சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

சாம்பிராணி Sambirani

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

பிரங்கின்சென்ஸ் என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள சாம்பிராணியாக மாறுகிறது. இதற்கு, குமஞ்சம், குங்கிலியம், மரத்து வெள்ளை, பறங்கிச் சாம்பிராணி, வெள்ளைக்கீரை எனப் பல பெயர்கள் உண்டு. சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள், இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், இராஜஸ்தான், பீகார், ஒடிஸா, தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளன.

தமிழ்நாட்டில், கல்வராயன், சேர்வராயன் மலைகளில் 500-700 மீட்டர் உயரத்தில் இம்மரங்கள் உள்ளன. உறுதியான இம்மரத்தை எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். தீக்குச்சித் தயாரிப்பிலும் பயன்படுகிறது. நவம்பர்-ஜூலை காலத்தில் இம்மரங்களில் பால் அதிகமாக வடியும். ஒரு மரம் ஓராண்டில் ஒரு கிலோ சாம்பிராணியைத் தரும். இந்த மரமிருக்கும் மண்ணும் வாசமாக இருக்கும். இந்தக் குங்கிலியப் புகையே, அக்கால அரசர்கள், செல்வந்தர்களின் வீடுகளில், வாசனைப் புகையாக, நச்சுகளைப் போக்கும் மருந்துப் புகையாக இருந்தது.

பண்டைக்காலம் முதல் வழிபாட்டில், மருத்துவத்தில் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. இது நல்ல பூச்சிக்கொல்லியாக உள்ளது. இதனாலேயே நம் முன்னோர்கள், வீட்டிலுள்ள பூச்சிகளை விரட்ட, சாம்பிராணிப் புகையைப் போடும் பழக்கத்தை, ஆன்மிகம் வழியாகக் காட்டிச் சென்றுள்ளனர்.

பழங்கால வழக்கம்

நமது பாரம்பரிய முறைகளை மூடத்தனம் என்று சொல்லி, இன்று இயற்கையை விட்டு விலகியிருக்கிறோம். தூபக்கால் என்னும் சாம்பிராணிப் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, நெருப்பை மூட்டி, அதில் சாம்பிராணிப் பொடியைத் தூவினால், வீடுகளில் தெய்விக நறுமணம் கமழும். இந்தப் புகையைப் பூஜையறையில் காட்டிய பிறகு, வீடு முழுவதும் காட்டுவார்கள். பாறையைப் போல் இறுகிய சாம்பிராணிக் கட்டி, தீயில் பட்டதும் புகையாக வெளியாவதைப் போல, நம்மை வருத்தும் துன்பங்கள் எல்லாம், இறைவன் அருளால் புகையைப் போல லேசாகி விடும் என்பது நம்பிக்கை.

சாம்பிராணிப் புகையின் நன்மைகள்

பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி செய்யும் சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். குங்கிலிய, சாம்பிராணிப் பிசினில் உள்ள வேதிப்பொருள்கள், புற்றுநோயைத் தீர்க்கும் என இப்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதைத்தான் நம் முன்னோர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் மற்றும் வீடுகளில் வாரம் இருமுறை சாம்பிராணியைப் போடச் சொன்னார்கள்.

வீடுகளில் அடிக்கடி சாம்பிராணிப் புகையைக் காட்டினால் நச்சுக்கிருமிகள் அழிந்து விடும். குங்கிலியம், சாம்பிராணியில் உள்ள வேதி அமிலங்கள், நமது நலத்தைக் காக்கும். குங்கிலியம், ஊமத்தை இலையை வெண்ணைய்யில் அரைத்துத் தடவினால், எரிச்சல் நீங்கிக் காயங்கள் விரைவில் ஆறும்.

குங்கிலியம் சிறந்த கிருமிநாசினி. இது உடைந்த எலும்புகளை இணைக்கும். சிறுநீரகப் பாதிப்புகளை நீக்கும். குங்கிலிய இலைச்சாற்றைப் பருகினால் மூட்டுவலி நீங்கும். சின்ன வெங்காயத்துடன் சாம்பிராணியை அரைத்துத் தடவினால், கட்டிகள், வீக்கங்கள் நீங்கும். சாம்பிராணியுடன் காய்ந்த வேப்பிலை, நொச்சியிலையைச் சேர்த்துப் புகையிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.

குங்கிலிய, சாம்பிராணிப் பிசின்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் கிருமிநாசினித் தயாரிப்பில் பயன்படுகின்றன. சாம்பிராணி மரம், மரப்பெட்டித் தயாரிப்பில் பயன்படுகிறது. சாம்பிராணி மரங்கள் குறைந்து வரும் நிலையில், இயற்கை ஆர்வலர்களின் இடைவிடாத முயற்சியால், தற்போது தமிழக மலைகளில் குங்கிலிய, சாம்பிராணி மரங்கள் பெருகி வருகின்றன.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

முனைவர் ந.குமாரவேலு, முனைவர் ச.த.செல்வன், கால்நடை அறிவியல்

முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!