வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

வேளாண்மை அறிவியல் நிலையம் HP 6 scaled

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

ரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையம், சரசுவதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. நுழைவாயிலில் தொடங்கி அலுவலகம் வரையில், பாதையின் இருபுறமும் இருக்கும் அழகுப் பனைகள், வருவோரை வரவேற்பதைப் போல நின்றிருந்தன. காடு சார்ந்த அந்த இயற்கை விவசாயப் பண்ணை மயில்கள் ஆடும் சோலையாகக் காட்சியளித்தது. அவை, அகவல் மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தன.

இந்த அழகான சூழலுக்கு மேலும் அழகூட்டும் வகையில், இரசித்து மகிழும் விதத்தில், செந்தாமரையும் வெண்தாமரையும் பூத்திருக்கும் தடாகத்தில் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது வேளாண்மை அறிவியல் நிலையம். ஒருங்கிணைப்பாளர் அறை, தொழில்நுட்ப வல்லுநர் அறைகள், ஆய்வறை, நிர்வாக அலுவலக அறை, பயிற்சியறை, பயிற்சியாளர்கள் தங்கும் அறைகள், சமையற்கூடம், உணவுக்கூடம் என, அருமையாக அமைந்துள்ளது இந்நிலையம். இதைச் சுற்றிலும் புங்கன், பூவரசு, வேம்பு போன்ற மரங்களும், செடி கொடிகளும் நிழற் போர்த்திக் குளிரூட்டிக் கொண்டிருந்தன.

நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.திரவியம் நம்மை அன்புடன் வரவேற்றார். சில நிமிட நல விசாரிப்புக்குப் பிறகு, இந்த நிலையத்தின் தோற்றம், செயல்கள், விவசாயிகளுக்கு இதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் உதவிகளைப் பற்றி நம்மிடம் விரிவாகக் கூறினார்.

“நமது வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம், ஒருங்கிணைந்த பண்ணையத்தை விவசாயிகளிடம் அறிமுகம் செய்கிறோம். கதிரி 6 என்னும் நிலக்கடலை இரகத்தை அறிமுகம் செய்துள்ளோம். வெண்பன்றி வளர்ப்பைப் பரவலாக்கி இருக்கிறோம். 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் திட்டமான காலநிலை மாற்றத்துக்கு உகந்த நெல் சாகுபடித் திட்டத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் செயல்படுத்தி இருக்கிறோம்.

திருந்திய நெல் சாகுபடி

இந்தத் திட்டத்தில், 2010-13 காலத்தில் பெரியளவில் நான்கு கிராமங்களைத் தத்தெடுத்து, அங்குள்ள விவாயிகளுக்குத் திருந்திய நெல் சாகுபடிப் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்களை அளித்தோம். மேலும், திருந்திய நெல் சாகுபடி வயல்களைப் பார்வையிடும் வகையில், அவர்களைக் கண்டுணர் சுற்றுலாவாக அழைத்துச் சென்றோம். குறைந்த இடுபொருள்கள் செலவில் கூடுதல் மகசூல் என்பதுடன், வரிசை நடவில் குலைநோய்த் தாக்கமும் குறைவு என்பதால், விவசாயிகளிடம் மிகப்பெரிய விழிப்புணர்வு உண்டானது.

இயற்கை விவசாயப் பயிற்சி

தேசிய அங்கக நிறுவனத்தின் சார்பில், இயற்கை விவசாயப் பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்துள்ளோம். நபார்டு வங்கியின் ஈராண்டுத் திட்டமான, முன்னோடி விவசாயிகளை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, தேசியளவில் நூறு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவ்வகையில், தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட நான்கு வேளாண்மை அறிவியல் நிலையங்களில் நமது நிலையமும் ஒன்றாகும். இதன் மூலம், முன்னோடி விவசாயிகளை உருவாக்கி இருக்கிறோம்.

அதாவது, உழவர் மன்றங்களை அமைத்தல், மன்றத்தில் இருவருக்கு, திருந்திய நெல் சாகுபடி, நிலைத்த, நீடித்த கரும்பு சாகுபடி, துல்லியப் பண்ணையம் மூலம் காய்கறி சாகுபடி, அடர்நடவு வாழை சாகுபடி, கோழி, கறவை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, தீவன உற்பத்தி ஆகிய பயிற்சிகளை, திறமையான பயிற்றுநர்கள் மூலம் அளித்துள்ளோம். மேலும், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் கடன் ஆலோசனைகளை அளித்துள்ளோம்.

இத்திட்டத்தில், முதலாண்டில் பயிற்சியும், இரண்டாம் ஆண்டில் பயிற்சி மற்றும் செயல் விளக்கமும் செய்து காட்டப்பட்டன. இதன் மூலம் மற்ற விவசாயிகளுக்கும் பயிற்சியும் செயல் விளக்கமும் கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

முன்மாதிரி நிறுவனம்

இவ்வகையில், 2012 ஆம் ஆண்டில் நச்சலூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரி நிறுவனமாக அமைந்தது. இங்கே, நபார்டின் உதவியில் விதைச் சுத்திகரிப்பு மையம் தொடங்கப்பட்டது. தரமான பொருள்கள், கூட்டுறவுச் சங்கத்தை விடக் குறைந்த விலையில் இங்கே கிடைத்ததால், அரசின் உர விற்பனையும் இந்த நிறுவனம் மூலம் நடைபெற்றது. இதனால், விவசாயிகளுக்கு உரச்செலவும், பயிர்களில் தேவையற்ற மருந்துத் தெளிப்பும் குறைந்தன.

திருந்திய நெல் சாகுபடி நடவுக் குழுக்களைத் தொடங்கி, விவசாயிகளுக்குத் தொடர் வேலைவாய்ப்பை வழங்கினார்கள். விவசாயிகள் சிரமமின்றி வாங்க ஏதுவாக, கோனோவீடர் களைக்கருவியை விலைக்குக் கொடுத்து அதற்கான விலையைத் தவணை முறையில் வாங்கினார்கள். விவசாயிகளின் வயல்களில் இதன் மூலம் களையெடுத்துக் கொடுத்து, இந்த உத்தியைப் பரப்பினார்கள். செம்மைக் கரும்பு சாகுபடிக்காக, ஒரு பரு நாற்றுகளை உற்பத்தி செய்து கொடுத்தார்கள். குறைந்த வாடகையில் விவசாயிகளுக்குக் கருவிகளை வாடகைக்கு விட்டனர். பயிர்க் காப்பீடு செய்து கொடுத்து விவசாயிகளுக்கு உதவினார்கள். எந்தப் பிணையமும் இல்லாமல் வங்கிகளில் விவசாயக் கடன்களை வாங்கிக் கொடுத்தார்கள்.

இப்படி, பல பணிகளை இந்த நிறுவனம் செய்ததால், இதன் நிருவாகியான கரிகாலன் அவர்களுக்கு வேளாண் செம்மல் விருது கிடைத்தது. மேலும், மத்திய அரசின், இந்திய ஆசிய விவசாயிகள் பரிமாற்றத் திட்டத்தில் இவர் மலேசியாவுக்குச் சென்று வந்தார். இப்போது நபார்டு வங்கியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

செந்தில்குமார்

2008-09 அடர் நடவு வாழை சாகுபடியை, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் தொடங்கியது. ஒரே குழியில் மூன்று கன்றுகள் நடப்பட்டிருந்த நிலத்தை ஆய்வு செய்த போது, அந்தக் கன்றுகள் ஒல்லியாக இருந்தன. இரண்டு கன்றுகள் நடப்பட்டிருந்த நிலத்தை ஆய்வு செய்த போது நல்ல வளர்ச்சி இருந்தது. அதனால், இந்த உத்தியைப் பரவலாக்கும் முயற்சி மற்றும் நீர், உரம், பூச்சி, நோய்க் கட்டுப்பாடு சார்ந்த பயிற்சியையும் அளித்தோம். மேலும், உழவர் மன்றங்கள் மூலம் மாதிரித் திடல்களையும் அமைத்தோம். இவ்வகையில், அடர் நடவு வாழை சாகுபடியில் குளித்தலை செந்தில் குமார் வல்லுநரானார். இதனால், இவருக்கு உழவர் ஊக்குவிப்பாளர் விருதை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வழங்கிச் சிறப்பித்தது.

சாதா நடவை விட அடர் நடவு முறையில் 30% கன்றுகளைக் கூடுதலாக நடலாம். இதனால், கூலியும் பாசனநீரும் குறைவதுடன், களைகள் கட்டுப்படும்; நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; மரங்கள் சாய்வது குறையும்; விளைச்சல் தரமாக இருக்கும். இந்த அடர் நடவு வாழை சாகுபடியை, நபார்டு வங்கி முன்மாதிரித் திட்டமாக எடுத்துக் கொண்டது. இதனால், குளித்தலை வாழை, எள் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் கரூர் முருங்கை மற்றும் காய்கறி உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கியின் நிதியுதவியில் இயங்குகின்றன.

கரூர் மாவட்டத்தில் நிலக்கடலை முக்கியப் பயிராகும். இதில், புதிய இரகங்களில் செயல் விளக்கம் அளித்தல் மற்றும் கள ஆய்வு மூலம், கதிரி 6, கதிரி 9, கோ.7, வி.ஆர்.ஐ.8 போன்ற நிலக்கடலை இரகங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து நல்ல வருமானம் எடுக்க வைத்தோம். இவ்வகையில், வெள்ளியணை சிவசாமி வி.ஆர்.ஐ.8 இரகத்தில், மழைத்தூவல் முறையில் பாசனம் செய்து நல்ல மகசூலை எடுத்தார்.

சிவசுப்பிரமணியம்

செக்காணம் சிவசுப்பிரமணியம் ஒரு ஏக்கரில் மல்லிகையுடன் மற்ற மலர்களையும் பயிரிட்டு, மணிச்சத்தை அதிகமாக இட்டு நல்ல விளைச்சலை எடுத்தார். விளக்குப்பொறியின் நன்மைகளை எடுத்துச் சொல்லி இவரைப் பயன்படுத்தும்படி கூறினோம். இதனால், பூச்சி மருந்துத் தெளிப்புக் குறைந்தது. மேலும், ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டதால், பூக்கள் பூக்காத காலத்திலும், இவருடைய தோட்டத்தில் பூக்கள் விளைந்தன.

மரிய பிரான்சிஸ்

அரவக்குறிச்சி நாகம்பள்ளி குப்பு மேட்டுப்பட்டியில் உழவர் வயல்வெளிப் பள்ளியை நடத்தி, முருங்கையைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறியைப் பயன்படுத்தச் சொன்னோம். மேலும், விளக்குப்பொறியில் உள்ள பேனலை மாற்றிவிட்டு பாட்டரியை மாற்றிப் பயன்படுத்தச் சொன்னோம். இதனால், 4,000 ரூபாய் மதிப்புள்ள விளக்குப்பொறி 1,500 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இப்படி, விவசாயிகளிடம் விளக்குப்பொறியைப் பரவலாக்கி வருகிறோம். இவ்வகையில், சின்னாண்டிப்பட்டி மரியபிரான்சிஸ், பந்தல் காய்கறி சாகுபடியில் மருந்துத் தெளிப்பைக் குறைத்து, இயற்கை விவசாயியாக மாறியுள்ளார்.

சரோஜா

லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரோஜா, நம்மாழ்வாரின் சீடர். இவர் இருபது ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இவர், பாத்தியில்லாத, உழவில்லாத விவசாய முறையை நான்கு ஏக்கரில் கடைப்பிடித்து வருகிறார். இதில், நாட்டுக் காய்கறிகள், கறிவேப்பிலையைச் சாகுபடி செய்கிறார். விளைச்சல் தரமாக உள்ளது. முருங்கையில் இருந்து எண்ணெய் எடுக்கிறார். விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறார். இவரின் அணுகுமுறை மற்றும் திறமையைப் பாராட்டி, இவருக்கு மகிளா கிஷான் விருது வழங்கப்பட்டுள்ளது.

மதியழகன்

நடையனூர் மதியழகன் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை இயக்கி வருகிறார். இவரது பண்ணையில் வயல்வெளிப் பள்ளியை நடத்தினோம். நபார்டு வங்கியின் கிராம வளர்ச்சித் திட்டத்தில், பனிக்கம்பட்டி, மகிளிப்பட்டியில், விவசாயம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவி செய்யப்படுகிறது. இதில் அங்குள்ள அண்ணா உழவர் மன்ற அமைப்பாளர் ஞானவேல் சிறப்பாகச் செயல்படுகிறார்.

குளித்தலை வாழை, எள் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரி அவர்களின் முயற்சியில் மினி பஸ் மற்றும் ரேஷன் கடை வசதி கிடைத்துள்ளது. அமராவதி உழவர் மன்றத்தைச் சேர்ந்த சீத்தப்பட்டி பிச்சை, மரக்கன்று நடவு மற்றும் தடுப்பணை கட்டுவதில் சாதனையாளராக உள்ளார். குளித்தலை துரைசாமி குமாரமங்கலம், களையெடுக்கும் கருவியை உருவாக்கி இருக்கிறார். அதனால் இவருக்கு வேளாண் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த முன்மாதிரி விவசாயிகள் தங்களின் அனுபவங்கள் மூலம், மற்ற விவசாயிகளுக்கு வேண்டிய சாகுபடி உத்திகளை எடுத்துச் சொல்வதால் அவர்கள் நல்ல மகசூலை எடுக்க முடிகிறது. இப்படி, சிறந்த மூன்று விவசாயிகளை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதுகள் கிடைப்பதற்குப் பரிந்துரை செய்கிறோம்.

இயற்கையின் விந்தை

இந்த இடத்தில் பயிர்களின் திறனைப் பற்றிய அருமையான செய்தியொன்றைச் சொல்ல விரும்புகிறேன். மிளகாய் சாகுபடி நிலத்தில் வயல்வெளிப் பள்ளியை அமைத்து இலைவெட்டு ஆய்வை நடத்தினோம். அதில் இலைகள் வெட்டப்படாத செடியில் இருப்பதை விட, இலைகள் வெட்டப்பட்ட செடியில் நல்ல மாற்றம் தெரிந்தது. இதன் மூலம், பூச்சிகள் இலைகளை வெட்டினாலும், அதனால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுகட்டும் திறன் பயிர்களுக்கு இருப்பதை அறிந்தோம்.

பயிற்சிகள்

பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புப் பயிற்சி, கழிவுப் பொருள்களை உரமாக்கும் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறோம். தேசியத் திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம், கடந்தாண்டில் தென்னை நண்பர்கள் பயிற்சி, அங்கக சாகுபடியாளர் பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கினோம். நடப்பாண்டில் மண்புழு உரத் தயாரிப்பாளர், தேனீ வளர்ப்பாளர், இயற்கை விவசாயி ஆகிய பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அசோஸ்பயிரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களைப் பயன்படுத்தினால், வறட்சியிலும் பயிர்கள் பசுமையாக இருக்கும். இந்த உண்மையை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம். வெட்டிவேர் சாகுபடியை விரிவாக்கி வருகிறோம்.

கால்நடை வளர்ப்பு

விவசாயம் மற்றும் விவசாயிகளின் உயர்வுக்குக் கால்நடைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. எனவே, கோ.எஃப்.எஸ்.29 மறுதாம்புத் தீவனச்சோளம் மற்றும் அசோலா சாகுபடியை விரிவாக்கி வருகிறோம். கலப்புத்தீவன வங்கியை ஏற்படுத்தி, தீவன விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறோம். அசீல், கிராமப்பிரியா போன்ற நாட்டுக்கோழிகளை அறிமுகம் செய்து வருகிறோம். நபார்டு வங்கியின் ஓராண்டுத் திட்டமான பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தில், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில், விவசாயிகளைத் தேர்வு செய்து, காடை வளர்ப்புப் பயிற்சியை அளிக்கிறோம். மேலும், குஞ்சுகளும், தீவனமும் இத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

கருத்தரிப்புச் செயலி

கலப்பின மாடு வளர்ப்பு மற்றும் சுத்தமான பால் உற்பத்திக்கான வயல்வெளிப் பள்ளியை நடத்தியுள்ளோம். கள ஆய்வு மூலம் கருவுறாத மாடுகளைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை மூலம் சினைப் பிடிக்க வைத்துள்ளோம். நமது நிலையத்தின் கால்நடை மருத்துவ வல்லுநர் மருத்துவர் அருண், கருத்தரிப்புச் செயலி ஒன்றை, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தின் அனுமதியுடன் உருவாக்கியுள்ளார்.

முகநூல், கட்செவி, காணொளி

ICAR KVK என்னும் முகநூல், KVK வாட்சாப் குழுவில், வேளாண் சந்தைகள் மற்றும் சந்தை நிலவரத்தை வெளியிட்டு வருகிறோம். முகநூலில் வேளாண்மையில் வல்லுநர் காட்டும் வழி, வயலே புத்தகம் ஆகிய தலைப்புகளில், விவசாயிகளுக்குத் தேவையான உத்திகளைப் பதிவிட்டு வருகிறோம். ICARKVK என்னும் காணொளி ஊடகமும் உள்ளது.

இப்படி, அனைத்து வழிகளிலும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் மேம்பாடு நோக்கிய பணிகளில், கரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சீராக இயங்கி வருகிறது. அதனால், கடந்தாண்டு நியூஸ்18 தொலைக்காட்சியின், சிறந்த அரசு நிறுவனத்துக்கான உழவன் விருதும், இந்தாண்டில் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின், சிறந்த வேளாண்மை அறிவியல் நிலைய விருதும் நமது நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளன’’ என்று உவகையுடன் கூறினார்.

சிறப்பான வேளாண் பணிகள் மூலம் இந்த நிலையத்துக்கு இன்னும் பல விருதுகள் கிடைக்க வேண்டுமென வாழ்த்தி விடை பெற்றோம்.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading