பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

பொது விநியோக 12345

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

1960களின் மத்தியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது இதனால், பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1997 ஆம் ஆண்டு முதல் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அவசியப் பொருள்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் நோக்கம், ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு தானியங்களை வழங்கி, அவர்களின் சத்தியல் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கொடுப்பதாகும்.

இத்திட்டம் இரண்டு விதமான மானியக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. ஒன்று, வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்கள், மற்றொன்று வறுமைக்  கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்கள். பொது விநியோகத் திட்டம் மேலும்  திறம்படச் செயல்பட ஏதுவாக, அரசாங்கம் அன்னயோஜனா திட்டத்தை 2000 டிசம்பரில் தொடங்கியது. இதன் நோக்கம், வறிய மக்களுக்கு கிலோ 2 ரூபாயில் கோதுமை, 3 ரூபாயில் அரிசியை மாதத்துக்கு 25 கிலோ வழங்குவதாகும்.

தகுதியானவர்கள்

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், குறு விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர்கள், குடிசைவாசிகள், தினக்கூலிகள், ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளர்கள், செருப்புத் தைப்பவர்கள், ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், 60 வயதை அடைந்தவர்கள் மற்றும் வாழ்வாதாரம் இல்லாதவர்கள், அனைத்துப் பழங்குடி மக்கள், அன்னயோஜனா திட்டத்தில் சேரலாம்.

இந்திய உணவுக் கழகப் பணிகள்

விவசாயிகளிடமிருந்து தானியங்களைக் குறைந்த விலையில் வாங்குதல். தானிய இருப்பைப் பேணி உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல். மாநிலங்களுக்குத் தானியங்களை ஒதுக்குதல், வழங்குதல் மற்றும் மாநிலக் கிடங்குகளுக்கு அனுப்புதல்.

பொது விநியோக முறையை வலுப்படுத்தல்

ஆதார் அடிப்படையிலான பதிவு: பொது விநியோகம் சிறப்பாகச் செயல்பட,  ஆதார் அட்டை இணைப்பு முக்கியமாகும். இதனால், உண்மையான ஏழைகளை அடையாளம் காண்பதுடன், தகுதியற்றவர்களை அகற்றவும் முடியும்.

இ-தொழில் நுட்பம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நுட்பப் பயன்பாடு: தொழில் நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்கள் மூலம் அமைப்பின் திறனை மேம்படுத்தலாம். கணக்குகளை ஏடுகளில் குறித்து வைப்பதற்குப் பதிலாகக் கணினிகளில் பதிவு செய்தால், ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதைக் குறைக்கலாம். நிர்வாகம் முழுவதும் கணினிமயமானால், வெளிச் சந்தையில் தானியங்களை விற்பது போன்ற பெரிய முறைகேட்டைத் தடுக்கலாம். மேலும், தானியங்கள் மாநிலக் கிடங்குகளில் இருந்து சரியான பயனாளிகளை அடைவதைக் கண்காணிக்கலாம்.

செய்ய வேண்டியவை

நகரச் சார்பை அகற்றுதல்: அதிகமான பொது விநியோகக் கடைகள், ஏழைகள் வாழ்கின்ற சேரிகளிலோ குப்பத்திலோ இல்லாமல் நகர்ப்புறங்களிலே உள்ளன. எனவே, பயனாளிகள் பல மைல்கள் பயணித்தே தங்களுக்கான தானியங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. மேலும் இந்நிலை, நகர்ப்புற நடுத்தர மக்கள் பொது விநியோகக் கடைகளில் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும். இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.

விற்பனைப் பொருள்களில் மாற்றம்: பொது விநியோகக் கடைகள் மூலம் ஏழைகளுக்குக் கோதுமை, அரிசி போன்ற தானியங்கள் கிடைக்கின்றன. எனினும் பொதுவாக இவர்கள், கேழ்வரகு, மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற சிறு தானியங்களை விரும்புகின்றனர். இவற்றில் மாவுச்சத்துடன், புரதமும் நிறைந்துள்ளது. இவை பணக்கார மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்களால் குறைவாகவே உண்ணப்படுகின்றன. இந்தத் தானியங்களைப் பொது விநியோகக் கடைகளில் விற்றால், மற்றவர்கள் இந்தக் கடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம்.

பொது விநியோக அமைப்பில் அதிகாரப் பங்கீடு

தற்போதைய பொது விநியோக அமைப்பின்படி, தானியங்களைப் பெறும் இந்திய உணவுக்கழகம், அவற்றை மாநிலங்களுக்கு வழங்குகிறது. இதனால் நிர்வாகச் செலவு கூடுகிறது. இதற்கு மாறாக, மாநிலங்களே தானியக் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டால், நிர்வாகச் செலவு குறையும்.

உணவு இரசீது

பொது விநியோக அமைப்புக்கு மாற்றாக, பணத்துக்கு நிகரான உணவு இரசீதுகளைப் பயனாளிகளுக்கு வழங்கினால் அவர்கள் அவற்றைக் கொண்டு, தங்களுக்குத் தேவையான தானியங்களை, உள்ளூர்ச் சந்தைகளில் அல்லது மளிகைக் கடைகளில் வாங்கிக்கொள்ள முடியும். இந்த இரசீதுகளைப் பெறும் விற்பனையாளர்கள் அவற்றை உள்ளூர் வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளலாம். 2009-10 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை, இம்முறையால் நிர்வாகச் செலவு குறையும் என்கிறது. மேலும், கையூட்டு மற்றும் ஊழலும் குறையும். இதனால், அனைவருக்கும் ஒரே விலையில் தரமான தானியங்கள் கிடைக்கும்.

நேரடிப் பயன் பரிமாற்ற முறை

2017 ஆம் ஆண்டு அக்டோபரில், இராஞ்சியை ஒட்டிய நாகரி நகரில், பொது விநியோக அமைப்புக்கான நேரடிப் பயன் பரிமாற்ற முறையின் மாதிரி ஆய்வை, ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்தியது. பொது விநியோகக் கடைகளில் ஒரு ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசியைக் கொடுப்பதற்குப் பதிலாக, அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில், கிலோவுக்கு ரூ.31.60 வீதம் மானியம் வரவு வைக்கப்படுகிறது. அவர்கள் கிலோவுக்கு ரூ.32.60 விலையில் அரிசியை வெளிச் சந்தைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

நேரடிப் பயன் பரிமாற்ற முறையின் நன்மைகள்

நிர்வாகச் செலவு குறையும். கடைகளுக்கு இடையே விலையில் நல்ல போட்டி ஏற்படும். ஆதார் எண்ணுடன் வங்கிக்கணக்கை இணைப்பதால் சரியான பயனாளிகளை அடையாளம் காண முடியும். இம்முறையில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு, எரிவாயு மானியத்தை விட அதிகமாக இருக்கும். 2015-16 ஆம் ஆண்டின் உணவு மானியம் 1.24 ட்ரில்லியன். எனவே, இம்முறையில் குறைந்தது 40% மானியத்தைச் சேமிக்கலாம் எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாயைச் சேமிக்கலாம். இந்தப் பணத்தை, சுகாதாரம், கல்வி போன்ற சமூக முன்னேற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.

ஏழைகள் தரமான தானியங்களை வெளிச் சந்தைகளில் வாங்க முடியும். இதனால், அவர்களின் சத்தியல் மற்றும் சமுதாயச் சமத்துவம் மேம்படும். தற்போது பொது விநியோக அமைப்பின் 40% தானியங்கள் வெளியே விற்கப்படுகின்றன. மேலும், திருட்டு, போக்குவரத்துச் செலவு, நிர்வாகச் செலவு போன்ற சிக்கல்களை, நேரடிப் பயன் பரிமாற்ற முறையின் மூலம் களையலாம்.

ஏழைகளுக்கு மானியத் தொகையை நேரடியாக வழங்கினால், தரகர்கள் மற்றும் தானியங்களைச் சேமிப்பதற்காக அரசு செய்யும் செலவுகளைக் குறைக்கலாம். இம்முறையில் ஊழலுக்கான வாய்ப்புக் குறைவாக இருப்பதால், பொது விநியோக அமைப்புக்கு ஆகும் செலவுகளும் குறையும். இதனால் நிதிப்பற்றாக்குறை குறையும். இம்முறையில் சுய உரிமையும் அவரவர் விரும்பியதை அடைவதற்குச் செலவழிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

நேரடிப் பயன் பரிமாற்ற முறையின் சிக்கல்கள்

இம்முறையில் பரிமாற்றம் செய்யப்படும் பணத்தை எடுப்பதற்கு வங்கிகளுக்குச் செல்ல வேண்டும். வங்கிகளுடன் தொலைநிலையில் உள்ள பயனாளிகள், சாலை மற்றும் வங்கி வசதியில்லாத கிராமப்புற, பழங்குடி மக்களுக்கு ஏற்றதாக இருக்காது. தற்போது, 3% இந்தியர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துவதால், மற்ற குடிமக்களின் வருமானத்தை நிர்ணயிப்பது மற்றும் தகுதியான பயனாளிகளை அடையாளம் காண்பது சவாலாக இருக்கும். பயனாளிகளின் குடும்பத் தலைவர்கள் ஆண்களாகவே உள்ளதால், பெண்களுக்கான பங்கு சரியாகச் சென்றடையும் என்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை.


பொது விநியோக THOMAS FELIX 1 e1614531407980

முனைவர் க.தாமஸ் பெலிக்ஸ்,

ஆராய்ச்சி இணைப்பாளர், மெட்ராஸ் வளர்ச்சி ஆய்வு நிறுவனம், சென்னை.

முனைவர் செ.அறிவரசன், உதவிப் பேராசிரியர், ஜெ.எஸ்.ஏ. வேளாண்மைக் கல்லூரி, திட்டக்குடி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!