இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

இயற்கை விவசாய ORGANIC FARMING

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூர் அருகே உள்ளது எட்டப்பராஜபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ப.இராஜு. ஆசிரியராக இருந்தவர். பள்ளிப்படிப்புக் காலம் வரையில் ஊரிலிருந்து தன் தோட்டத்து மண்ணை மிதித்தவர், அடுத்துக் கல்லூரிப் படிப்பு, வேலை என்று, சென்னையிலேயே இருந்து விட்டவர். இப்போதும் மனைவி மக்கள் சென்னையிலேயே இருக்க, இவர் மட்டும் ஊருக்கு வந்து, தரிசாய்க் கிடந்த தன் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அண்மையில் இவரின் தோட்டத்துக்குச் சென்று விவசாய அனுபவங்களைக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

“விவசாயக் குடும்பத்தில் பிறந்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு, விவசாய ஆர்வம் இல்லாமல் இருக்காது. அதனால் எனக்கும் விவசாயத்தின் மீது, அதிலும் குறிப்பாக நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து அனுபவித்த, இரசாயனம் இல்லாத விவசாயத்தின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. ஆனால், எனக்குச் சென்னையில் ஆசிரியர் வேலை கிடைத்து விட்டதால், இந்த விவசாயத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவ்வப்போது ஊருக்கு வந்து நிலத்தைப் பார்த்து விட்டுப் போவதோடு சரி.

அதனால், என் நிலத்தில் என் சகோதரர் தான் விவசாயம் செய்து வந்தார். வறட்சி, நீர்ப் பற்றாக்குறை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை, அதிகக் கூலி போன்ற பல காரணங்களால் ஒரு கட்டத்தில் அவரால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே, என் நிலத்தைத் தரிசாகப் போட்டு விட்டார். இதனால் கவலைப்பட்ட நான், நாமே விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்துச் சென்னையில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து விட்டேன். என் குடும்பத்தினர் சென்னையில் தான் உள்ளனர். நகர வாழ்க்கையில் பழகிப் போனது, விவசாயத்தில் ஆர்வம் இல்லாதது போன்ற காரணங்களால், அவர்களுக்கு இங்கே வர விருப்பமில்லை.

இயற்கை விவசாய 0001

இந்நிலையில், தரிசாகக் கிடந்த நிலத்தை உழுது சரிப்படுத்தினேன். எங்கள் பகுதியில் நிலத்தடி நீராதாரம் குறைவு என்பதால், பாதி நிலத்தில் மானாவாரி விவசாயத்தைச் செய்யலாம் எனவும், மீதியுள்ள பாதி நிலத்தில் தோட்டக்கால் பயிர்களை சாகுபடி செய்யலாம் எனவும் முடிவெடுத்தேன். மானாவாரி நிலத்தில் கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறேன்.

தோட்டக்காலில், மிளகாய், தக்காளி, அகத்தி, துவரை, வெற்றிலைவள்ளிக் கிழங்கு போன்ற காய்கறிப் பயிர்களையும், மரமுருங்கை, லக்னோ எம்.49 கொய்யா, சிவப்புக் கொய்யா, சீத்தா, முள் சீத்தா, எலுமிச்சை, நெல்லி, பப்பாளி ஆகிய பழ மரங்கள் உள்ளன. இவற்றை அடர் நடவு முறையில் பயிர் செய்துள்ளேன். எல்லா மரங்களும் காய்ப்பு நிலையில் உள்ளன. 25 ஆண்டுகள் வரையில் நல்ல காய்ப்பைக் கொடுக்கும். இவற்றைத் தவிர வேலியோரப் பயிராக, மகாகனி, செம்மருது, பூமருது என நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன.

இன்றைய உணவுப் பொருள்கள் நஞ்சு சார்ந்ததாக இருப்பதால், வயது பேதமில்லாமல், எல்லா நோய்களும் எல்லா வயதினரையும் தாக்குகின்றன. உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்னும் நோக்கில் நாம் செயல்படுத்திய இரசாயன விவசாயத்தால், பெரும்பாலான மக்கள் நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து மீள வேண்டுமானால், நாம் நமது பழைய விவசாய முறையை மறுபடியும் கொண்டு வந்தே ஆக வேண்டும்.

இதை நோக்கி நான் என் நிலத்தில் இயற்கை விவசாயத்தைச் செய்த போது, நன்கு விளையவில்லை. நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்வதைப் போல, பக்கத்து விவசாயிகளும், உறவினர்களும் என்னை ஏளனமாகப் பார்த்தனர். எதற்கு இந்த வேண்டாத வேலையென்று அறிவுரை கூறினர். என் நிலத்தில் வேலைக்கு வருவோரும் கூட, இதெல்லாம் சரிப்பட்டு வராதய்யா என்றனர். உங்களிடம் கூலி வாங்கவே எங்களுக்கு மனசில்லை என்று என்னைப் பார்த்து வருத்தப்பட்டனர். ஆனாலும் நான் என் நிலையில் திடமாக இருந்தேன்.

இரசாயன உரங்களை என் நிலத்தில் இடவில்லை. பூச்சிக்கொல்லி மருந்துகளை என் பயிர்களில் தெளிக்கவில்லை. மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே இட்டு வந்தேன். அமுதக் கரைசலைத் தயாரித்துப் பாசனநீரில் கலந்து விட்டேன். இதனால், மண்வளம் கூடத் தொடங்கியது; இரசாயன உரத்தாக்கத்தில் இருந்து, இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக மாறத் தொடங்கியது. இதைப்போல, பயிர்களை நன்கு வளர்க்கும் மீன் அமிலம் மற்றும் பத்திலைக் கரைசல் என்னும் பூச்சிவிரட்டியைத் தயாரித்துத் தெளித்து வந்தேன். இப்போதும் இவற்றைப் பயன்படுத்தி வருகிறேன்.

இயற்கை விவசாய IMG 6119

வேம்பு, புங்கன், பப்பாளி, சீத்தா, ஊமத்தை, நொச்சி, எருக்கு, மா, கொய்யா, துளசி ஆகிய தழைகளை, இரண்டு கிலோ எடுத்து உரலில் இடித்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன், பத்து கிலோ சாணம், இருபது லிட்டர் கோமியம், அரை கிலோ மஞ்சள் தூள், அரை கிலோ இஞ்சி, அரை கிலோ பூண்டு ஆகியவற்றையும் இடித்துக் கலந்து வைத்தால், நாற்பது நாளில் பத்திலைக் கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரையில் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஐம்பது மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இப்படி, அடுத்தவர்களின் ஏச்சையும் பேச்சையும், கவலையையும் கருத்தில் கொள்ளாமல், என் நிலையில் மாறாமல் செயல்பட்டதால் இன்று என் நிலம் இயற்கை விவசாயத்துக்கான நிலமாக மாறி விட்டது. ஓரளவில் நல்ல விளைச்சலையும் தருகிறது. மீண்டும் மண்புழுக்கள் வந்து விட்டன. மேலும், என் நிலத்தில் விளையும் பொருள்கள், சத்துகள் நிறைந்த, சுவையான, உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளாக உள்ளன.

எனக்கு விவசாயம் செய்யத் தெரியவில்லை என்று சொன்னவர்கள், இப்போது என்னை வியப்புடன் பார்க்கிறார்கள். வாத்தியாரே நீங்க ஜெயிச்சுட்டீங்க என்று கூறுகிறார்கள். அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்களை விட்டு விட்டு, என் தோட்டத்துக் காய்களை அவர்களின் சமையலுக்குப் பறித்துக் கொண்டு போகிறார்கள். இயற்கை விவசாயப் பொருள்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதால், சில விவசாயிகள் இயற்கை விவசாய முறைக்கு மாற நினைக்கிறார்கள்.

தொடக்கத்தில் பெரியளவில் பொருளாதார இழப்பைச் சந்தித்தேன். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் அனைவரும் சேர்ந்து, தேனி மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்த உள்ளோம். இதன்மூலம், இயற்கை விவசாயப் பொருள்கள் நிறைந்த விற்பனை மையத்தைத் தொடங்கி நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் கூடிக்கொண்டே உள்ளது. இவர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டுமானால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. அதற்காக, உற்பத்திப் பெருக்கம் என்னும் பேரில், நஞ்சு கலந்த பொருள்களை விளையச் செய்வதால் கிடைக்கக் கூடிய நன்மை என்ன? சரியாகச் செயல்பட்டால், இயற்கை விவசாயத்திலும் நல்ல மகசூலை எடுத்து எல்லோருக்கும் உணவளிக்க முடியும்.

இங்கே ஒன்னொரு தகவலையும் நான் சொல்லியாக வேண்டும். நம் ஊருக்குப் போய் விடலாம் என அழைத்தபோது வர மறுத்த என் குடும்பத்தினர், இந்த மூன்றாண்டில் விவசாயத்தில் நான் எட்டியுள்ள வளர்ச்சியால், இப்போது இங்கே வருவதற்குத் தயாராக உள்ளனர். இது இயற்கை விவசாயம் எனக்குத் தந்த பரிசு’’ என்றார்.


துரை.சந்தோசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!