நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

நீலகிரி HEADING PIC 6 scaled

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018

லகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த ஊட்டி. ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள புளூ மவுண்ட்டைன் எனப்படும் நீலகிரி மலை, ஊட்டிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. உடலை வருடும் இதமான தென்றல், பச்சைப்பசேலென நீண்டு, நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் அரிய வகை மரங்கள், அவற்றைச் சுற்றியும் பற்றியும் படர்ந்துள்ள செடி, கொடிகள் எல்லாம்  ஊட்டியின் அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கையின் பிள்ளைகள். இப்படி, இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சைக் கம்பளப் புல்வெளிகள், வனங்கள், தேயிலைத் தோட்டங்கள், அருவிகள், அணைகள் என இயற்கை அழகைத் தன்னகத்தே நிறைத்துக்கொண்ட இடம் தான் ஊட்டி.

உருவான வரலாறு

1819 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஆங்கிலேயரான ஜான் சல்லிவன். விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என யோசித்தவருக்கு, மலை உச்சியிலுள்ள அந்த இடத்தைப் பற்றிய தகவல் வருகிறது. அதன் சிறப்புகளைக் கேள்விப்பட்டதும், பழங்குடி மக்களின் உதவியோடு கரடு முரடான மலைப்பாதை வழியாக அந்த இடத்தைச் சென்றடைகிறார். கேள்விப்பட்டதைப் போலவே மனதையும் உடலையும் புத்துணர்ச்சி ஆட்கொள்ள, அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவர் தங்குவதற்கு அங்கே ஒரு வீட்டையும் கட்டி விட்டார். முதலில் ஒத்தகமந்து என அழைக்கப்பட்ட இந்த உதகமண்டலம், பின்னர் இன்னும் சுருங்கி, தற்போது ஊட்டி எனப்படுகிறது.

குறிஞ்சிப்பூ

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சிப் பூக்கள் இங்குப் பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாகக் காட்சியளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். இந்த மலையில் வளர்ந்துள்ள யூகலிப்டஸ் மரங்களில் இருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

முக்கியச் சுற்றுலா இடங்கள்

தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சிம்ஸ் பூங்கா, சிறுவர் பூங்கா, லாஷ் நீர்வீழ்ச்சி, லாம்ஸ் பாறை முனை, காட்டேரி அருவி, தொட்டபெட்டா மலைச்சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, பைகாரா நீர்வீழ்ச்சி, குதிரைப் பந்தயத் திடல், அருங்காட்சியகம், ஊட்டி மலை இரயில், காட்டெருமை பள்ளத்தாக்கு, டால்பின் மூக்கு, லெம்ப் பாறை, துரூக் கோட்டை,  எமரால்ட் ஏரி, புலி மலை, கோத்தகிரி, கேத்ரின் நீர்வீழ்ச்சி, ஸ்டீபன் தேவாலயம், மலர்க் கண்காட்சி போன்றவற்றால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

தாவரவியல் பூங்கா

ஊட்டிக்குப் பெருமை சேர்ப்பது நூற்றாண்டுப் பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா 1845 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.  சுமார் 120 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரம் தாவர இனங்கள், 350 வகை ரோஜா மலர் இனங்கள் என, உலகின் சில நாடுகளில் மட்டுமே காணப்படும் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் இங்குள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இத்தாலியன் கார்டனும் உள்ளது.

நீலகிரி 1200px Botanical Gardens Ootacamund Ooty India 03

சிம்ஸ் பூங்கா 

தமிழகத் தோட்டக்கலைத் துறையின் பராமரிப்பிலுள்ள சிம்ஸ் பூங்கா, குன்னூரின் மேல் பகுதியில் உள்ளது. அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிப் பாதைகள், அரிய வகை மூலிகைகள், செடிகள், மரங்கள் என, இயற்கையின் சுரங்கம் போல் காட்சியளிக்கும் இந்தப் பூங்காவில் கண்ணைக் கவரும் அழகிய பூக்களும் தோட்டங்களும் அமைந்துள்ளன.

சிறுவர் பூங்கா

ஏரியை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பூங்காவில் பச்சைப் பாய்போல் விரிந்து கிடக்கும் புல்வெளி; பூக்களின் போர்வையால் மூடப்பட்டது போல் ஏரியின் நீர்ப் பரப்பெங்கும் மிதக்கும் மலர்க் கூட்டம்; சற்றுத் தொலைவில் இயற்கை எழில் சூழ நிமிர்ந்து நிற்கும் புனித தோமையர் தேவாலயம்; தீப்பெட்டிகளின் வரிசையைப் போல் ஊர்ந்து செல்லும் மலை ரயில், படகுச்சவாரி, குதிரைச் சவாரி என, சிறுவர்களின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இந்த அழகிய பூங்கா.

லாஷ் நீர்வீழ்ச்சி

குன்னூரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த நீர் வீழ்ச்சி.  இந்த நீர் வீழ்ச்சியைப் பார்த்து இரசிக்கலாம். ஆனால் குளிக்க முடியாது. ஏனெனில், இந்த அருவி பாறைகள் நிறைந்தது. அடர்ந்த மலைகளும் காடுகளும் நிறைந்த இந்த லாஷ் நீர்வீழ்ச்சி இயற்கையை  இரசிப்போருக்கு மிகச் சிறந்த இடமாக விளங்குகிறது.

கல்ஹத்தி அருவி

ஊட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இருக்கும் கல்கட்டி மலைத்தொடரில் 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அற்புத அருவி இது. செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இந்த அருவியில் நீர் துள்ளிக் குதித்து வெள்ளமாய் வந்து விழுவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஊட்டி ஏரி

இந்த ஊட்டி ஏரி, ஊட்டியின் தந்தையான ஜான் சல்லிவனால் கடந்த 1824 இல் கட்டப்பட்டது. மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டிப் பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி இந்த ஏரி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது என்றாலும், தற்போது படகுப் பயணத்திற்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வசம் வந்த இந்த ஏரியை ஒட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகுத் துறையில் துடுப்புப் படகுகள், மிதி படகுகள், எந்திரப் படகுகள் மூலம் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியைச் சுற்றி ஏராளமான யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்துள்ளன. மேலும், இதன் கரையில் தான் தொடர்வண்டிப் பாதையும் செல்கிறது.

நீலகிரி N0001904696 2

அருங்காட்சியகம்

ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி மலை இரயில்

108 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நீலகிரி மலை இரயில், இன்றும் குறையாத உற்சாகத்தைத் தந்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரயில் பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும் 250 பாலங்களையும் கடக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 12 நிறுத்தங்கள். கரடு முரடான மலைப்பகுதியில் கம்பீரமாக இந்த இரயில் செல்லும் போது, மலையின் அழகைக் கண்டும், இரம்மியமான வானிலையையும் பார்த்தும் அனுபவிக்கலாம். இந்த இரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செல்ல சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகும்.

இப்படி, பார்ப்போரைப் பரவசப்படுத்தும் சுற்றுலா மையமாகவும், பணப்பயிர்களான தேயிலை, மிளகு போன்ற விளைவிக்கும் இடமாகவும் விளங்கும் இந்த ஊட்டியின் சுற்றுச்சூழலை, வேளாண்மையைக் காப்பதற்கு, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினோம்.

“ஊட்டியில் தற்போது சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும், இதை ஊட்டி முழுவதும் கொண்டு வர முழு வீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். அவர்களே விதைகள், இயற்கை உரங்களைக் கொடுத்து, சாகுபடியைக் கண்காணித்து, விளை பொருள்களை அவர்களே வாங்கி விற்பனை செய்து கொள்ளும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன் முதல் கட்டமாகக் கோத்தகிரி முழுவதும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண்மை உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இயற்கை வேளாண் பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாயிகள் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி வருகிறோம். ஏனெனில், இங்கிருந்து செல்லும் நீர் தான், கீழே ஊட்டியைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயக் கடன்களைப் பெறும் விவசாயிகளுக்கு அதில் 75 சதவீதம் பணமாகவும், 25 சதவீதத்திற்கு விதை, உரம் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம். அதிலும் இரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைக் கொடுக்கச் சொல்லி, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இது மலைப்பகுதி என்பதால் இங்கு விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதற்கான கடன்களைப் பெற முடியாது. ஆனால், தற்போது அனைத்து வங்கிகளிடமும் பேசி, விவசாயிகள் கால்நடைகளை வளர்க்க ஏதுவாகக் கடன்களை அளிக்க வலியுறுத்தியிருக்கிறோம். அப்போது தான் இங்கு நாமே பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் போன்ற இயற்கை விவசாய இடுபொருள்களைத் தயாரிக்க முடியும். மேலும், இங்குள்ள மக்களும் கால்நடைகளை வளர்க்க ஏதுவாக, கால்நடைத்துறை அமைச்சரிடம் பேசி, அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் கால்நடைகளை வழங்கக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

சுமார் 17 வகையான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்து, ஊட்டியில் உள்ள எல்லா ஊராட்சிகளிலும் தீர்மானம் போட்டு அதை அரசிதழிலும் வெளியிட்டுள்ளதன் மூலம், ஊட்டியில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழித்திருக்கிறோம். ஐம்பது மைக்ரான் அளவுக்குக் கீழுள்ள பிளாஸ்டிக் பொருள்களை விற்பதைத் தடை செய்துள்ளோம். கீழேயிருந்து மேலே கொண்டு வரும் பொருள்களைச் சோதனைச் சாவடிகளில் சோதித்து, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம். மக்கள் மத்தியிலும் பெரியளவில் விழிப்புணர்வு வந்துள்ளது.

நீலகிரி OOTY 13

ஊட்டியைப் பொறுத்தவரை இங்குள்ள மக்களை விட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம். ஊட்டியின் மொத்த மக்கள் தொகையே 7 இலட்சம் தான். ஆனால், சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை 35 இலட்சமாக உள்ளது. இது ஆண்டுக்காண்டு கூடி வருகிறது. அவர்கள் வருவது இங்குள்ள இயற்கை அழகை இரசிக்கத் தான். எனவே, அந்த இயற்கை மாசடையாமல் காக்க, சுமார் 20 பசுமைக் குழுக்களை அமைத்து, சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும், அனைத்தையும் அரசே செய்து கொடுக்கிறது என்பதைத் தாண்டி, எந்த ஒரு விஷயத்திலும் சமூகத்தின், மக்களின் பங்களிப்பும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஊரைச் சுத்தம் செய்யும் பொறுப்பை, அந்தந்த ஊர் மக்களிடமே விட்டு விடுகிறோம். இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊர் மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தூய்மை விருது வழங்கிறோம். மேலும், அந்த ஊருக்குத் தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறோம். அதனால், தற்போது பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அவர்கள் ஊர்களைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். 

கட்டுமானப் பணிகளுக்கு முன்பு உள்ளாட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளிலேயே அனுமதி வழங்கி வந்தனர். அதனால் பல இடங்களில் புதிய புதிய கட்டடங்கள் முளைத்து ஊட்டியின் மொத்த அழகும் கெட்டுப் போனதுடன், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் ஆபத்தும் இருப்பதால் கட்டுமானப் பணிகளுக்குத் தற்போது புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளோம். அதனால், தற்போது மாவட்ட அளவில் வனத்துறை உள்ளிட்ட 3 துறை அதிகாரிகளைக் கொண்டு கட்டடம் கட்டும் பகுதியில் உள்ள மண்ணை ஆய்வு செய்து அவர்கள் ஒப்புதல் அளித்தால் தான் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கிறோம்.

பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பழங்குடியினர் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அவர்களுக்குக் கால்நடைகள், கோழிகள் முதலியவற்றை வழங்குகிறோம்.

நீலகிரி coll

குப்பை மேலாண்மையைப் பொறுத்தவரை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம் பிரித்து, மட்கும் குப்பைகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுகிறோம். அதை விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மட்காத மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை, தனியார் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனம் எடுத்துக் கொள்கிறது.

வாட்ஸ் அப்பில், “உங்கள் சேவையில்” என்று 94441 66000 இந்த எண்ணில் இயங்கி வருகிறோம். பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை 24 மணி நேரமும் இந்த எண்ணில் புகைப்படங்களுடன் தெரிவிக்கலாம். அதன் பின்னர் அந்தப் பிரச்னைகளைத் தீர்த்து, அவர்களுக்கு மீண்டும் புகைப்படத்துடனேயே தகவலை அனுப்புகிறோம். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான அளவில் கழிப்பறைகளைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆக, நீலகிரியின் தனித்தன்மைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம்’’ என்றார்.

அப்போது அவரிடம், “மேட்டுப்பாளையம் வழியாகத் தான் ஊட்டிக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அவர்களில் பலர் இயற்கையை இரசிக்கும் பொருட்டு இரு சக்கர வாகனங்களில் வருகிறார்கள். இங்கு ஆண்டு முழுவதும் மழை பெய்யும் நிலை தான் உள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களில் வருவோர், மழைக்கு ஒதுங்க ஏதுவாக, ஆங்காங்கே நிழற் குடைகளை அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்குமே’’ என்ற கோரிக்கையை வைக்க, அதை உணர்ந்த அவர், “நல்ல கோரிக்கை. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று கூற, நன்றி சொல்லி விடைபெற்றோம்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!