சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

சம்பா Paddy filed PTI compressed e1616074371217

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

மிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். தமிழ்நாட்டின் மொத்த நெல் சாகுபடிப் பரப்பில் 15.7% குறுவையிலும், 74.7% சம்பாவிலும், 9.6% நவரையிலும் நடைபெறுகிறது. இங்கே, எந்தெந்தப் பருவத்தில் எந்தெந்த இரகத்தைப் பயிரிடலாம் எனப் பார்க்கலாம்.

சொர்ணவாரி: ஏப்ரல் மேயில் தொடங்கி ஜூலை ஆகஸ்ட் வரையில், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில்,  105-110 நாள் வயதுள்ள குறுகிய கால நெல் இரகங்களைப் பயிரிடலாம்.

கார் பருவம்: மே ஜூனில் தொடங்கி, ஆகஸ்ட் செப்டம்பர் வரையில், தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 105-110 நாள் வயதுள்ள குறுகிய கால இரகங்களைப் பயிரிடலாம்.

குறுவை: ஜுன் ஜூலையில் தொடங்கி, ஆகஸ்ட் செப்டம்பர் வரையில், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில், 100-110 நாள் வயதுள்ள குறுகிய கால இரகங்களைப் பயிரிடலாம்.

முன் சம்பா: ஜூலை ஆகஸ்ட் முதல் ஜனவரி பிப்ரவரி வரையில், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தருமபுரி, கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 150-160 நாள் வயதுள்ள நீண்ட கால இரகங்களைப் பயிரிடலாம்.

சம்பா, தாளடி, பிசாணம்: செப்டம்பர் அக்டோபர் முதல் ஜனவரி பிப்ரவரி வரையில், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 125-140 நாள் வயதுள்ள மத்திய கால இரகங்களைப் பயிரிடலாம்.

பிந்திய தாளடி, பிந்திய பிசாணம்: அக்டோபர் நவம்பரில் தொடங்கி, பிப்ரவரி மார்ச்  வரையில், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 105-125 நாள் வயதுள்ள, குலைநோய் தாக்காத குறுகிய மற்றும் மத்திய கால இரகங்களைப் பயிரிடலாம்.

நவரை: நவம்பர் டிசம்பர் முதல் பிப்ரவரி மார்ச் வரையில், திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில்,    105-110 நாள் வயதுள்ள குறுகிய கால இரகங்களைப் பயிரிடலாம்.

சொர்ணவாரி, கார், குறுவை ஆகிய பருவங்களில் போதிய சூரியவொளி, வெப்பம், நல்ல பாசனம், குறைவான பூச்சிகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றால் அதிக விளைச்சல் கிடைக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 95-165 நாள் வயதில், வெவ்வேறு வயதுள்ள ஐந்து இரகங்கள் சாகுபடியில் உள்ளன. அவையாவன: 100 நாட்களில் விளையும் மிகக் குறுகிய காலம், 101-120 நாட்களில் விளையும் குறுகிய காலம், 121-140 நாட்களில் விளையும் மத்திய காலம், 141-160 நாட்களில் விளையும் நீண்ட காலம், 161 நாட்களுக்கு மேல் விளையும் மிக நீண்ட காலம். இவற்றுள் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு ஏற்ற மத்திம மற்றும் நீண்டகால இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நீண்டகால இரகங்கள்

சி.ஆர். 1009: இதற்குப் பொன்மணி, சாவித்திரி என்னும் பெயர்களும் உண்டு. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 1982 இல் வெளியிடப்பட்ட இந்த இரகம், 150-165 நாட்களில் எக்டருக்கு 6.0 டன் நெல் கிடைக்கும். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் எக்டருக்கு 27 டன் விளைச்சலைத் தந்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், சம்பாவில் பரந்தளவில் விளைகிறது. பூச்சி நோய்களை எதிர்த்து வளரும் இந்த இரகம், அதிக மழையிலும் சாயாமல் இருக்கும். குறுகிப் பருத்த நெல்லில் அரிசி வெள்ளையாக இருக்கும்.

ஏ.டி.டீ. 44: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2000 இல் வெளியிடப்பட்ட இந்த இரகம், 145-150 நாட்களில் எக்டருக்கு 6.2 டன் நெல் கிடைக்கும். ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 10 தேதி வரையான சம்பாவில், தமிழ்நாடு முழுதும் பயிரிடலாம். பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், குருத்துப்பூச்சி மற்றும் இலைப்புள்ளி நோயைத் தாங்கி வளரும். இலைச்சுருட்டுப் புழுவைச் சுமாராகத் தாங்கி வளரும். குறுகிப் பருத்த நெல்லில் அரிசி வெள்ளையாக இருக்கும். 61.5% அரிசி காணும் திறனும், சமையலின் போது 1.68% நீளும் தன்மையும் கொண்டது.

ஏ.டி.டீ. 50: நீண்டகால இரகமான இது, 2012 இல் சம்பாவுக்காக வெளியிடப்பட்டது. சற்று உயரமாக வளரும். இலைமடக்குப் புழு, தண்டுத் துளைப்பான், பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், குருத்துப்பூச்சி மற்றும் இலைப்புள்ளி நோயைத் தாங்கி வளரும். இலைச்சுருட்டுப் புழுவைச் சுமாராக எதிர்க்கும். நெல் நடுத்தரச் சன்ன இரகமாகும்.   

ஏ.டி.டீ. 51: 2017 இல் வெளியிடப்பட்ட இந்த இரகம், 155-160 நாட்களில் 6.5 டன் நெல் கிடைக்கும். பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், குருத்துப்பூச்சி மற்றும் இலைப்புள்ளி நோயைத் தாங்கி வளரும். இலைச்சுருட்டுப் புழுவைச் சுமாராக எதிர்க்கும்.

மத்திய கால இரகங்கள் (125-140 நாட்கள்)

மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 1986 இல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பிந்திய சம்பா, தாளடி மற்றும் பிசாணத்தில் பயிரிடலாம். எக்டருக்கு 5 டன் நெல் கிடைக்கும். வளர்ந்து சாயும் என்பதால், தழைச்சத்தை அளவாக இட வேண்டும். பச்சைத் தத்துப்பூச்சித் தாக்குதலைச் சுமாராகவும், துங்ரோ நோயை முழுதாகத் தாங்கி வளரும். அரிசி மிகச் சன்னமாக, வெள்ளையாக இருக்கும். இது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விரும்பும் அரிசியாகும்.

ஆடுதுறை 38: இது 1987 இல் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டது. சாயாத, 130-135 நாட்கள் வயதுள்ள இந்த இரகம் எக்டருக்கு 6 டன் நெல் கிடைக்கும். சம்பா, தாளடி மற்றும் பிசாணத்தில் தமிழ்நாடு முழுதும் பயிரிடலாம். துங்ரோ, குலைநோய், புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப் புழு மற்றும் ஆனைக்கொம்பனைத் தாங்கி வளரும். ஆனால், பாக்டீரிய இலைக்கருகல் நோயைத் தாங்காது. நெல் நீண்ட சன்னமாக, அரிசி வெள்ளையாக இருக்கும்.

ஆடுதுறை 39: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 1988 இல் வெளியிடப்பட்ட மிகக் குட்டை மற்றும் சாயாத இரகம். 125-130 நாட்களில் எக்டருக்கு 5 டன் நெல் கிடைக்கும். தமிழ்நாட்டின் பல இடங்களில் பயிரிடப்படுகிறது. புழுதிக்காலில் நேரடியாக விதைக்கலாம். சம்பா, பின்சம்பா, தாளடி, பிந்திய தாளடி மற்றும் பிந்திய பிசாணத்தில் பயிரிடலாம். நெல் நடுத்தரமாகவும், அரிசி பொன்னியைப் போலவும் இருக்கும். பச்சையரிசி, புழுங்கல் அரிசியில் இட்லி, தோசை மற்றும் பல்வேறு உணவுகளைச் செய்யலாம்.

ஆடுதுறை 46: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2002 இல் வெளியிடப்பட்ட மத்திய கால இரகம். 135 நாளில் விளையும் இது, சம்பா, தாளடி மற்றும் பிசாணத்துக்கு ஏற்றது. எக்டருக்கு 6.1 டன் நெல் கிடைக்கும். தண்டுத் துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவைத் தாங்கி வளரும். துங்ரோ மற்றும் பழுப்பு இலைப்புள்ளி நோயைச் சுமாராகத் தாங்கி வளரும். நீண்ட சன்ன இரகம். அரிசி வெள்ளையாக இருக்கும்.

ஏ.டி.டீ. 49: ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2010 இல் வெளியிடப்பட்ட மத்திய கால இரகம். 130-135 நாட்களில் விளையும் இதை, சம்பா, தாளடி, பிசாணத்தில் பயிரிடலாம். எக்டருக்கு 6.2 டன் நெல் கிடைக்கும். இலையுறை அழுகல் மற்றும் குலை நோயைச் சுமாராகத் தாங்கி வளரும். துங்ரோ நோய், இலைச்சுருட்டுப் புழு மற்றும் செம்புள்ளி நோயை முழுதாகத் தாங்கி வளரும்.

கோ. 48: காவிரிப் பாசனப் பகுதிகளில் தாளடிக்கு ஏற்றது. பச்சைத் தத்துப்பூச்சி, தண்டுத் துளைப்பானைத் தாங்கி வளரும். குலைநோய், துங்ரோ மற்றும் இலையுறை அழுகல் நோயையும் தாங்கி வளரும். நெல் மத்திய சன்னமாக, அரிசி வெள்ளையாக இருக்கும். சமைக்கும் போது அரிசி நீளும். சோறு வெள்ளைப் பொன்னியைப் போல இருக்கும்.

கோ. 49: 2007 இல் வெளியிடப்பட்டது. குட்டையாக இருக்கும். பச்சைத் தத்துப்பூச்சி, தண்டுத் துளைப்பானைத் தாங்கி வளரும். குலைநோய், துங்ரோ  மற்றும் இலையுறை அழுகல் நோயையும் தாங்கி வளரும். நெல் நடுத்தரமாக, அரிசி வெள்ளையாக இருக்கும்.

கோ. 50: இது கோயம்புத்தூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 2010 இல் வெளியிடப்பட்ட, சாயாத உயர் விளைச்சல் இரகம். 135 நாட்களில் எக்டருக்கு 6.4 டன் நெல் கிடைக்கும். ஏ.டி.டீ. 46-ஐ விட 10.1% கூடுதல் விளைச்சலைத் தரும். குலை நோய், இலையுறை அழுகல், பாக்டீரிய இலைக்கருகல் மற்றும் தத்துப்பூச்சியை ஓரளவு தாங்கி வளரும். செப்டம்பர் விதைப்புக்கு ஏற்றது. நெல் நடுத்தரமாக, அரிசி வெள்ளையாக இருக்கும். சமையலின் போது அரிசி நீளும்.

டி.கே.எம்.13: இதன் வயது 135 நாட்கள். நன்கு தூர் கட்டும். சாயாது. நெல் நடுத்தரமாக இருக்கும். எக்டருக்கு 5.9 டன் நெல் கிடைக்கும். 75,5% அரவைத் திறனும் 71.5% முழு அரிசி காணும் திறனும் உடையது. தண்டுத் துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதலைத் தாங்கி வளரும். துங்ரோ மற்றும் பழுப்பு இலைப்புள்ளி நோயைச் சுமாராகத் தாங்கி வளரும்.

கோ. 52: இது 2017 இல் வெளியிடப்பட்டது. எக்டருக்கு 5.9 டன் விளைச்சலைத் தரவல்லது.

களர், உவரில் பயிரிட ஏற்றவை

திருச்சி 1, திருச்சி 2: இந்த இரகங்கள் திருச்சி வேளாண்மைக் கல்லூரியில் இருந்து வெளியிடப்பட்டவை. திருச்சி 1 இரகம் 1995 இல் வெளியிடப்பட்ட சாயாத இரகம். 130-140 நாட்களில் எக்டருக்கு 5.3 டன் நெல் கிடைக்கும். சம்பா மற்றும் பிந்திய சம்பாவில் தமிழ்நாட்டிலுள்ள களர், உவர் நிலங்களில் பயிரிடலாம். நெல் குட்டையாக, பருமனாகவும், அரிசி வெள்ளையாகவும் இருக்கும்.

திருச்சி 3: இது 2010 இல் வெளியிடப்பட்ட மத்திய கால இரகம். நடுத்தரக் குட்டை இரகம். சாயாது. 130-135 நாட்களில் எக்டருக்கு 5 டன் நெல் கிடைக்கும். இதன் முழு விளைச்சல் திறன் எக்டருக்கு 8.5 டன்களாகும். உவர் நிலத்தில் எக்டருக்கு 3.5 டன் விளைச்சலைத் தரும். தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு, குலைநோய் ஆகியவற்றைத் தாங்கி வளரும். சம்பா, தாளடி மற்றும் பிசாணத்தில் பயிரிடலாம். அரிசி நடுத்தரமாக, வெள்ளையாக இருக்கும்.


சம்பா BHARATHI.A e1614978922666

முனைவர் .பாரதி,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம். பட்டுக்கோட்டை-614602.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading