மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

மண் A fine soil scaled e1595384867287

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

ண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும். மண்ணின் பௌதிகக் குணங்களாவன: மண் நயம், மண்ணின் கட்டமைப்பு, மண்ணில் நீர்  ஊடுருவும் திறன், நீர் கொள்திறன், மண்ணின் நுண்துளை இடைவெளி, மண்ணின் வெப்பநிலை, மண்ணின் காற்றோட்டம் ஆகியன.

இந்த அனைத்து பௌதிகக் குணங்களும் சீராக அமைந்தால், தாவரங்களின் வேர் வளர்ச்சி, தண்டு வளர்ச்சி ஆகியன சிறப்பாக அமைந்து, மகசூலும் அதிகமாகக் கிடைக்கும். பௌதிகக் குணங்களில் குறையேதும் இருந்தால், சரியான உத்திகள் மூலம் அதைச் சரி செய்ய வேண்டும்.

வளமான மண்

வளமான மண் என்பது பயிரின் வளர்ச்சிக்கு உகந்த நிலையான, இயற்பியல் பண்புகளைக் கொண்டதாக, நிறையச் சத்துகளின் இருப்பிடமாக, பயிரின் தேவைக்கு ஏற்ற நீர்ப்பிடிப்புத் திறன், காற்றைப் பரிமாறும் திறன் மிக்கதாக, பயிரின் வளர்ச்சி வேகத்துக்கு இணையாகச் சத்துகளை வழங்கும் இயல்புள்ளதாக இருக்க வேண்டும்.

களி, வண்டல், மணல் போன்ற மண் துகள் தொகுப்பு விகிதங்களின் அளவு மாறுவதால் தான், மண்ணின் இயற்பியல் பண்புகள் மாறுகின்றன. களிமண் அதிகமுள்ள நிலத்தில் உழுவது முதல் பாசனம் செய்வது வரையில் பல சிக்கல்கள் உள்ளன. மணற்சாரி நிலத்தில் பாய்ச்சிய நீர் முழுதும் பயிருக்குக் கிடைக்காமல் வேருக்குக் கீழே சென்று விடும்.

மண்ணின் நிறங்கள்

அங்ககச் சத்துள்ள மண், கறுப்பாக, அடர் பழுப்பாக இருக்கும். இரும்புச் சேர்வைகள் உள்ள மண், அதாவது, ஹேமடைட் இருந்தால் சிவப்பாக இருக்கும். லிமோனைட் இருந்தால் மஞ்சளாக இருக்கும். மேக்னடைட் இருந்தால் பழுப்பாக இருக்கும். சிலிக்கா, சுண்ணாம்பு, பிற உப்புகள் உள்ள மண், வெள்ளையாக இருக்கும். இரும்பு ஆக்சைடு உள்ள மண், பழுப்பு நிறத்தில் இருக்கும்.

காய்ச்சலும் பாய்ச்சலும் உள்ள மண், மழைக்காலத்தில் ஈரப்பதம் மிகும் போது, ஆக்சிஜன் ஒடுக்கம் ஏற்படும். வறட்சியில் ஆக்சிஜனேற்றம் இருக்கும். இப்படிக் காய்ச்சலும் பாய்ச்சலும் மாறி மாறி வருவதால் மண்ணடுக்குகள் வண்ணப் புள்ளிகளுடன் இருக்கும். வடிகால் திறன் குறைந்த மண், நீலம் அல்லது பச்சையாக இருக்கும். ஆகவே, மண்ணின் நிறம் மண்ணின் பண்புகளைப் பிரதிபலிக்கும். எ.கா: வெளிரிய மண்ணைக் காட்டிலும், கறுப்பு மண் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும்.

மண்ணின் நயம் (Soil Texture)

மண்ணின் நயம் என்பது மண்ணின் அடிப்படைப் பண்பாகும். இது, மணல், வண்டல் மற்றும் களியின் விகிதத்தைக் குறிக்கும். இந்த விகிதத்தை எளிதில் மாற்றயமைக்க முடியாது. மண் நயத்தை நிர்ணயிப்பதில் 2 மி.மீ.-ஐ விட அதிக விட்டமுள்ள துகள்களைக் கணக்கில் சேர்ப்பதில்லை. மண் நய அடிப்படையில், மண் வகைகளை இனம் காணலாம்.

மணல்: இதில் மணல் 70%, களி 15%க்கும் குறைவாக இருக்கும். மணலைத் தொட்டால் நறநற என்னும் உணர்வு ஏற்படும். வண்டல்: இதில் வண்டல் 80%, மணல் 12%- ஐ விடக் குறைவாக இருக்கும். களி: இதில் களி 35%க்கு அதிகமாக இருக்கும். தோமிலி: இதில், மணல், வண்டல் மற்றும் களியின் பண்புகள் சமமாக இருக்கும். இம்மண் ஊசி வடிவத்தில் இருக்கும்.

மண் நய வகைகள்: பொதுவாக மண் நயங்களில் 12 வகைகள் உள்ளன. அவையாவன: களிமண் (Clay). வண்டல் களிமண் (Silty clay). மணற் களிமண் (Sandy clay). களித்தோமிலி மண் (Clay loam). வண்டற் களித்தோமிலி மண் (Silty clay loam). மணற்களித் தோமிலி மண் (Sandy clay loam). தோமிலி மண் (Loam). வண்டற் தோமிலி மண் (Silty loam). மணற்தோமிலி மண் (Sandy loam).  தோமிலி மணல் (Loamy land).  மணல் (Sand).  வண்டல் மண் (Silt).

மண்ணின் கட்டமைப்பு

மண்ணில் உள்ள காற்று மற்றும் நீரின் அளவைத் தீர்மானிக்கும் மண் கட்டமைப்பின் அவசியம் குறித்துப் பார்க்கலாம். காற்றோட்டம்: மண்ணின் கட்டமைப்பானது காற்றோட்டத் திறனை வெகுவாகப் பாதிக்கும். தட்டையான வடிவமைப்பில் காற்றோட்டத் திறன் குறைவாக இருக்கும்.

வெப்பம்: கோள வடிவம் நல்ல காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறனை மண்ணுக்கு அளிக்கும். மேலும், மண்ணின் வெப்பத்தையும் பயிர் வளரும் சூழலுக்கு ஏற்ப பராமரிக்கும்.

பரும அடர்த்தி: தட்டு வடிவக் கட்டமைப்பில் பரும அடர்த்தி அதிகமாகவும், கோள வடிவக் கட்டமைப்பில் பரும அடர்த்திக் குறைந்து, காற்றோட்டம் அதிகமாகவும் இருக்கும்.

இளகுதிறன்: தட்டு வடிவக் கட்டமைப்பில் இளகுதிறன் அதிகமாகவும், கோள வடிவக் கட்டமைப்பில் குறைவாகவும் இருக்கும்.

மண்ணின் நிறம்: தட்டையான கட்டமைப்பில் நீர் உட்புகும் திறன் குறைவாக இருப்பதால், நீரானது தேங்கி நிற்கும். இதனால், மண்ணானது நீலம் அல்லது பச்சையாக மாறும்.

மண்ணின் திரட்சி (Soil Consistence)

களிமண் ஈரமாகும் போது குழைவான இயல்பையும், காயும் போது ஒட்டிணைவு ஆற்றலையும் பெறும். பல்வேறு ஈரப்பத நிலைகளில் நடக்கும் மண்ணொட்டல் மற்றும் அயற்பரப்பு ஒட்டல் மண்ணின் திரட்சி எனப்படும்.

மண் அடர்த்தி

மண்ணில் உள்ள துளைகள் அதிகமாகும் போது பரும அடர்த்திக் குறையும். இறுக்கமான மற்றும் மணற்பாங்கான மண் வகைகளில், மொத்தத் துளைகள் குறைவாக இருப்பதால் பரும அடர்த்தி அதிகமாக இருக்கும். களி கலந்த, அங்ககச்சத்து மிகுந்த, கோளவடிவ மண் வகைகளில் பரும அடர்த்திக் குறைவாக இருக்கும்.

மண் துளைமை

அங்கக மற்றும் தாதுகளால் நிரப்பப்படாத மண்ணின் கன அளவே துளை எனப்படும். இந்தத் துளைகளைக் காற்றோ நீரோ நிரப்பும்.

மண் காற்று

மண்ணின் துளைகள் மற்றும் வளி மண்டலத்துக்கு இடையே நடக்கும் ஆக்சிஜன் மற்றும் கரியமில வாயுவின் பரிமாற்றமே காற்றோட்டம் எனப்படும். மண்ணில் உள்ள காற்றில் வளி மண்டலத்தைப் போலவே, ஆக்சிஜன், கரியமில வாயு, நைட்ரஜன், ஆர்கான், நீராவி போன்ற வாயுக்கள் உள்ளன. மண்ணில் உள்ள கரியமிலவாயுவின் அளவானது, வளிமண்டலத்தை விட 10-10,000 மடங்கு கூடியுள்ளது. வேரின் சுவாசம் மற்றும் நுண்ணுயிரிகளின் சுவாசத்தில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவே இந்த நிலைக்குக் காரணம்.

மண் தட்ப வெப்பம்

மண்ணின் வெப்பத்துக்குச் சூரியக் கதிர்வீச்சு முதன்மை ஆதாரமாகும். இது, நிலத்தில் விழும் கோணத்தைப் பொறுத்து மண்ணின் வெப்பச் செறிவு வேறுபடும். மண் சூழலில் பல்வேறு வேதியியல் வினைகள் நடக்கின்றன. அங்ககப் பொருள் சிதைவு மற்றும் பல்வேறு நுண்ணுயிரியல் வினைகள், வெப்பத்தை வெளியேற்றி மண்ணின் வெப்ப நிலையை அதிகமாக்கும்.

மண் நீர்

மண் துளைகளில் இருக்கும் நீர் மண் நீராகும். இது மண்வாழ் உயிரிகள் மற்றும் பயிரின் வளர்ச்சியை முடிவு செய்யும் முக்கியக் காரணியாகும். ஏனைய நீர் நிலைகளில் உள்ள நீரைப் போலின்றி, மண்நீரானது பல்வேறு வடிவங்களில் தோன்றும். அவற்றில் சில வடிவங்கள் பயிருக்குக் கிட்டா நிலையிலும், சில வடிவங்கள் பயிருக்குக் கிடைக்கும் நிலையிலும் இருக்கும். மண் கரைசலானது பயிருக்குத் தேவையான சத்துகளை அளிக்கும்.

மண் நீரின் சிறப்புகள்: பயிருக்குத் தேவையான சத்துகளை மண்ணிலிருந்து கரைத்துக் கொடுக்கிறது. மண் நீர் ஓர் ஊட்டகமாகும். மண்ணின் தட்பவெப்ப நிலையைச் சீராக்கும். மண் ஆக்க வினைகளுக்கும் சிதைவு வினைகளுக்கும் மண் நீர் அவசியம். நுண்ணுயிரிகளின் வளர்சிதை நிகழ்வுகளுக்கும், வேதியியல் மற்றும் உயிரியல் வினைகளுக்கும் மண்நீர் அவசியமாகும். நீரானது வளரும் பயிரின் முதன்மையான ஆக்கக்கூறாகும்.


முனைவர் .ஜானகி,

இரா.பூர்ணியம்மாள், சோ.பிரபு, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி-625604.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!