பிடிக்காமல் லேசாகப் பிடித்து வேலை செய்தால் கை கொப்பாளித்துப் புண்ணாகாது என்றார்கள். அவர்கள் சொன்னபடியே செய்தேன். ஆனாலும், அதற்கு மேல் முடியாமல் வந்து விட்டேன்.

ஒருமுறை என் அப்பா என்னிடம் ஏரைப் பிடித்து உழும்படிச் சொன்னார். நான் மேழியை அழுத்திப் பிடிக்காததால், கலப்பைக் கொழு மாட்டின் பின்னங்காலில் குத்தி இரத்தம் வந்து விட்டது. இதைப் பார்த்த எனது அப்பா, உழுவதற்குக் கூடத் தெரியவில்லை என்று, மாட்டை அடிக்கும் தார்க்குச்சியால் அடித்து விட்டார். அதிலிருந்து உழுவதென்றாலே பயம் தான்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரைதான் ஊரில் இருந்தேன். அதன் பிறகு திட்டக்குடியில் தங்கிப் படித்தேன். பியுசியை விருத்தாச்சலத்தில் தங்கிப் படித்தேன். அப்போது விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டுக்கு வருவேன். அப்போதும் கூட எங்கள் வேலைகளைச் செய்வதுடன், கூலி வேலைக்கும்  செல்வேன்.

தாலிக் கடன்

என் அக்காவின் திருமணத்துக்காகவும், என் அப்பா தன் திருமணத்துக்காக வாங்கியிருந்த தாலிக் கடனுக்காகவும் எங்கள் நிலத்தை 1978 ஆம் ஆண்டில் 80 ரூபாய்க்கு விற்று விட்டோம். அதிலிருந்து இன்று வரை எனக்கு ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது. அதைப்போல, எங்கள் வீடும் பட்டா இல்லாத மனை தான். 18×22 அடி குடிசை வீட்டில் தான் அம்மாவும் அப்பாவும் இருந்தனர். 2010இல் அப்பா இறந்த பிறகு அந்தக் குடிசை வீடு மழையால் சேதமாகி விட்டது. அதனால், எனது உறவினர் ஒருவரிடம் 25 சென்ட் இடத்தை வாங்கி, அதில், இந்தியன் வங்கியில் வீட்டுக்கடனைப் பெற்று, காரை வீடு ஒன்றைக் கட்டி வருகிறோம்.

நில தானம்

எனக்குச் சொந்தமாகக் கையகல நிலம் கூட இல்லை என்றாலும், எங்கள் ஊர்ப் பள்ளிக்கு நான்கரை எக்கர், மருத்துவமனைக்கு இரண்டரை எக்கர் நிலத்தை எனது சொந்தச் செலவில் வாங்கித் தானமாகக் கொடுத்திருக்கிறேன்.

விவசாய ஆசை

விவசாயம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், இந்த அரசியல் வாழ்க்கையில் என்னால் ஓரிடத்தில் நிலையாகத் தங்க முடியவில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரைக்காணி நிலமாவது வாங்கி, அதில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பது எனது கனவு.

விவசாயம் HP Copy 2

விதைப்பது, அது முளைப்பதைப் பார்ப்பது, பூப்பதை இரசிப்பது, காய்ப்பதைக் கையால் தொட்டு மகிழ்வது, அறுவடை செய்வது என, எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நமது மண்ணில் நாமே உழைத்து விளைய வைத்த உணவுப் பொருளைப் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். மேலும், விவசாயம் செய்பவருக்கு எந்த உடற்பயிற்சியும் தேவையில்லை.

இன்று எனது அம்மா, தம்பிகள் எல்லோருமே ஊரில் தான் இருக்கிறார்கள். ஆனால் சொந்த நிலம் இல்லை. இன்று நீரில்லாமல் விவசாயம் நலிந்து வருகிறது. விவசாய நிலமெல்லாம் சீமைக்கருவேல மரங்களால் நிறைந்து விட்டன’’ என்று, தனது இளவயது வாழ்க்கையை அசைபோட்டு முடித்த திருமாவளவன், அங்கிருந்த முருங்கைக் கீரையை மதிய உணவுக்காகப் பறித்துக் கொடுத்தார்.

தொடர்ந்து, இன்றைய விவசாயத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கவனத்தை அவரிடம் திருப்பிய போது, “ஆர்ப்பாட்டம் ஒன்று இருக்கிறது. காரில் பேசிக்கொண்டே போகலாம்’’ என்று, நம்மையும் ஏற்றிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.

இன்றைய விவசாய நிலை

“விவசாயம், உலகம் முழுவதுக்கும் தேவையான உணவு உற்பத்தி முறை; மனிதனின் வாழ்வாதாரம். விவசாயம் இல்லையென்றால், வேறு எந்த உற்பத்தியும் சிறப்பாக இருக்காது. ஆகவே, விவசாயத்தை மதித்து மேம்படுத்தும் பொறுப்பு, அரசுக்கும் குடிமக்கள் அனைவருக்கும் இருக்கிறது. இன்றைய கல்விமுறை அரசு அதிகாரிகளாக, ஊழியர்களாக ஆக வேண்டும் அல்லது தொழில் செய்ய வேண்டும், இலட்சம் இலட்சமாகச் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது.

அதாவது படிக்காதவர்கள் விவசாயம் செய்ய வேண்டும், படித்தவர்கள் அரசு வேலை செய்ய வேண்டும் என்னும் எண்ணம், மக்களிடம் தலைதூக்கி இருக்கிறது. கல்வி கற்பது விவசாயத்தில் இருந்து மனிதர்களைப் பிரித்து வைப்பதற்கல்ல. வேற்றுமை இல்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டு, இந்த மண்ணைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

விளைநிலச் சட்டம்

விளைநிலங்களைத் தரிசாக ஆக்கி, ஆலைகளாக மாற்றுவது, பெரிய நிறுவனங்களின் சொத்தாக மாற்றுவது, வீட்டடி மனைகளாக மாற்றுவது, அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம். வீட்டுமனையும், தொழிற்கூடமும் தேவை தான். ஆனால் அவை விளைநிலங்களைப் பாதிப்பதாக அமையவே கூடாது. காடுகளைக் காப்பதற்காக, இத்தனை சதவீதக் காடுகள் இருக்க வேண்டும் என்று சட்டம் இருப்பதைப் போல, இத்தனை சதவீதம் விவசாய நிலங்கள் இருந்தே தீர வேண்டும் என்னும் சட்டமும் அவசியம். ஒரு மாநிலத்தின் பரப்பில் 70 சதவீதம் விளைநிலங்களாக இருக்க வேண்டும் என்னும் சட்டம் தேவை.

ஆனால் இன்றைக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் குவிப்பதற்காக, விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அரசாங்கமே பெரு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது. நான்குவழிச் சாலை, எட்டுவழிச் சாலைக்கு என்று, நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள்; காடுகளை அழிக்கிறார்கள். காடுகளை அழிப்பதால் பருவமழை பொய்க்கிறது.

விழிப்புணர்வு

பருவமழை அல்லது பாசனத்தை நம்பியே விவசாயம் இருக்கிறது. நிலத்தடி நீர் இருந்தால் தான் பாசனம் செய்ய முடியும். ஏரி, குளம், நீர்த் தேக்கங்கள் மூலம் ஒரு போகம் சாகுபடி செய்யலாம். அதைப்போல, பருவமழை பெய்வதற்கு இயற்கை வளம் அவசியம். ஆனால், இதில் நமக்குப் போதிய விழிப்புணர்வே இல்லை. இந்தப் பூமியில் உள்ள இயற்கை வளங்களை எல்லாம் நாமே சூறையாடி விட்டு, நம் எதிர்காலத் தலைமுறைக்குச் சுடுகாட்டைத் தான் விட்டுவிட்டுப் போவோமோ என்னும் கவலை எழுகிறது.

இந்தப் பூமி நம் காலத்தோடு முடிந்து விடுவதல்ல. எனவே, வாழ்க்கைக்குத் தேவையான சொத்துகளைத் தனித்தனியாகச் சேர்த்து வைப்பதை விட, இந்த நிலவளம், நீர்வளம். காடுகள் வளத்தைப் பாதுகாத்து, நமது வாரிசுகளிடம் விட்டுச் செல்வதே நாம் செய்யும் மிகப்பெரிய பேறாகும்.

அனைவருக்கும் விவசாயம்

விவசாயிகளுக்காக விவசாயம் என்னும் தோற்றம் உருவாக்கப்படுகிறது. விவசாயம் ஒட்டுமொத்த மானுடச் சமூகத்துக்கானது. விவசாய வேலையைச் செய்யாதவனுக்கும் விவசாயம் மூலம் தான் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் கிடைக்க வேண்டும். அனைத்தையும் இறக்குமதி செய்து விடலாம் என்னும் பார்வை சிலரிடம் இருக்கிறது. அயல்நாடுகளிலும் விவசாயம் நடந்தால் தானே கிடைக்கும்? எனவே, விவசாயம் உலகம் முழுவதும் காக்கப்பட வேண்டும். எதிர்காலம் பாழாகி விடாமலிருக்க, பாதுகாப்பான விவசாய உற்பத்தியில், நாம் அக்கறை செலுத்த வேண்டும்’’ என்று சொல்லி முடிக்கவும், ஆர்ப்பாட்டக் களத்தை அடையவும் சரியாக இருந்தது.

“ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டுப் பேசுவோம்’’ என்று சொல்லி விட்டு அதில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் முடிந்து புறப்படும் நேரத்தில் தொண்டர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டது. அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்ட திருமாவளவன் மீண்டும் தொடர்ந்தார்.

விவசாயம் 5R9A9742 scaled e1614293600153

உள்ளூர்ச் சந்தை விவசாயம்

“ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தேவையானதை உற்பத்தி செய்து கொள்ளும், விவசாய முறையைக் கொண்டுவர வேண்டும். பெரு உற்பத்தி என்னும் பெயரில், விவசாயத்தை வணிகத் தொழிலாக மாற்றுவதோ, ஒரு முதலாளியின் கட்டுக்குள் கொண்டு வருவதோ கூடாது. ஒவ்வொரு குடிமகனும் விவசாயம் செய்ய வேண்டும் என்னும் நிலையில், அனைவருக்கும் விவசாய நிலங்கள் இருக்க வேண்டும். இதற்கேற்ப, அவர்களின் வாங்கும் தன்மை, பராமரிக்கும் தன்மையை உருவாக்க வேண்டும்.

அரசு, இலவசத் திட்டங்களில் கவனம் செலுத்தாமல், விவசாயத்தை நம்பி வாழ வேண்டும் என்னும் எண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதைப்போல் மக்கள் சந்தையை, உலகச் சந்தையாக அல்லது தேசியச் சந்தையாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உள்ளூர்ச் சந்தைக்கு ஏற்ற உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்று சொல்லிக் கொண்டிருக்க, கார் அசோக் நகர் கட்சி அலுவலகத்தை அடைந்தது.

அங்கு நூற்றுக் கணக்கில் கூடியிருந்த தொண்டர்களிடம் பேசி, அவர்களின் தேவைகளையும் கேட்டுக் கொண்டிருந்த போது, நேரம் நண்பகலைக் கடந்து கொண்டிருந்தது. அங்கேயே, வீட்டிலிருந்து வந்த கீரை, காய்கறிகள், எள், கடலை, நாட்டுக்கோழி முட்டை, சீரக நீரை மதிய உணவாகச் சாப்பிட்டுக்கொண்டே நம்மிடம் பேசினார்.

உலகச் சந்தையின் தாக்கம்

“அந்தந்த கிராம மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். நெல், வரகு, குதிரைவாலி போன்ற தானிய உற்பத்தியைப் பெருக்க, அரசாங்கம் மானியம் கொடுத்து உதவ வேண்டும். உழவர் சந்தைக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்யாமல், உலகச் சந்தைக்குத் தேவையானதை உற்பத்தி செய்தால் பணம் மட்டுமே கிடைக்கும். நல்ல உணவு கிடைக்காது. புட்டி உணவை வாங்கிச் சாப்பிட்டு, நோய்களை விலை கொடுத்து வாங்கும் நிலை தான் ஏற்படும்.

இயற்கை விவசாயம்

இப்போது இயற்கை விவசாயம் என்னும் கருத்துப் பரப்பப்படுகிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆதிகாலத்தில் இருந்து நாம் செயல்படுத்தி வந்தது தான். இப்போது புதிய சொல்லைப் பயன்படுத்திப் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். முன்பு ஒவ்வொரு வீட்டிலும் எருச் சேமிப்பு இருந்தது. இதை நிலத்தில் இட்டு விவசாயம் செய்தார்கள். இந்த எருச் சேமிப்பை மீண்டும் கொண்டு வந்து நமது ஆதி விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போது இந்த இயற்கை விவசாயம் முதலாளித்துவத்தை நோக்கி நகர்கிறது. இதனால், ஒருசிலர் முதலாளிகளாக மாறுகிறார்கள்.

இயற்கை எரு, இயற்கை உரம், மண்புழு உரம் என்று அதிலும் சில முதலாளிகளின் தலையீடு இருக்கிறது. விவசாயத்தையே முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்தும் முயற்சியும் நடக்கிறது. அதனால், குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் பயனடைய முடியும். நிலமற்றவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகவும், முதலாளிகள் விவசாயத்தின் ஒட்டுமொத்த ஆதிக்கச் சக்தியாகவும் மாறும் நிலை உருவாகி வருகிறது. எனவே, விவசாயம் தொடர்பான பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் தேவை.

மழைநீர்ச் சேமிப்பு

மழைநீர், இயற்கை நமக்களித்த கொடை. மானுடத்தின் வாழ்வாதாரமே அதுதான். குடிநீராக மட்டுமல்ல; இந்தப் பூமியைப் பசுமையாக வைத்திருப்பதும் மழைதான். அது வீணாகக் கடலில் கலக்கக் கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால், கடலிலும் மழைநீர் கலந்தால் தான் பூமியைக் காப்பாற்ற முடியும். கடலில் கலக்கும் நீரைத் தடுப்பது, அதைத் தேக்கி வைப்பது, பூமிக்குச் செய்யும் நற்செயலாக இருக்க முடியாது. ஆனாலும், நிலத்தடி நீர்ப் பாதுகாப்புக்காக மழைநீரைச் சேமிக்க வேண்டும்.

கடலில் போதுமான நீர் இருந்தால் தான் நாம் நினைப்பதைப் போல நிலத்தடி நீரும் பாதுகாப்பாக இருக்க முடியும். கடல்நீர் குறைந்து போனால், நம் விருப்பப்படி அந்தந்தப் பகுதிகளில் நிலத்தடி நீரைச் சேமித்துப் பாதுகாக்க முடியாது. நாம் சேமிக்கும் மழைநீர், பூமிக்கடியில் குறிப்பிட்ட அடுக்குகளில் தேங்கி நின்று நமக்குப் பயன்பட வேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் அந்தந்தப் பகுதியிலேயே நீரை நாம் தக்கவைக்க விரும்பினாலும், போதியளவு நீர் கடலில் போய்ச்சேர வேண்டும்.

பூமி குளிர்வது கடலால் தான். கடலுக்குப் போகும் நீரைத் தடுத்தால், கால ஓட்டத்தில், பூமி வெப்பமாகி விடும். புவி வெப்பத்துக்கு மரங்கள் இல்லாதது மட்டுமல்ல; கடலில் நீரைச் சேரவிடாமல் செயற்கையாகத் தடுப்பதும் ஒரு காரணமாகும்.

நம்முடைய மழைநீர்ச் சேமிப்பு என்பது நமது தேவைக்கு ஏற்ப சேமிக்கக் கூடியதல்ல. அது நமது பணிகளில் ஒன்று. மழைநீரைக் குளம் குட்டையில் சேர விடாமல் நமது குடியிருப்புப் பகுதிகளிலேயே சேமிப்பதாக நினைக்கிறோம். ஆனால் அந்த நீர் நம்மைச் சுற்றியே இருக்குமென்று சொல்ல முடியாது. ஏனெனில், வற்றிய குளமிருந்தால் அந்தத் திசையை நோக்கியே நகரும். ஆகவே, குளம் குட்டை நிறைவது தான் உண்மையான மழைநீர்ச் சேமிப்பாகும். அதைப்போல, கடல் நிரம்பியிருந்தால் தான் குளமும் நிரம்பும். குளம் நிறைந்திருந்தால் தான் நாம் குடியிருக்கும் பகுதியிலும் நிலத்தடி நீர் இருக்கும்.

மணலின் அருமை

எனவே, நிலத்தடி நீருக்கு, கடல், குளம் குட்டை, ஆறுகளில் இருக்கும் நீரும் முக்கியமாகும். அதனால், ஆறுகளில், நீர்நிலைகளில் மணலை அள்ளுவதைக் குறைக்க வேண்டும். மிகப்பெரிய இயற்கைக் கொடை மணல். அது நீரை வடிகட்டிச் சேமிக்கும் மகத்தான வேலையைச் செய்கிறது; புல், புதர்களை முளைக்க விடாமல் தடுக்கிறது; நீரோட்டத்தின் இயல்பான போக்கைப் பாதுகாக்கிறது. மணலை அள்ளி விட்டால், நிலத்தடி நீர்வளத்தைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, இயற்கை வளங்களை முடிந்த வரையில் சேதப்படுத்தாமல் இருப்பது தான், அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் நற்செயல். அதைப்போல, விவசாய மேம்பாடு என்பது வெறுமனே நிலத்தைக் கீறி விதைப்பதல்ல. நவீன எந்திரம் போன்றவற்றால் மேம்படுத்த முடியாது. நீர்வளத்தைக் காத்தால் தான் விவசாயம் மேம்படும்’’ என்று, தனது கட்சிப் பணிகள் மற்றும் தொண்டர்களின் நல விசாரிப்புகளுக்கு இடையே சொல்லி முடிக்கும் போது, நள்ளிரவாகி இருந்தது.

விவசாயம் 5R9A9644 scaled e1614293738685

ஒப்பற்ற தலைவர்

அதிகாலை முதல் நள்ளிரவு வரை சுமார் 3000க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்து கொடுத்து என, நாள் முழுவதும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலேயே கழிந்ததைப் பார்த்த போது நமக்குள் பிரமிப்பு ஏற்பட்டது.

அதைப் பற்றியும் அவரிடம் கேட்க, “என்ன செய்வது தம்பி? இவர்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள். என்னைப் பார்க்க எங்கெங்கோ இருந்து தங்கள் சொற்ப வருமானத்தைச் செலவு செய்து, சால்வை, இனிப்புகள் என்று வாங்கிக் கொண்டு வருகிறார்கள்; அன்பைப் பொழிகிறார்கள். அவர்களைச் சந்திக்காமல் தட்டிக்கழிக்க முடியுமா? நான் தனி மனிதனாக வாழ்வதே அவர்களுக்காகத் தான்.

எனது சொந்த ஊருக்குச் சென்றாலும் எனது அம்மாவிடம் பத்து நிமிடம் கூடத் தனியாகப் பேச முடியாது. எவ்வளவு கமுக்கமாகச் சென்றாலும் எப்படியோ அறிந்து அங்கும் வந்து விடுவார்கள். அவர்களுக்கு மத்தியிலே தான் எனது ஒவ்வொரு விடியலும் தொடங்கி முடிகிறது. எனது அம்மா என்னிடம் பேசவே முடிவதில்லை என்று பலமுறை அழுதிருக்கிறார். எனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த எனது தாயார் இப்போது சென்னையில் தான் இருக்கிறார். ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை’’ என்று சொல்ல, நமக்கு வியப்பாக இருந்தது.

திருமாவளவனைப் போல, தூங்கும் நேரம், குளிக்கும் நேரம் தவிர, விழித்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் தொண்டர்களுடன் செலவழித்த தலைவர்கள் இந்த உலகத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போல இன்னொரு தலைவர் உருவாகவும் வாய்ப்பில்லை. அதனால் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும், திருமா என்றால் தங்கள் உயிரையே விடுகின்றனர். இந்த உண்மை அவருடன் இருந்த அந்த ஒருநாளில் நமக்குப் புரிந்தது.

இப்படி அவரை ஒரு அரசியல் தலைவராக வியந்து பார்க்க ஆயிரம் விஷயங்கள் அவருக்குள்ளும், அவரைச் சுற்றிலும் இருக்கின்றன. இருந்தபோதும், அவர், விவசாயம், அது சார்ந்த எல்லா விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவையும், நுணுக்கமான பார்வை; எண்ணம் கொண்டிருப்பதையும் பார்த்து வியந்தபடியே, அவருக்கு வணக்கமும்; வாழ்த்தும்; நன்றியும் சொல்லி விடை பெற்றோம்.


உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!