இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

இயற்கை விவசாய Heading scaled

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018

லம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல, வேதிப்பொருள்களின் துணையால் விளையும் உணவுப் பொருள்களை உண்பதால் உண்டாகும் தீமைகளை உணர்ந்த உலக மக்கள் சமூகத்தின் பார்வை முழுவதும் இந்த இயற்கை விவசாயத்தின் மீது படிந்திருக்கிறது. வேளாண் விஞ்ஞானிகளும் இந்த விவசாய முறைகளை ஆதரித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக, மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் தலா ஒரு கிராமத்தில், இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. இதன் அடுத்த கட்டம், மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பணிகளில், மாவட்ட ஆட்சியரின் சீரிய ஆலோசனைகளின் பேரில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையறிந்த நாம் கொல்லிமலைப் பகுதியில் ஒருநாள் முகாமிட்டோம்.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய மலைத்தொடர் கொல்லிமலை. சுமார் 280 சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட இம்மலைத் தொடர் கடல் மட்டத்திலிருந்து 1,000 முதல் 1,300 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு வேட்டைக்காரன் மலையென்னும் பெயரும் உண்டு. கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்ட கொல்லிமலை வருவாய் வட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு, ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகிய ஊராட்சிகள், கொல்லிமலை வட்ட நிர்வாகத்தில் உள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் ஆளப்பட்ட மலை. மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை என்பதால், கொல்லிமலை, மூலிகைகளின் இராணி என அழைக்கப்படுகிறது. அதனால், நோய்கள் குணமாக வேண்டும் என வருவோரும், மூலிகைகளைத் தேடி வருவோரும் இங்கே அதிகம்.

கொல்லிமலையில் அமைந்துள்ள, கொல்லிப்பாவைக் கோயில், அப்பர் சுவாமிகளால் பாடப்பெற்ற அறப்பளீசுவரர் கோயில், அருணகிரி நாதரால் பாடப்பெற்ற முருகன் கோயில், ஆகாயகங்கை அருவி, வாடலூர்ப்பட்டி படகு இல்லம் ஆகிய இடங்கள் கண்டு மகிழத் தக்கவை. அறுநூறு அடி பள்ளத்தில் அமைந்துள்ள ஆகாயகங்கை அருவியில் குளித்தால் பாவங்கள் தீரும், நோய்கள் விலகும் என்னும் நம்பிக்கை மக்களிடம் உண்டு. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் நாள் வல்வில் ஓரி நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இப்படி, ஆன்மிகத் தலமாக, மூலிகைத் தலமாக, சுற்றுலாத் தலமாக விளங்கும் கொல்லிமலையில் வசித்து வரும் பழங்குடி மக்கள், இன்றும் அதே தொன்மை மாறாமல் இயற்கை முறை விவசாயத்தையே மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறார். என்னதான் தலைமுறைகள் மாறினாலும் அந்த மக்களின் வாழ்க்கை முறைகளும் மாறினாலும் அவர்களுடைய விவசாய முறை மட்டும் இன்னமும் மாறவில்லை என்பதை நம்முடைய பயணத்தின் போது உணர முடிந்தது. இதுகுறித்துச் சிலரிடம் பேசினோம்.

இயற்கை விவசாய Rajendran 5

கொல்லிமலை பெருங்கிராய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இராஜேந்திரன் நம்மிடம் கூறியதாவது:

“எனக்கு சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது. நாங்கள் பரம்பரை பரம்பரையாகவே இயற்கை முறை விவசாயத்தைத் தான் செய்து வருகிறோம். என்னுடைய தாத்தா காலத்தில் சாமை, தினை, கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியப் பயிர்களை எங்கள் உணவுத் தேவைக்காக மட்டுமே பயிரிட்டு வந்தனர். அதன் பின்னர் என் அப்பா காலத்தில், பொருளாதாரத் தேவை கருதி, சிறுதானியச் சாகுபடியை விட்டுவிட்டு, மரவள்ளி, எலுமிச்சை, மாதுளை, அன்னாசி, கொய்யா, பலா, வாழை என, பழமரங்களை வளர்த்தார்கள். அதனைத் தொடர்ந்து எல்லோரும் மரவள்ளி, அன்னாசி, கொய்யாவைப் பயிரிட ஆரம்பித்தனர். அதனால், கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. மேலும், பூச்சிகளின் தாக்குதலும் அதிகமானது.

எனவே, தற்போது என் தலைமுறையில் ஏலக்காய், கிராம்பு, மிளகு, ஜாதிக்காய், பட்டை போன்ற வாசனைத் திரவியப் பயிர்களைப் பயிர் செய்ய ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள எல்லோருமே இயற்கை விவசாயம் தான் செய்து வருகிறோம். யாரும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதில்லை. கொல்லி மலையைப் பொறுத்தவரை மண் தெரியாத அளவிற்கு இலைதழைகள் மூடியிருக்கும். அதனால் மண்ணில் அங்ககச்சத்து அதிகமாக இருக்கும். இது எங்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம். எனவே, இங்குச் செயற்கை உரங்களுக்கான தேவையே ஏற்படவில்லை’’ என்றார்.

இயற்கை விவசாய Ponnusamy 6

அவரைத் தொடர்ந்து பேசிய புரளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி நம்மிடம் பேசினார்.

“தற்போது கொல்லிமலையில் பாரதப் பிரதமரின் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். பண்ணைக் கழிவுகளையும், மாட்டுச் சாணத்தையும் மட்டுமே உரங்களாகப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் மண்புழு உரம் மற்றும் பஞ்சகவ்யாவைத் தயாரிக்கப் பயிற்சி அளித்ததுடன், தோட்டக்கலைத்துறை சார்பில் 12,500 ரூபாயை மானியமாகவும் வழங்கியுள்ளனர். அதனால் தற்போது மண்புழு உரத்தையும் பஞ்சகவ்யாவையும் பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

இயற்கை விவசாய Nagalingam 2

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசினார், வாழவந்திநாடு கிராமத்தைச் சேர்ந்த உழவர் ஆர்வலர் குழுத் தலைவர் நாகலிங்கம்.

“தமிழக அரசின் வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் 15 முதல் 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகச் சேர்த்து, அந்தக் குழுவுக்கு உழவர் ஆர்வலர் குழு என்று பெயர் வைத்து, மகளிர் சுய உதவிக்குழுவைப் போல செயல்படுத்தி வருகிறோம்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே வேளாண் பொருட்களான விதைகள், நாற்றுகள், கன்றுகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் முதலியவற்றை, குழுவின் மூலம் கொள்முதல் செய்து, குழுவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இதன்மூலம் வேளாண் இடுபொருள் கொள்முதல் செலவு, நேரம் ஆகியவை மிச்சப்படுகிறது. மேலும், எங்கள் விளைபொருள்களை நாங்களே மதிப்புக்கூட்டி, இடைத்தரகர்கள் இல்லாமல் சரியான விலைக்கு விற்பனை செய்வதால் எங்களின் வருமானம் உயர்ந்து வருகிறது. இது இன்றைய விவசாயத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், இன்றைய விவசாயத்தில் உற்பத்திச் செலவைக் குறைத்தால் மட்டுமே இலாபத்தை அடைய முடியும்.

எனவே, இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, அரசு அதிகளவில் நிதியை ஒதுக்குவதுடன், எங்களைப் போன்ற மலைவாழ் விவசாயிகளுக்கு இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்கிக் கொடுத்தால் விவசாயம் இன்னும் வளரும்’’ என்றார்.

இயற்கை விவசாய Sekar 3 scaled e1616673203809

அவரைத் தொடர்ந்து, சாளக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகர் நம்மிடம் கூறியதாவது:

“நான் பஞ்சகவ்யாவைத் தயாரித்து இங்குள்ள விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறேன். பஞ்சகவ்யாவை வாழை, நெல், மிளகு போன்றவற்றில் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்’’ என்று கூறிவிட்டு, பஞ்சகவ்யா தயாரிக்கும் முறையை நம்மிடம் விளக்கினார்.

இயற்கை விவசாய Chinnayan 1

அவரைத் தொடர்ந்து கூச்சக்கிராய் கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி சின்னையன் நம்மிடம் பேசியதாவது:

“நான் மிளகைப் பயிரிட்டுள்ளேன். மிளகைப் பொறுத்தவரை மித வாடல், தீவிர வாடல் என்னும் இரு வகையான வாடல் நோய்கள் தாக்கும். 4 அல்லது 5 ஆண்டுக்குப் பிறகுதான் ஒரு மிளகுக் கொடியில் விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஒரு மிளகுக்கொடி 20 ஆண்டுகளுக்கு மேல் காய்க்கும். அப்படியிருக்கையில், இந்த வாடல் நோய் தாக்கினால் அந்த மிளகுக்கொடி முற்றிலும் அழிந்து விடும். இது, மிளகு சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே முற்றிலும் பாதிக்கும். எனவே ஒரு மிளகுக்கொடி அழிவது என்பது, நாம் வளர்க்கும் ஒரு பசுமாடு இறந்ததற்கு ஒப்பாகும். 

எனவே, தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் வழிகாட்டுதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டின் கீழ், உயிரியல் காரணி மருந்துகள் உற்பத்தி மையத்தை எங்கள் கிராமத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த உற்பத்தி மையத்தின் மூலம், டிரைகோடர்மா விரிடி என்னும் பூசண உயிரியல் காரணியை உற்பத்தி செய்கின்றோம். இதைப் பெரிய பெரிய ஆய்வுக்கூடங்களில் மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் நாங்கள் மிக எளிய தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து எங்கள் வீட்டிலேயே தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், எங்கள் கிராமத்தை முழுமையான அங்கக கிராமமாக அறிவித்து, தத்தெடுத்து அரிய பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார்’’ என்றார். 

இயற்கை விவசாய Gowthaman 2

தொடர்ந்து, கொல்லிமலை வேளாண் உதவி இயக்குநர் தி.கெளதமன் பேசியதாவது:

“கொல்லிமலையைப் பொறுத்தவரை, மலைவாழ் கிராமம் என்னும் அடிப்படையில் வேளாண்மைத் துறையின் சார்பாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பவர் டில்லர், வேளாண் உபகரணங்கள் முதலியவற்றை வழங்கி வருகிறோம்.

இங்கு, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கார் பருவம், நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை நவரைப் பருவம். இந்த இரண்டு பருவங்களிலும் சுமார் 1500 எக்டரில் ஐ.ஆர்.20, வயநாடு 2 ஆகிய இரண்டு வகை நெல் மட்டுமே சாகுபடி செய்யப்படும். இதில், சான்று பெற்ற ஐ.ஆர்.20 நெல் விதைகளை நமது வேளாண் துறையின் மூலம் 50 சதவிகித மானியத்தில் வழங்குகிறோம்.

அடுத்ததாக, வேளாண்மைத் தொழில்நுட்ப வேளாண்மை முகமைத் திட்டத்தின் மூலமாக, விவசாயிகளுக்குத் தேவையான பயிற்சிகள், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துதல், நவீனத் தொழில்நுட்பச் செயல்விளக்கம் ஆகியவற்றை அளித்து வருகிறோம். மேலும், இங்கு 4,800 எக்டர் அளவில் வாசனைத் திரவியங்களின் இராணியான மிளகு பயிரிடப்படுகிறது. எனவே, இந்த மிளகை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது பற்றிய பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். இங்கு நாட்டு மாடுகள் அதிகம். எனவே நாட்டுமாடு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரத்தயாரிப்பு, பஞ்சகவ்யா தயாரிப்புப் பற்றிய பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.

அடுத்ததாக, தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முத்தாய்ப்புத் திட்டமான கூட்டுப் பண்ணையத் திட்டம் சார்பில், ஒவ்வொரு பகுதியிலிருக்கும் சிறு குறு விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை இணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போன்று நடத்தி வருகிறோம்.

அதனைத் தொடர்ந்து மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித்திட்டம். இந்தத் திட்டத்திற்கு மாநிலத் திட்டக்குழு நிதியுதவி அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், ஏழை மலைவாழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, வேளாண்மைக்குத் தேவையான இடுபொருள்கள், உபகரணங்கள் ஆகியவற்றை முழு மானியத்தில் வழங்கி வருகிறோம்.

இனி வரும் காலங்களில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அரசு அதிகப்படியான நிதியை ஒதுக்கும் பட்சத்தில், இன்னும் பெரியளவில் அரிய பல திட்டங்களைச் செயல்படுத்துவோம்’’ என்றார்.

 


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!