பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

தோட்டக்கலைப் பண்ணை HEADING PIC 1 scaled e1612700227790

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019

மிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் பூங்காக்கள் குறித்து, தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் டாக்டர் ந.சுப்பையனிடம் பேசினோம். அப்போது அவர்,

“தமிழகத்தில் 61 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும், 19 பூங்காக்களும்  29 மாவட்டங்களில் உள்ளன. தரமான நடவுச் செடிகளை, சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குவது தான் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் முக்கிய நோக்கம். மேலும் இப்பண்ணைகள், தோட்டக்கலை சார்ந்த தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள், நவீனப் பாசன முறைகளைக் கொண்ட மாதிரி செயல்விளக்கப் பண்ணைகளாகவும் திகழ்கின்றன.

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ.9.26 கோடி மதிப்புள்ள தோட்டக்கலைச் செடிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் எட்டுக்கோடி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் 11.25 இலட்சம் மருத்துவப் பயிர்களும் அடங்கும். நடப்பாண்டில் ரூ.14.47 கோடி நடவுச் செடிகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டதில், இதுவரையில் ரூ.12.10 கோடி மதிப்புள்ள செடிகளை உற்பத்தி செய்து வழங்கியுள்ளோம். இப்போது, உயர் மகசூலைத் தரும் வீரிய ஒட்டுக் காய்கறி நாற்றுகள், பூச்செடிகள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பர்லியார், கல்லார் தோட்டக்கலைப் பண்ணைகள்

பர்லியார் மற்றும் கல்லாரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்  1871 மற்றும் 1900 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டவை. பர்லியார் பண்ணை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், 6.2 எக்டர் பரப்பில் அமைந்துள்ளது. இப்பண்ணையில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் 1.825 இலட்சம் மிளகு, ஜாதிக்காய், இலவங்கம், கிராம்பு நாற்றுகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. கல்லார் பண்ணையில் 8.92  எக்டர் பரப்பில், மிளகு, ஜாதிக்காய், இலவங்கம், கிராம்பு நாற்றுகள், பலா நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

ஏழு மாவட்டங்களில் 19 பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை, தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. இவை, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு மையங்களாகத் திகழ்கின்றன. மேலும், தாவரவியல் மாணவர்களின் பயிற்சிக் களமாகவும் விளங்குகின்றன. ஆண்டுதோறும் 5.5 இலட்சம் பார்வையாளர்கள் பிரயண்ட் பூங்காவுக்கு வருகின்றனர்.

கொய்மலர் செயல்விளக்க மையமாக விளங்கும் பொருட்டு, கொடைக்கானலில் ரோஜாப் பூங்கா மற்றும் கொய்மலர் செயல்விளக்க மையத்தின் இரண்டாம் கட்டப் பணிக்காக 11.05 கோடி ரூபாய் 2017-18 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணையில், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், 15 ஏக்கர் பரப்பில், ரூ.4.12 கோடிச் செலவிலான சுற்றுச்சூழல் பூங்காவை, தமிழக முதலமைச்சர் 05.04.2018 அன்று தொடக்கி வைத்துள்ளார்.

உதகைத் தாவரவியல் பூங்கா

இந்திய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பூங்காவாக, அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2400-2500 மீட்டர் உயரத்தில் 22 எக்டர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ஆண்டுக்கு 1300 செ.மீ. மழையைப் பெற்று இதமான சூழலில் விளங்குகிறது. ஆண்டுதோறும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.

கல்வி சார்ந்த அறிவைப் பெறும் நோக்கத்தில், இந்திய மற்றும் வெளிநாட்டுத் தாவரவியல் மாணவர்களும் இங்கு வருகின்றனர். பழம்புகழ் பெற்ற கட்டடம் ஆரம்பத்தில் செடிகளைப் பாதுகாக்கும் இடமாகத் திகழ்ந்தது. பிறகு, செடிகள் மற்றும் விதைகள் விற்பனை நிலையமாக மாறியது. 

நூறாவது மலர்க் காட்சியின் நினைவாக இக்கட்டடம் 1992 புதுப்பிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது. இப்பூங்கா, கீழ்ப்பூங்கா, பெரணி இல்லப் பகுதி, புதுப்பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, கன்சர்வேட்டரி, மேல்பூங்கா, சன்கன் பூங்கா, நாற்றங்கால் பகுதி என, பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 2,000க்கு மேற்பட்ட தாவர இனங்கள் இப்பூங்காவில் இருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

கன்னியாகுமரி தோட்டக்கலைப் பண்ணை

கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணை 12.64 எக்டர் பரப்பில் 1922 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. மா, கொய்யா, பலா, சப்போட்டா, நெல்லி, மாதுளை போன்ற பழக்கன்றுகளும், தக்காளி, கத்தரி நாற்றுகள் குழிதட்டுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தோட்டக்கலைப் பண்ணை SUBBAIYAN e1612700429349
டாக்டர் ந.சுப்பையன்
மலர் மற்றும் பழக் கண்காட்சிகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும், வசந்த காலம் மற்றும் கோடைக் காலத்தில், பழம் மற்றும் மலர்க் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. நீலகிரியில் நடைபெறும் கோடைவிழா முக்கியமானது.

இங்கே நடக்கும் மலர்க் கண்காட்சி, காய்கறி மற்றும் நறுமணப் பயிர்கள் கண்காட்சி, கலாச்சார நிகழ்வுகள் பார்வையாளர்களைக் கவரும் விதமாக அமைகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் விதவிதமான மலர்களால் அமைக்கப்படும் கண்காட்சி, பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.

அரசு ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி, தோட்டக்கலைத் துறையால் நடத்தப்படும் முக்கிய நிகழ்வாகும். இதில் பிரபலமான மற்றும் கவர்ச்சிமிகு ரோஜா மலர்கள் இடம் பெறுகின்றன. ஏற்காடு மற்றும் கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் மற்றும் தோட்டங்களிலும் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பூக்கள் மற்றும் காய்கறிகளால் உருவம் அமைத்தல், பூக்கோலம் மற்றும் போன்சாய்க் காட்சிக்கூடம் போன்றவை பிரபலமானவை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் சாரல் விழா நடத்தப்பட்டு வருகிறது.

பண்ணைச் சுற்றுலாத் திட்டம்

இருபத்து மூன்று தோட்டக்கலைப் பண்ணைகள், 2 பூங்காக்களில் பண்ணைச் சுற்றுலாத் திட்டம் செயல்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாகுபடி உத்திகளை அறிந்து கொள்வதற்குப் பண்ணைச் சுற்றுலாத் திட்டம் பேருதவியாக அமையும். மேலும், தோட்டக்கலைப் பயிர் சாகுபடிக்கான புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளவும், அவற்றை விவசாயத்தில் பயன்படுத்தவும், பண்ணைச் சுற்றுலா சிறந்த வாய்ப்பாக அமையும்.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளுக்குச் சென்று, அவற்றின் செயல்கள், சாகுபடி முறைகள், நாற்று உற்பத்தி முறைகள், இயற்கை சார்ந்த தோட்ட அமைப்பு ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம்’’ என்றார்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!