நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், தம்மநாயக்கன்பட்டி மு.பொன்னுசாமி முன்னோடி விவசாயியாக விளங்கி வருகிறார். உழவன் நண்பன் குழுவிலும் இயங்கி வருகிறார். இவர் இப்போது நிலக்கடலையைப் பயிரிட்டு உள்ளார். அதனால், நிலக்கடலை சாகுபடியில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
“மூனு ஏக்கராவுல நெலக்கடல பயிர் இருக்குங்க. மானாவாரியில தான் பண்ணிருக்குங்க. இறவைப் பயிராவும் செய்யிறது உண்டுங்க. நெலக்கடல சாகுபடிக்கு நெலத்த நல்லா புழுதியா உழவு ஓட்டணும்ங்க. இயற்கை உரத்த நல்லா போடணும்ங்க. நம்மகிட்ட ஆடு மாடுக இருக்குறதுனால தொழுவுரத்த நெறைய போடுவோம்ங்க. அதுக்கு மேல ஏக்கராவுக்கு ஒரு மூட்டை டிஏபி, அரை மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாசை அடியுரமா போடுவோம்ங்க.
ஏக்கராவுக்கு நாற்பதுல இருந்து ஐம்பது கிலோ விதை தேவைப்படும்ங்க. இந்த விதைகள நேர்த்தி பண்ணி விதைக்கணுங்க. முதல்ல இந்த டிரைக்கோடெர்மா விரிடின்னு சொல்லுவாங்க. நம்ம விவசாய டெப்போவுல இருக்குங்க. அத வாங்கிட்டு வந்து ஒரு கிலோ விதைக்கு நாலு கிராம் கணக்குல கலந்து வச்சிறணுங்க. இதனால வெதை மூலமா வரக்கூடிய நோய்க கட்டுப்படும்ங்க.
அப்புறம் ஒருநாள் கழிச்சு ரைசோபியம்ன்னு ஒரு உயிர் உரம் இருக்குங்க. இதும் நம்ம வெவசாய டெப்போவுல போயி கேட்டா குடுப்பாங்க. அதை ஒரு பொட்டலம் எடுத்து, ஆறுன சோறு வடிகஞ்சியில கலந்துங்க, அதுகூட இந்த விதைகள நல்லா கலந்துங்க, நெழலுல அரை மணி நேரம் காத்தாட விட்டு எடுத்து வெதைக்கணுங்க. இந்த உயிர் உரம் காத்துல இருக்குற தழைச்சத்தை வாங்கி பயிருக்குக் குடுக்கும்ங்க. அதனால நமக்கு உரச்செலவு குறையும்ங்க. இப்பிடி நேர்த்தி செஞ்ச விதைகள உழவு சாலுல வெதப்போம்ங்க.
வெதைக நல்லா மொளச்சு, பதினஞ்சு இருபது நாள் பயிரா இருக்கும் போது களையெடுத்து விட்டுறணும்ங்க. அடுத்து ஒரு பதினஞ்சு இருபது நாள் கழிச்சு ரெண்டாவதா களையெடுத்து விட்டா போதும்ங்க. நெலத்துல இருக்குற ஈரத்த பொறுத்து, இந்தக் களையெடுக்குற சமயத்துல ஏக்கராவுக்கு மூனு மூட்டை ஜிப்சத்த கட்டாயம் பயிருக்குக் குடுக்கணும்ங்க.
மானாவாரி வெவசாயத்துல முறைப்படி உரங்கள குடுக்க முடியாதுங்க. ஏன்னா, மண்ணுல ஈரம் இருந்தா தான் உரத்த குடுக்க முடியும். நம்ம மழைய நம்பி இருக்குறதுனால, முன்ன பின்ன தான் உரத்தைக் குடுக்க வேண்டி இருக்குங்க.
ஜிப்சத்த போடுறதுனால நமக்கு என்ன நன்மைன்னா, நெலக்கடலைப் பருப்பு திரட்சியா கெடைக்கும்ங்க. சோடைக்காயே வராதுங்க. பொக்குப் பருப்பும் இருக்காதுங்க. அதனால வெளைச்சல் கூடும்ங்க. அதுக்குத் தான் கடலைப் பயிருக்குக் கட்டாயம் ஜிப்சத்தைக் குடுக்கணும்ன்னு சொல்றோம்ங்க.
நெலக்கடலைப் பயிருல புழுத் தொல்லை வரும்ங்க. இலைகள அப்பிடியே அரிச்சுத் தின்னுப் போடும்ங்க. கவனமா இருந்து இத கட்டுப்படுத்தணுங்க. அதுக்குத் தான் பொறிப்பயிரா கொட்டைமுத்துச் செடிகள போட்டுருக்கோம்ங்க. இந்த புழுக்கள் உருவாகக் காரணமா இருக்கக் கூடிய தாய் அந்துப் பூச்சிக, கொட்டைமுத்து இலைகள்ல தான் முட்டைகள இடும்ங்க. அதனால அந்த முட்டைகள எடுத்து அழிச்சிட்டா இந்தப் புழுக்கள் வராம தடுத்திறலாம். இல்லைன்னா மருந்தடிச்சா தான் கட்டுப்படுத்த முடியும்ங்க.
சூழ்நிலைய பொறுத்து வெளச்சல் இருக்கும்ங்க. ஏக்கருக்கு இருபத்தேழு மூட்டை கூட கெடச்சிருக்குங்க. எப்பிடி இருந்தாலும் ஏக்கருக்கு இருபது மூட்டை வெளச்சல் உறுதியா இருக்கும்ங்க’’ என்றார்.
பசுமை