அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

அரக்குப் பூச்சி Heading Pic 2

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018

பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப் பழுப்புநிற ஒட்டும் பொருள், வணிக அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் வார்னீஸ்களில் சேர்க்கப்படுகிறது.

இந்தியாவில் 65%, அதாவது, உலக அரக்கு உற்பத்தியில் 42,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மகாபாரதக் காவியக் காலத்திலேயே கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைத்ததை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அரக்கு உற்பத்தி நாடுகளில் இந்தியாவும் தாய்லாந்தும் முதன்மை நாடுகளாகக் கருதப்படுகின்றன.

அரக்குப் பூச்சியின் வகைப்பாடு

தொகுதி: கணுக்காலிகள். வகுப்பு: பூச்சிகள். வரிசை: லேசிஃபெரிடே. பேரினம்: கெரியா. சிற்றினம்: லேக்கா.

வாழ்க்கைச் சுழற்சி

பெண் பூச்சிகள் வெளி உறையின் உட்பகுதியில் முட்டைகளை இடுகின்றன. இப்படி இடப்பட்ட முட்டைகள் உடனே பொரிந்து இளம் உயிரிகள் ஊர்ந்து செல்கின்றன. ஒரு பெண் பூச்சி 300 முதல் 1,000 வரையிலான உயிரிகளை உருவாக்கும். அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆண் பூச்சிகளாக இருக்கும். இளம் உயிரிகள் 0.66 மி.மீ. நீளம், மென்மையான உடல், ஆழ்ந்த சிவப்பு நிறத்துடன் கூடிய கருமையான கண்கள், மூன்று இணைக் கால்களைக் கொண்டிருக்கும். இளம் உயிரிகள் தாவரங்களின் நுனிக்குச் சென்று அங்கேயே தங்கி, அந்த நுனிப் பகுதியையே உணவாக உறிஞ்சிக் கொள்கின்றன.

அங்குக் குடியேறிய ஒன்றிரண்டு நாட்களில் ரெசின் சுரப்பிகள் மூலம் ரெசினைச் சுரக்கத் தொடங்குகின்றன. இந்தச் சுரப்பிகள், வாயுறுப்புகள், மலக்குடல், சுவாசத் துளைகளைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. பூச்சியின் வளர்ச்சியைப் பொறுத்து அது உருவாக்கும் ரெசின் உறையின் தடிமன் அதிகரிக்கும். இளம் உயிரிகள் மூன்று முறை தோலுரித்த பின் முதிர்ந்த பூச்சிகளாக மாறுகின்றன.

முதல் தோலுரிப்பின் போது, இளம் ஆண் பெண் உயிரிகள் தங்களின் கண்கள், உணர் கொம்புகள் மற்றும் கால்களை இழந்து விடுகின்றன. இறுதியில் இளம் ஆண் உயிரிகள் இழந்த உறுப்புகளை மீண்டும் பெறுகின்றன. ஆனால், பெண் உயிரிகளால் இப்படிப் பெற முடிவதில்லை.

கலவிக்குப் பிறகு பெண் பூச்சிகள் வேகமாக வளர்ந்து அதிகளவில் அரக்கைச் சுரந்து அளவில் பெரிதாகின்றன. பெண் பூச்சிகள் தான் அரக்கு உற்பத்தியில் முதன்மையாக உள்ளன.

அரக்கு உற்பத்தி

ஆண்டுக்கு 75 செ.மீ. மழை பெய்யும் மிதவெப்ப மண்டலக் காடுகள் தான் அரக்கு உற்பத்திக்கு உகந்தவை. இந்தியாவில் அரக்கு உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் பயன்பட்டு வந்தாலும், பா (palas), குசம் (kusam), பெர் (berr) ஆகிய மூன்று வகை மரங்களில் தான் அரக்குக் கூடுகள் அதிகளவில் கட்டப்படுகின்றன. குசம் மரத்தில் வளரும் பூச்சிகள் குசமி (kusami) வகையென்றும், பா, பெர் மரங்களில் வளரும் பூச்சிகள் ரஞ்ஜினி (ranjeeni) என்றும் அழைக்கப்படுகின்றன. ரஞ்ஜினி வகை அரக்கு ஆழ்ந்த நிறத்தில் இருக்கும்.

தாவரங்களைக் கவாத்து செய்தல்

அரக்கு உற்பத்தி நடக்கும் மரங்களின் தேவையற்ற பகுதிகள் வெட்டப்பட்டு, வளர்நுனிப் பகுதிகளின் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படுகிறது. ஏனெனில், இளம் அரக்குப் பூச்சிகள் துளிர் இலைகளில் தான் வளர்கின்றன. 2.5 செ.மீ.க்கு மேல் அடர்த்தியுள்ள கிளைகள் வெட்டப்படுவதில்லை. 1.25 செ.மீ. அல்லது அதற்கும் குறைவான தடிமனுள்ள கிளைகள் வெட்டப்படுகின்றன.

உட்செலுத்துதல் (Inoculation)

அரக்குப் பூச்சிகளை அல்லது இளம் உயிரிகளைப் புதிய தாவரங்களுக்கு மாற்றுவதே உட்செலுத்துதல் எனப்படும். இது, இயற்கைத் தொற்று, செயற்கைத் தொற்று என இருவகைப்படும்.

இயற்கைத் தொற்று

அரக்குப் பூச்சிகளின் இளம் உயிரிகளின் எண்ணிக்கை ஒரே தாவரத்தில் அதிகமாக இருந்தால், அனைத்து இளம் உயிரிகளுக்கும் வளர் தளிர்கள் உணவாகக் கிடைக்காது. இந்நிலையில், இந்த உயிரிகள் தாமாகவே பக்கத்தில் உள்ள தாவரத்தில் தொற்றிக்கொண்டு வளர்கின்றன.

செயற்கைத் தொற்று

அரக்குப் பூச்சிகள் முட்டையிட்டதும் லார்வாக்கள் வெளிவருவதற்கு முன்பாக முட்டைகளை உடைய குச்சிகளை 15-30 செ.மீ. நீளத்துக்கு வெட்டியெடுத்து, வாழைநார் அல்லது சணலால் வேறொரு தாவரத்தின் கிளைகளில் கட்டி, வலுவான உயிரிகளாக வளர்க்கப்படுகின்றன. உட்செலுத்தியதில் இருந்து இரண்டு நாட்களில் இளம் உயிரிகள் ஊர்ந்து மேல்நோக்கிச் செல்கின்றன.

மகசூல்

அரக்குள்ள தாவரக் கிளைகள், பூச்சிகள் கூட்டமாக நகர்வதற்கு முன்பே வெட்டியெடுக்கப் படுகின்றன. பிறகு, அவற்றில் இருந்து அரக்கு பிரித்தெடுக்கப் படுகிறது. இளம் உயிரிகள் அரக்குக் கூட்டிலிருந்து வெளியேறும் முன்பே பிரித்தெடுக்கப்படும் அரக்கு அரி அரக்கு (ari lac) என்றும், இளம் உயிரிகள் கூட்டிலிருந்து வெளியேறிய பிறகு எடுக்கப்படும் அரக்கு புன்கி அரக்கு (phunki lac) என்றும் அழைக்கப்படுகின்றன.

குச்சிகளில் இருந்து கத்தியின் உதவியால் அரக்கு சீவி எடுக்கப்படுகிறது. பிறகு, இந்த அரக்கு சூரியவொளி படாமல் மறைத்து வைக்கப்படுகிறது. அடுத்து இதை அரைத்து, தேவையற்ற தூசிகளை அகற்றுவதற்காகப் பலமுறை குளிர்ந்த நீரில் கழுவப்படுகிறது. இந்நிலையில் இது விதை அரக்கு (seed lac) எனப்படுகிறது. இதன் பிறகு இந்த அரக்கு வெய்யிலில் உலர்த்தப்படுகிறது. அடுத்து இதை உருக்கி, துணியில் சலித்து வார்க்கிறார்கள். இதன் இறுதி வடிவம் ஷெல்லாக் (shellac) ஆகும்.

அரக்குப் பூச்சிகள் வளரும் தாவரத்தைப் பொறுத்தும், அரக்குப் பூச்சியின் வகை மற்றும் இதைத் தாக்கும் பூச்சிகளைப் பொறுத்தும், அரக்கின் தன்மை வேறுபடுகிறது.

அரக்குப் பூச்சிகளைத் தாக்கும் உயிரிகள்

பூச்சிகள் மட்டுமின்றி, குரங்குகள், அணில்கள், எலிகள், பறவைகள், பல்லிகள் போன்றவை அரக்குப் பூச்சிகளைத் தாக்குகின்றன. மேலும், சூழ்நிலை மாற்றங்களாலும் அரக்குப் பூச்சிகளின் வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், ஒட்டுண்ணிகள் மற்றும் கொன்று தின்னும் உயிரிகளால் அரக்கு உற்பத்தி 40% அளவுக்குப் பாதிக்கப்படுகிறது.

ஷெல்லாக்கின் பயன்கள்

தொழிற்சாலைகளில் ஷெல்லாக், பிரஞ்ச் பாலிஷ், தள பாலிஷ், கிராமோபோன் பதிவுகள், வளையல்கள், அச்சு மை, மின்கடத்தாப் பொருள்கள் மற்றும் முத்திரையிடும் மெழுகுத் தயாரிப்பில் 35% அரக்கு சேர்க்கப்படுகிறது. இத்துடன், சீன வெள்ளைக் களிமண், ரெசின், டர்பெண்டைன் போன்றவை சேர்க்கப்பட்டு மேலே கூறியுள்ள பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. மரப்பொம்மைகளுக்குப் பூசப்படும் வண்ணங்களில் இந்த ஷெல்லாக் பயன்படுகிறது. தங்க நகைகளின் பின்னுள்ள காலிப்பகுதியை நிரப்ப ஷெல்லாக் உதவுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஷெல்லாக்

மேற்பூச்சு மருந்தாகவும், உள் மருந்தாகவும் பயன்படுகிறது. வெட்டுப்பட்ட இடத்தில் இரத்தம் வெளியேறாமல் தடுக்க அல்லது நிறுத்த, ஷெல்லாக்குடன் தேனைக் கலந்து உள்மருந்தாக எடுத்துக் கொள்வது சிறந்த மருத்துவமாகும்.

அரக்கு ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அரக்கு ஆராய்ச்சி நிறுவனம் ராஞ்சிக்கு அருகிலுள்ள நம்குன் என்னும் இடத்தில் 1925 ஆண்டு அமைக்கப்பட்டது. இதற்கு முன் 1921 ஆம் ஆண்டு தொழிற்சாலை அளவில் உற்பத்தியை நிலைப்படுத்தவும் வளர்ச்சியடையச் செய்யவும் அரக்கு ஆராய்ச்சிக் குழுமம் (Lac Cess Research Committee) அமைக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 49 அரக்குப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் Kargudi, Ulandi போன்ற இடங்களில் அரக்குப் பண்ணைகள் அமைந்துள்ளன.


Pachai Boomi Nalina Sundari

முனைவர் மா.சி.நளினசுந்தரி,

உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை, ம.த.கௌரி, ஆய்வு மாணவி,

இராணிமேரி கல்லூரி, சென்னை-04.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!