கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்பார் திருவள்ளுவர். அதாவது, தினையளவில் மிகச்சிறிய உதவியே செய்யப் பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர், அதைப் பனையளவுப் பெரிய உதவியாய்க் கருதுவாராம்.பனை தமிழர்களின் அடையாளம்; விவசாயத்தின் ஆதாரம். பனையின்றித் தமிழர்கள் வாழ்க்கையில்லை. இடையில் அதன் பயனை அறியாமல், மதிகெட்டு அழித்தோம். பனை கேட்டது தரும் கற்பக மரம். அதன் தலை ஓலை முதல் அடி வேர் வரை அனைத்தும் பயன் தரும். உண்ண உணவு, இருக்க இருப்பிடம், நோய்க்கு மருந்து மற்றும் பல்வேறு பயன்கள் பனையால் கிடைக்கும்.
நிலத்தடி நீர் உயர, நிலவளம் பெருக, வான்மழை பெற்று விவசாயிகள் சிறக்க, பனை மரங்கள் பெரியளவில் பங்காற்றுகின்றன. மழை என்பது உயிர்களின் ஊற்று. மழைநீர் தான் உயிர்களின் வாழ்க்கையாதாரம். மழையில்லை என்றால், நமது நிலை எப்படியிருக்கும் என்பதைக் கடந்த காலங்களில் அனுபவித்தோம். எனவே, மழையீர்ப்பு மண்டலங்களை அனைத்து ஊர்களிலும் உருவாக்க வேண்டியது கட்டாயம்.
பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைந்த செயல் மழை. மேகம் ஒரு பகுதியை நோக்கி வருகிறது என்றால், அப்பகுதியில் இச்சமன்பாடு நிலவும். மழை வருமுன் புழுக்கமாக இருக்கும். புழுக்கம் என்பது, வெப்பமும் குளிர்ச்சியும் கலந்த நிலை. இந்த இரண்டும் சேர்ந்து வினையாற்றி மழை மேகத்தை ஈர்த்து, பூமிக்கு மழையைத் தரும். மேகம் உங்கள் பகுதிக்கு வர, மழை பொழிய, உங்கள் நிலத்திலிருந்து புழுக்கமான காற்று மேல்நோக்கிக் கிளம்ப வேண்டும். இதுதான் மேகத்தின் காதல் தூது.
புழுக்கமான காற்று எப்படி உருவாகிறது? தாவரங்கள் வெளியிடும் கரிக்காற்று குளிர்ச்சியானது, தாவரங்களின் கீழும் மேலும் வாழும் பலவகை உயிரினங்கள் வெப்பக் காற்றை வெளியிடும். தாவரங்களும் உயிரினங்களும் வெளியிடும் மூச்சுக் காற்றின் கலவை தான், ஈரம் கலந்த வெப்பக்காற்றுப் புழுக்கம் என்னும் நிலையை உருவாக்கும். புழுக்கமான நிலப்பகுதி தொடர்ந்து மழையைப் பெறும்.
மரங்கள் மட்டுமே உள்ள, வேறெந்த உயிரினமும் வாழாத காட்டில் மழைப்பொழிவு மிகக் குறைவாகத் தான் இருக்கும். பல்லுயிர்ப் பெருக்கம் நிகழ வேண்டுமெனில், நிலம் கருமையாக வேண்டும். அதாவது, நிலத்தில் உயிர்க் கரிமம் அதிகரிக்க வேண்டும். பல்லுயிர்ச் சமன்பாடு நிறைந்த காடுகளில் உள்ள மண் கறுப்பாக இருக்கும். கருமை தான் குளிர்ச்சிக்கான வண்ணம். இயற்கையின் விதிப்படி, சூழலில் உள்ள எல்லாக் கதிர்களையும் ஈர்த்துக் கொள்வது கருவண்ணம் தான்.
எந்த நிலம் இப்படிக் கறுப்பாக இருக்கிறதோ, அந்த நிலம் பல்லுயிர்களின் உறைவிடமாகும். அங்கேதான் மழைமேகம் தன்னைக் கொடுக்கும். மரம் வைத்தால் மழை வரும் என்பது உண்மையானால், தைலமரம், சீமைக்கருவேல், தென்னை, சவுக்கு போன்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் மழை ஏன் பெய்வதில்லை? எனவே, நமது நிலங்கள் மழையை ஈர்க்கும் பகுதியாக மாற வேண்டுமென்றால், அப்பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கம் நிகழ வேண்டும்.
நமது நிலத்தின் மேல் பகுதியில் மூடாக்கும், அதன் கீழ் மட்கும் இருப்பின் அதன் நடுவில் பூரான், கரையான், மண்புழுக்கள் பெருகும். இது நீண்ட காலம் நிகழ வேண்டிய செயல்முறை. இந்த மூடாக்கும் மட்கும் இருந்தால் மண்வளம் இயற்கையாக அதிகரிக்கும். மரத்தின் இப்பண்புகள் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஒத்துழைப்புத் தருபவை.
ஒரு மரம் வழங்கும் பழங்களில் பல்லாயிரம் விதைகள் இருக்கும். ஆல், அத்தி, பலா, உதயன் போன்ற மரங்களின் விதைகளில் முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். மரங்கள் பறவைகளின் வாழ்வாதாரம். பறவைகள் வனம் பெருக்க உதவும் முகவர்கள். பனை மற்றும் பால் வடியும், ஆணிவேர் ஆழமாகச் செல்லும் மரங்களை கூடுதலாக வளர்த்தால், நான்கைந்து ஆண்டுகளில் சூழலில் மாற்றம் உண்டாகி, நிலத்தடி நீர் உயரும்.
பனை பாளை விடும்போது அதிலிருந்து சில்வர் நைட்ரேட் வெளிப்படும். இந்த வினைமாற்ற நிகழ்வு மழைமேகத்தைக் குளிரச் செய்து மழையைப் பொழியச் செய்யும். நிலம் பல்லுயிர்களின் உறைவிடமானால், காற்றிலுள்ள குளிர்ச்சி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். குளிர்ச்சி வெளிப்பட்டால், வெப்பம் தணிந்து புழுக்கமாகும். மேகக் கூட்டம் புழுக்கத்தைத் தேடி வந்து மழையைப் பொழிய வைக்கும்.
பனை மரங்கள் பல்லுயிர்களைப் பெருக்கும் என்றும், மழையீர்ப்பு மண்டலத்தை உருவாக்கும் கற்பக விருட்சம் என்றும் ஏன் சொல்கிறோம்? பனையே நமது வாழ்வு காக்கும் உயிர்வேலியின் தலையாகும். பனை சூழ்ந்த நிலம் பல்லுயிர்ச் சமன்பாடு நிறைந்த வளமான பூமி. பனையின் வேர்ப்பகுதியில் எறும்புகளும், பூச்சிகளும், சிறு செடிகளும் வாழும். அப்பகுதியில் விழும் தாவர விதைகள் பனையைச் சுற்றியும் ஒட்டியும் வளரும். இயற்கையில் ஆலும் அரசும் பெரும்பாலும் பனையை ஒட்டி வளர்பவையே.
பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பலவகை ஓணான்கள், பல்லியினங்கள் வாழ்கின்றன. பனையின் கழுத்துப் பகுதியிலும், ஓலைகளிலும், பலவகையான வெளவால்களும், குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவில் நூற்றுக்கணக்கில் ஈ, கொசுக்களைப் பிடித்துச் சாப்பிட்டு விவசாயத்தைச் செழிக்கச் செய்கிறது. பனையுச்சியில் அணில்களும், எலிகளும் கூடுகளைக் கட்டி வாழ்கின்றன. உயரப் பறக்கும் பருந்துகளுக்கும், வானம்பாடிப் பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது.
பனையோலையின் நுனியில் தூக்கணாங் குருவிகள் சிறப்புமிக்க கூடுகளை அமைத்துக் கூட்டாக வாழ்கின்றன. பகலில் வயல்களில் இருக்கும் பூச்சிகளையும், கூட்டுப் புழுக்களையும் உண்டு, விவசாயத்துக்கு நன்மைகளைச் செய்கின்றன. இரவில் வாழ்க்கை நடத்தும் விலங்குகளும், பறவைகளும், பகல் பொழுதில் ஓய்வெடுக்கவும், எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவும் பனை உதவுகிறது.
ஒரு பனை 30-50 அடி உயரத்துக்கு வளருமாதலால், பல உயிரினங்களின் இருப்பிடமாக அமைந்து அவற்றின் இனவிருத்திக்கு உதவுகிறது. இவ்வகையில், பட்டுப்போன பனைமரம் கூட, பறவைகளின் சிறந்த வாழிடமாக உள்ளது. தற்போது அருகி வரும் பச்சைக் கிளிகள், பனங்காடைகள், வானம்பாடிகள், மைனாக்கள், ஆந்தைகள், வெளவால்கள், உடும்புகள், மரநாய்கள், நரிகள் போன்றவற்றின் கடைசி இருப்பிடம் பனைமரம் தான்.
உயிர்வேலித் தாவரங்கள் பனை மரங்களைச் சார்ந்து தான் செழித்து வளரும். மழைநீர்ச் சேகரிப்பில் பனையின் பங்களிப்பு பெரிதாகும். அதாவது, சிறிய மழையில் கிடைக்கும் நீரையும் தனது உச்சி மட்டைகளின் மூலம் மரத்தின் வழியே தனது வேரில் கிரகித்துக் கொள்ளும். பனையில் ஏறும் மீனைப் பார்த்து இரசித்தவர்களுக்கு இந்த இரகசியம் புரியும். ஒரு பனைமரம் குறைந்தது 10,000 லிட்டர் நீரைச் சேமித்து வைக்கும். இதன் மகத்துவம் புரிந்ததால் தான், நம் பாட்டன் பூட்டன்கள், வரப்புயர்த்தி அதில் வரிசையாகப் பனைகளை வளர்த்து உயிர்வேலியாக அமைத்தனர்.
பனையின் வேர்ப்பகுதி மூன்று அடுக்குகளைக் கொண்டது. மழைநீரை உறிஞ்சும் சிறு சிறு துளைகளைக் கொண்ட முதலடுக்கு, மழைநீரை உறிஞ்சிச் சேமிக்கும் பஞ்சைப் போன்ற இரண்டாம் அடுக்கு, மரத்துக்கு நீரையும் சத்துகளையும் அனுப்பும் மூன்றாம் அடுக்கு. இங்கே நாம் மீண்டும் மீண்டும் நினைவில் வைக்க வேண்டியது பனைமரம் அருமையான உயிர்வேலி.
வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோனுயரும் என்று, அழகாய்ப் பொருளுடன் பாடினாள் நம் ஔவைக்கிழவி. வரப்பு என்றாலே பனை சார்ந்த உயிர்வேலி. பாடலின் எதுகை மோனைக்காகவே பனையை விட்டுவிட்டுப் பாடினாள் ஔவை. வரப்பு என்றாலே பனைகள் உயர்ந்து அணிவகுத்து நிமிர்ந்து நிற்கும். பனைகள் நிமிர்ந்த பூமியில் நிலத்தடி நீர் வற்றாது.
இப்படி எண்ணற்ற சிறப்புகளுடன் நமக்கும், நம்மைச் சுற்றி வாழ்கின்ற உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் பனைமரங்களைக் காப்போம்; நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பனைமரங்கள் சூழ்ந்த உயிர்வேலியை அமைத்து, உட்புறம் மழையைத் தரும் கலப்பு மரங்களை வளர்த்து நல்வாழ்வு பெறுவோம்! மேலும் விவரங்களுக்கு: 85265 91845.
பசுமைப் போர்வை கோ.வெ.கோவிந்தராஜு,
அறங்காவலர், உலகப் பனை, வேளாண் பொருளாதாரப் பேரமைப்பு.