புளிய இலையின் மருத்துவக் குணங்கள்!

புளிய இலை 1280px Tamarindus indica leaves pod

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

புளியைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தினசரி உணவில் புளியம் பழம் முக்கிய இடம் பெறுகிறது. அதைப்போலப் புளிய இலையும் மருத்துவக் குணம் நிறைந்ததாகும்.

புளியங் கொழுந்தை உணவுப் பண்டமாகச் செய்து சாப்பிடுகின்றனர். புளியங் கொழுந்துடன் பருப்பைச் சேர்த்துக் கூட்டாகச் சமைப்பர். இந்தக் கொழுந்தை துவையலாகவும் அரைத்துச் சாப்பிடுவர். நாள்பட்ட பாண்டு ரோகத்தால் அவதிப்படுவோர், புளியங்கொழுந்தை அடிக்கடி சமைத்துச் சாப்பிட வேண்டும்.

சீதள உடல்வாகு உள்ளவர்கள் குளிர்ச்சி சார்ந்த நோய்களால் அவதிப்படுவர். அத்தகையோர் புளியங்கொழுந்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் வெப்பம் உண்டாகும். கண் தொடர்பான நோய்களையும் புளியங்கொழுந்து குணமாக்கும்.

புளியங்கொழுந்தைப் போல, முற்றிய புளிய இலைகளைச் சமைத்துச் சாப்பிடுவதில்லை. ருசியாகவும் இருக்காது. ஆனால் இதை மேல்பூச்சாகப் பயன்படுத்தலாம். உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு இது பயன்படுகிறது. காம்புகள் நீக்கிய இலைகளை வேப்ப எண்ணெய்யில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் காட்டினால் வீக்கம் வற்றி விடும்.

சரியான மருந்தைப் பயன்படுத்தினாலும் சில புண்கள் விரைவில் ஆறாது அல்லது அடுத்தடுத்துப் புண்கள் வந்துகொண்டே இருக்கும். இந்நிலையில், புளிய இலைகளைக் கஷாயமாகக் காய்ச்சி அதைக் கொண்டு புண்களைச் சுத்தம் செய்த பின் மருந்தைப் போட்டால் விரைவில் ஆறிவிடும். மீண்டும் வராது.

சிலருக்கு நரம்புகளில் ஏற்படும் ஒவ்வாமையால் சதைகளில் வலி ஏற்படும். இதற்குப் புளிய இலைகளை அவித்து, தாங்கும் சூட்டுடன் சதைகளில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.


புளிய இலை SATHISH G 2

முனைவர் கோ.சதீஸ்,

முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் விஜயசாந்தி,

முனைவர் பி.யோகமீனாட்சி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!