கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020
இன்று உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம், கவனத்துடன் பல முறைகளைக் கையாண்டு வருகிறது. இக்கிருமி எளிதில் வேகமாகப் பரவக் காரணம் என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கையாள வேண்டும்.
1955 வாக்கில், நம் நாட்டு விவசாயிகளுக்கு முறைப்படி விவசாயம் செய்யத் தெரியாததால், உணவு உற்பத்திக் குறைந்து விட்டது என்று, சில விஞ்ஞானிகள் அரசுக்குத் தெரிவித்தார்கள். அதனால், பசுமைப் புரட்சி என்னும் பெயரில் சில இரகங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவற்றுக்கு இரசாயன உரங்களை இடுபொருள்களாகப் பயன்படுத்தச் சொன்னார்கள். அந்தப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, உயிர்க்கொல்லிகளைத் தெளிக்கச் சொன்னார்கள். அதிக நஞ்சுள்ள களைக்கொல்லியைப் பரிந்துரை செய்தார்கள். அதனால் களையெடுக்கும் செலவும் குறைந்தது.
இரசாயன உரத்தை இட்டதால் பயிரும் செழிப்பாக வளர்ந்தது. அதிகளவில் இரசாயன உரங்களை இட்டதால் நிலமும் மலடானது. பாரம்பரியமாக இட்டு வந்த தொழுவுரத்தை விவசாயிகள் மறந்து விட்டார்கள். ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை போடுவதை விட்டு விட்டார்கள். இதனால் நாம் கண்ட பலன் என்ன?
மண் நஞ்சானது; மண்ணிலிருந்த நுண்ணுயிர்கள் அழிந்தன; மகசூல் குறைந்தது. உயிர்க்கொல்லிகளைத் தாங்கி வளரும் சக்தியைப் பூச்சிகள் பெற்று விட்டன. பயிர்கள் நஞ்சாகி விட்டன; காய்கள், கனிகள், தானியங்கள் நஞ்சாகி விட்டன. உயிர்க்கொல்லி கலந்த திரவத்தில், திராட்சை, முட்டைக்கோசு, காலிபிளவர் போன்ற உணவுப் பொருள்களை முக்கி எடுக்கிறார்கள். தாவரக் கழிவுகளை உண்ணும் ஆடு மாடுகளின் பாலிலும் நஞ்சு கலந்து விட்டது.
இப்படி, நஞ்சு கலந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடும் நம் உடலின் உறுப்புகள் கெட்டுக்கொண்டே வருகின்றன. உமிழ்நீர்ச் சுரப்பி, கல்லீரல், மண்ணீரல், கணையம், இதயம், இரைப்பை, நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், கருப்பை, எலும்புகள் போன்றவை கெட்டு விட்டன. நோயுள்ள உறுப்புகளைக் கொண்ட இந்த உடலுக்கு நோயை எதிர்க்கும் ஆற்றல் குறைந்து விட்டது. போதாக்குறைக்கு, மருத்துவர்களிடம் கூடக் கேட்காமலே, கண்ட கண்ட மருந்துகளை, மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு வருகிறோம். சித்தர்கள் கூறிச் சென்ற மூலிகைகளைப் பயன்படுத்துவதையும் விட்டு விட்டோம்.
என் நெருங்கிய நண்பருக்கு விடாத விக்கல். அவர் ஓரளவு வசதியானவர். அதனால், பெரிய மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். செய்ய வேண்டிய சோதனைகளை எல்லாம் செய்து இரண்டு மூன்று நாட்களுக்கு மருந்து கொடுத்திருக்கிறார்கள்; ஊசி போட்டிருக்கிறார்கள்; ஆனாலும் விக்கல் நின்றபாடில்லை. இந்த விக்கல் எங்களுக்குச் சவாலாக இருக்கிறது, வீட்டுக்குப் போய்விட்டு மூன்று நாட்கள் கழித்து வாருங்கள் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். அவரும் வீட்டுக்கு வந்து நடந்ததைக் கூறினார். அப்போது நான்,
எட்டுத் திப்பிலி
ஈரைந்து சீரகம்
கூட்டுத் தேனில்
கலந்து உண்ண
விட்டுப் போகும்
விக்கலும் விடாவிடில்
சுட்டுப்போடு புத்தகத்தை
நான் தேரையனும் அல்லவே
என்னும் பாடலைக் கூறினேன். அதாவது, எட்டுத் திப்பிலி, பத்துச் சீரகத்தை நொறுக்கித் தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நின்று விடும். இதில் நிற்காவிடில் புத்தகம் என்னும் மயிலிறகைச் சுட்டுத் தேனில் கலந்து சாப்பிடலாம் என்றேன். உடனே அவர், மயிலிறகைச் சுட்டுத் தேனில் கலந்து சாப்பிட, சில நிமிடங்களில் விக்கல் நின்று விட்டது. இதை மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் என்னிடம் கூறினார். இப்படி, எத்தனையோ மருந்துகள் நம்மிடம் உள்ளன. அதற்காக நான் மேல்நாட்டு மருத்துவத்தைக் குறை கூறவில்லை. செலவில்லாத நம்நாட்டு மூலிகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
விவசாயத்தில் பயிர்களைக் காக்க, உயிர்க்கொல்லிகளைத் தெளிப்பதை விட, நாமே பயிர்ப் பாதுகாப்பு மூலிகைத் திரவங்களைத் தயாரித்துத் தெளிக்கலாம். எந்தெந்த மூலிகைகளை ஆடு மாடுகள் தின்னாதோ அவற்றில் ஐந்தாறு மூலிகைகளைப் பறித்து ஆட்டிச் சாறெடுத்துப் பயிர்களில் தெளித்தால், அந்த வாசனை பிடிக்காமல் பூச்சிகள் அந்த இடத்தை விட்டே அகன்று விடும். அவற்றால் உண்ண முடியாது; இனப்பெருக்கம் செய்ய முடியாது. இப்படி ஒவ்வொரு முறையும் மூலிகைகளை மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.
இதைப்போல, சாணம், கோமியம் கலந்த கரைசல், பயிருக்கு உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது. இதைவிட, உயிராற்றல் வேளாண்மை என்னும் கொம்பு சாண உரம், கொம்பு சிலிக்கா உரம், சாண மூலிகை உரம் போன்றவற்றைத் தெளித்தால், உயிர் நுண்ணணுக்களைப் பெருக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 மில்லி கிராம் உரம் போதும்.
இத்தகைய நஞ்சில்லாப் பொருள்களைத் தயாரித்துக் கொள்ளும் முறைகளை விவசாயிகளுக்குக் கற்பிக்க நம் அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய விவசாயம் செய்தால் நிலம் வளமடையும்; நோயெதிர்ப்புச் சக்தியுள்ள பயிர் உருவாகும்; நஞ்சில்லா உணவுப்பொருள் கிடைக்கும். நஞ்சில்லா உணவை உண்ணும் நம் உடல் நோயெதிர்ப்புச் சக்தி உள்ள உடலாக அமையும்.
நிலம் நஞ்சாகாது; நீர் நஞ்சாகாது; காற்று நஞ்சாகாது. நஞ்சில்லாத் தாவரக் கழிவுகள், புல் பூண்டுகளைத் தின்னும் ஆடு மாடுகளின் பாலில் நச்சுக் கலப்பு இருக்காது. அதனால், உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் நோயின்றி வாழலாம் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். இதை எதிர்காலத் திட்டமாக ஏற்று அரசாங்கம் செயல்படுத்தினால் நாட்டுக்கு நல்லது.
நீ.இராஜகோபால்,
நஞ்சில்லா விவசாயி, தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்,