ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

Pachai Boomi | Oor Mandhai

“அண்ணே.. பல பயிர் சாகுபடியைப் பத்திச் சொல்லுண்ணே..’’

“பல பயிர்கள் சாகுபடி என்பது, இயற்கையான முறையில் நிலத்தை வளப்படுத்தும் முதல் தொழில் நுட்பமாகும்.. இந்த முறையில் சுமார் 200 நாட்களில் நிலத்தை வளமாக்க முடியும்.. இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால் வளமிழந்த நிலத்தையும் இம்முறையில் வளமாக்கலாம்..’’
“ஒரு ஏக்கர் நெலத்துல பயிர் செய்ய என்னென்னெ பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“தானிய வகைகளில் சோளம் ஒரு கிலோ, கம்பு அரைக்கிலோ, தினை கால் கிலோ, சாமை கால் கிலோ தேவை.. எண்ணெய் வித்துகளில் நிலக்கடலைப் பருப்பு 2 கிலோ, எள் அரைக்கிலோ, ஆமணக்கு 2 கிலோ, சூரியகாந்தி 2 கிலோ தேவை.. பயறு வகைகளில் உளுந்து ஒரு கிலோ, பாசிப்பயறு ஒரு கிலோ, கொண்டைக் கடலை ஒரு கிலோ, தட்டைப்பயறு ஒரு கிலோ தேவை..

பசுந்தாள் உர விதைகளில் தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, நரிப்பயறு அரைக்கிலோ, கொள்ளு ஒரு கிலோ தேவை.. நறுமணப் பயிர் விதைகளில் கொத்தமல்லி ஒரு கிலோ, கடுகு அரைக்கிலோ, வெந்தயம் கால் கிலோ, சீரகம் கால் கிலோ தேவை..’’

“சரிண்ணே.. அடுத்து என்ன செய்யணும்?..’’

இந்த விதைகளை எல்லாம் நன்றாகக் கலந்து.. விதைகள் முளைக்கும் அளவுக்கு நிலத்தில் ஈரம் இருக்கும் போது நன்கு உழுது விதைக்க வேண்டும்.. இந்த விதைகள் முளைத்து வளர்ந்து வரும் சூழலில், 50-60 நாட்களில் மடக்கி உழுதுவிட வேண்டும்.. இப்படிச் செய்யும் போது, பயிர்கள் மூலம் கிடைக்கும் சத்துகள் சீராக மண்ணுக்குக் கிடைக்கும்.. இருநூறு நாட்களில் நிலம் வளமாகி விடும்..’’

“நெலம் வளமாகும்ன்னா எப்பிடிண்ணே?..’’

“நிலத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மை கூடும்.. வளர்சிதை மாற்றங்கள் இயற்கையாக நடக்கும்.. இதனால் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகும்.. நிலம் பொலபொலப்பாக மாறும்.. எனவே, பயிர்கள் நன்கு வேர்விட்டு வளர்ந்து விளைச்சலைப் பெருக்கும்.. இயற்கை விவசாயத்தில் நிலத்தை வளப்படுத்த உதவும் முக்கியமான நுட்பம் இதுவாகும்..’’

“ரொம்ப நன்றிண்ணே..’’


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!