மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

இயற்கை Cauvery scaled

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

டந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றில் முக்கியமானது ஊரடங்கு. ஒட்டுமொத்த மக்களும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் வேளாண்மை, கல்வி, தொழில் உட்பட அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்பில் உள்ளன.

தினக்கூலிகளாய் வாழ்வைக் கழிக்கும் மக்களுக்கு ஒருநாள் வாழ்வே பெரும் போராட்டமாய் இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் இக்கிருமி, உருவானதாக இருந்தாலும், உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், இதனால் ஏற்படும் விளைவுகள் நாணயத்தைப் போல் இரண்டு பக்கங்களை உடையதாகும். எத்தீமையிலும் சிறு நன்மை உண்டென்பதே உண்மை என, மனித இனத்துக்கு உணர்த்துகிறது இந்தக் கொரோனா.

மீண்டும் சீராகும் பூமி

கோவிட் 19 கிருமித் தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அதன் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள், கோயில்கள், ஆலைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்கள் பயனின்றிச் செயலற்று இருப்பதால், காற்று, நீர் மற்றும் நிலத்தின் மாசு பெருமளவு குறைந்துள்ளது.

போக்குவரத்தும் ஆலைகளும் முற்றிலும் இயங்காததால் காற்றுமாசு 60-95% குறைந்துள்ளது. மார்ச், ஏப்ரலில் அதிக மாசடைந்த உலக நகரங்களில் காற்றின் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. காற்றில் கரியமிலவாயு, நைட்ரஜன் ஆக்ஸைடு, நுண் துகள்கள் மற்றும் பிற நச்சு வாயுக்களின் அளவும் குறைந்துள்ளது. ஓசோன் படலமும் மேம்பட்டுள்ளது.

நன்மையும் தீமையும்

மக்களை அச்சுறுத்தினாலும் இயற்கையை இக்கிருமி பாதுகாக்கிறது என்றும் முழுவதுமாய்க் கருத இயலாது. ஊரடங்கால் மறுசுழற்சிச் செய்ய இயலாக் கழிவுகளின் உற்பத்தி பன்மடங்கு கூடியுள்ளது. கழிவுப் பெருக்கம் குறையாத நிலையில், மறுசுழற்சி ஆலைகளும் இயங்காமல் இருப்பது கழிவுகள் தேங்க வழிவகுக்கும். ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய வேளாண் பொருள்களும் மீன்களும் வீணாகும். இதனால் நாட்டில் கழிவுகள் அதிகமாகும். இந்தக் கழிவுகள் நேரடியாக மட்குவதால் மீத்தேன் உற்பத்தியும் மிகும்.

மேலும், தேசியப் பூங்காக்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு இல்லாததால் சட்ட விரோதமாக காடுகளும் வனவிலங்குகளும் அழிக்கப்படும். அன்றாட வாழ்வையே போராட்டமாய் எதிர்கொள்ளும் உழைக்கும் மக்களுக்கு, கொரோனாவைக் காட்டிலும் அதனால் அமல்படுத்தப்படும் ஊரடங்கே பெரும் தண்டனையாய் அமைந்துள்ளது.

தற்காலிகம்

ஊரடங்கால் எத்தனையோ நன்மைகளும் தீமைகளும் ஏற்பட்டிருந்தாலும் அனைத்தும் தற்காலிகம் தான். ஊரடங்கு நீக்கப்படும் நாள் முதல் மனித இனம் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால், இயல்பு நிலைக்கு மாறியிருந்த பூமி மீண்டும் புயல் வேகத்தில் பாதிப்படையும். தூய்மை பெற்ற நீர், நிலம், காற்று ஆகிய அனைத்தும் மீண்டும் மாசடையும். அடுத்த பேரிடரை நோக்கி இவ்வுலகம் உழைக்கத் தொடங்கும். சீரடைந்த இயற்கையைக் காக்காவிடினும், சூழல்மாசைக் கூட்டாமலாவது இருக்க வேண்டும். நம்மைக் காத்துக்கொள்ள இயற்கை அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கையின் அழிவையும் பேரிடராய்க் கருத வேண்டும்.

செய்ய வேண்டியவை

கொரோனா கிருமித் தொற்றைக் கையாண்ட வழிமுறைகளைத் தொடர்ந்தாலே இதற்கும் தீர்வு காண இயலும். முதலில், ஏற்படும் ஆபத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். கொரோனாவின் தீவிரத்தை ஒரு முக்கியச் சிக்கலாகக் கருதுவதைப் போல, சூழல் மாசையும் கருத வேண்டும். அடுத்து, மக்கள் புரியும் வகையில், அதைப் பற்றிய செய்திகளையும் விழிப்புணர்வையும் மீண்டும் மீண்டும் அரசு ஏற்படுத்த வேண்டும். சூழல் மாசால் உலகின் தற்போதைய நிலையை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

அடுத்து, கடினமான முடிவாயினும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். அரசு விதிகளின்படி அனைத்து ஆலைகளும் இயங்க வேண்டும். மற்ற நிறுவனங்களையும் சேர்த்துக் கொண்டு கூட்டுமுயற்சியில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு, இச்செயலை நேர்மையாகவும் திறம்படவும் கையாள வேண்டும்.

புதிய விதி

மனிதனின் அறிவு வளர்ச்சியைக் கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரி திணரடிக்கிறது. காலம், மனிதனின் கர்வத்தை அடக்க, ஏதேதோ பெயர்களில் எத்தனையோ ஆயுதங்களைக் கையில் எடுக்கிறது. இவற்றில் இருந்து மீண்டு மீண்டு வந்தாலும், ஒவ்வொரு எழுச்சியிலும் தகுந்த தீர்வுடனும் திருந்திய உணர்வுடனும் எழுவதே மனித இனத்துக்குச் சிறப்பு.

கொரோனாவிலிருந்து மீளும் நம் தேசம், பொருளாதார வளர்ச்சிப் பணியின் போது இயற்கையின் தாங்கு திறனை உணர்ந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலைக் காக்கும் விளிம்பில் இருக்கும் நாம், எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் அதன் நன்மையைக் கருத்தில் கொண்டால், நம் நாட்டில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.


இயற்கை V.KEERTHANA scaled e1612244828570

முனைவர் .கீர்த்தனா,

சா.மியூசி ரோஸ், இமயம் வேளாண்மை & தொழில் நுட்பக் கல்லூரி, 

துறையூர்-621206, திருச்சி மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!