பாமரனின் கண்ணீர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்!

சூரியன் agri

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. இது தான் விவசாயிகளின் நிலை. மழையின்றி வறட்சியால் வாடுகிறார்கள் அல்லது விலையின்றித் தவித்துத் தத்தளிக்கிறார்கள். விளைந்த பொருளைக் காசாக்க அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது போல் உள்ளது. விவசாயிகளைச் சுரண்டுவதில் வணிகர்களை விட, அரசு ஊழியர்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது.

வணிகர்களின், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளைக் காப்பது தான், அரசாங்கம் நடத்தும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களின் நோக்கம். ஆனால், அங்குள்ள அரசு ஊழியர்களும் ஏழை விவசாயிகளை, அட்டையாக உறிஞ்சுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. பலகோடி மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை, ஊதியம் என்னும் பேரில் மாதந்தோறும், சில இலட்சம் அரசு ஊழியர்களுக்கு, கைநிறைய அல்ல, பைநிறைய அள்ளிக் கொடுக்கிறது அரசு. இதுக்கு மேலுமா ஆசை?

தக்காளி விவசாயி கழிவுத் தக்காளியைத் தான் சாப்பிடுகிறான். கத்தரிக்காய் விவசாயி, புழுக்கள் கடித்த, முற்றிப் போன கத்தரிக்காயைத் தான் சாப்பிடுகிறான். வெண்டை விவசாயி புழுக்கள் குடைந்த காயைத் தான் சாப்பிடுகிறான். நெல் விவசாயி, விளைந்து விளையாமல் போகும் கருக்காய் நெல்லைத் தான் சாப்பிடுகிறான். நம் தோட்டத்தில் விளைந்தது தானே என்று, தரமான பொருளை அவன் சாப்பிடுவதில்லை. தரமான பொருளைச் சந்தைக்குக் கொண்டு போகிறான். அந்தப் பொருள் கேட்பாரற்று, பாதுகாப்பற்ற நிலையில் கிடந்தால், அவன் மனம் என்ன பாடுபடும்?

கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல், மழைநீரில் அடித்துச் செல்லப்படுவதை, தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் படம் பிடித்துக் காட்டுவதைப் பார்க்கும் போது, விவசாயிகளை, அவர்களின் பொருள்களை, இந்த ஊழியர்கள் எவ்வளவு ஏளனமாக நினைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. காலத்தில் அவர்களின் பொருளை முறையாக எடுத்துக் கொண்டு அவர்களை அனுப்பத் தான் மனமில்லை என்றாலும், அதைப் பாதுகாப்பாக வைக்க, ஒரு படுதாவைக் கொடுக்கக் கூடவா மனமில்லை? இதனால் அரசுக்கு எவ்வளவு அவப்பெயர்?

விவசாயிகளைப் பாடாகப் படுத்தும் அரசு ஊழியர்கள், ஒரே ஒருநாள் மட்டும் அவனுடன் இருந்து பாருங்கள். அவனும் அவன் குடும்பமும் உண்ணும் உணவு, உடுத்தும் துணி, உழைக்கும் உழைப்பு, எடுக்கும் ஓய்வு, தூக்கம், மொத்தத்தில் அவனின் வாழ்க்கையை ஒருநாள் மட்டும் இருந்து பாருங்கள். அப்போது தெரியும், ஒரு பொருளை உற்பத்தி செய்து முடிக்க அவன் படும் பாடு. திருந்துங்கள், அந்தப் பாமரனின் கண்ணீர் ஆயிரம் சூரியன்களின் சூட்டுக்குச் சமம்.


ஆசிரியர்

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!