தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

தங்க அரிசி Golden Rice scaled

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020

ங்க அரிசி என்பது வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தங்க அரிசி எனப்படுகிறது. வெள்ளைநிற அரிசியில் வைட்டமின் ஏ இல்லாததால் தங்க நிறம் அல்லது மஞ்சள் நிறம் உருவாவதில்லை.

வைட்டமின் ஏ-யின் அவசியம்

வைட்டமின் ஏ சத்து கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டி நம்மை நலமாக வாழ வைக்கிறது. இந்தச் சத்துக் குறைவால், மாலைக்கண் நோய், கண்ணில் நீர்ச்சுரப்பு இல்லாமல் போவதால் ஏற்படும் கண் உலர்தல் நோய், கண்ணில் பூ விழுதல், நோயெதிர்ப்புச் சக்திக் குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. இறுதியில் பார்வையை முற்றிலும் இழக்கும் நிலை ஏற்படும்.

நோயெதிர்ப்புச் சக்திக் குறைவதால் மற்ற நோய்கள் உடம்பைத் தாக்க வாய்ப்பாகிறது. வைட்டமின் ஏ போதியளவு கிடைத்தால், இதயநோய், புற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, எய்ட்ஸ், அம்மை, இரத்தழுத்தம் ஆகிய நோய்கள் வராமல் இருக்கும்.

தங்க அரிசித் தயாரிப்பின் நோக்கம்

தங்க அரிசி உருவாக்கப்பட்டதன் நோக்கம், வைட்டமின் ஏ சத்துக் குறைவால், மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கி நலமாக வாழ வைப்பது. ஹெலன் கெல்லர் இன்டர்நேசனல் என்னும் நிறுவனம், உலகளவில் வைட்டமின் ஏ குறைவால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும், அதை நிவர்த்தி செய்வதிலும் முப்பது ஆண்டுகள் ஈடுபட்ட நிறுவனம்.

இதன் ஆய்வின்படி 19 கோடி பால்வாடிக் குழந்தைகள், 1.9 கோடி கர்ப்பிணிகள், வைட்டமின் ஏ குறை உள்ளவர்கள். ஆண்டுதோறும் 6,70,000 குழந்தைகள் இச்சத்துக் குறைவால் இறக்கிறார்கள். 3,50,000 குழந்தைகள் பார்வையை இழக்கிறார்கள்.

ஏழை மக்களின் உணவில் போதுமான வைட்டமின் ஏ இல்லாமல் போவது, குறிப்பாக, பச்சைக் காய்கறி, பழம், பால், தயிர், மோர், நெய், முட்டை, ஈரல் போன்ற சரிவிகித உணவு ஏழை மக்களுக்குச் சீராகக் கிடைக்காமல் போவதே வைட்டமின் ஏ குறையக் காரணமாகும். பொருளாதார வளமில்லா நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள், சமச்சீர் உணவு கிடைக்காத நிலையில் உள்ளனர். 

மேலும், வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை, சரியான தட்ப வெப்பம், மண்வளம் கிடைக்காததால், பயிரிட முடியாமல் போவது, பயிரிட்டாலும் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மட்டும் விளைவது, அழுகும் பொருள்கள் என்பதால், நீட்டித்துச் சேமிக்க இயலாத சூழல் போன்றவையும், வைட்டமின் ஏ குறைவுக்குக் காரணமாகும். ஏழை மக்களால் இறைச்சிப் பொருள்களை வாங்குவதற்கு வசதியில்லாமல் போவதும் ஒரு காரணமாகும்.

பொதுவாக, வைட்டமின் ஏ சத்துக்குறை, நெல்லரிசியை முக்கிய உணவாகக் கொள்ளும் மக்களிடம் பரவலாக உள்ளது. இவ்வகையில், தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக உள்ளது. அரிசி உணவை உண்ணும் 40 கோடி ஏழை மக்களின் மருத்துவ ஆய்வு முடிவு, கவலை தருவவதாக உள்ளது. அம்மக்கள், பார்வை குறைந்து, பார்வையற்று, நோயெதிர்ப்புத் திறனற்று மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்த நிலையில் உள்ளனர்.

தங்க அரிசி உற்பத்தி

நெற்பயிர் இலைகளில் வைட்டமின் ஏ உற்பத்தி செய்யப்படுகிறது. அரிசியில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அரிசித் தவிட்டில் வைட்டமின் பி-யும் கொழுப்பும் உள்ளன. நெல்லை இயந்திரத்தில் அரைக்கும் போது தவிடு நீக்கப்படுகிறது. இந்தத் தவிட்டை அரைக்காமல் பாதுகாத்து வைத்தால், அதிலுள்ள கொழுப்பு, காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து, துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. எனவே, தவிடு நீக்கப்படாத அரிசியையும் நெடுநாட்கள் சேமிக்க முடிவதில்லை. ஆயிரக்கணக்கான நெல் இரகங்களைச் சோதித்ததில், ஒரு இரக அரிசியில்கூட வைட்டமின் ஏ உற்பத்தியாகவில்லை.

வைட்டமின் ஏ உருவாகத் தேவையான மரபணுக்கள், தானியத்தில் இருந்து, வளர்ச்சிப் பருவத்தில் வெளிப்படுவது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மரபணுக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்த வைக்கும் ஆய்வில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த அரிசி, வைட்டமின் ஏ குறைவால் ஏற்படும் நோய்களைக் குணமாக்கும்.

ஒரு மனிதனுக்குத் தினமும் 750 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ தேவை. நாம் உண்ணும் தங்க அரிசியிலுள்ள பீட்டா கரோட்டீன் அனைத்தும் வைட்டமின் ஏ-யாகக் கிரகிக்கப்படுவதில்லை. பீட்டா கரோட்டீனைக் கிரகிக்க, கொழுப்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தாக மாற்ற இரும்புச்சத்தும் தேவை. ஆனால், இந்த இரண்டு சத்துகளும் ஏழை மக்களிடம் குறைவாக உள்ளன.

எனவே, 750 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ-யைப் பெற, பீட்டா கரோட்டீன் நிறைந்த அரிசி வேண்டும். தங்க அரிசி 2 இரகத்தின் ஒரு கிராம் அரிசியில் 37 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டீன் உள்ளது.

ஆசிய கண்டத்தில் வாழும் ஒருவர் தினமும் 282 கிராம் வீதம், ஓராண்டில் சராசரியாக 103 கிலோ அரிசி உணவை உண்கிறார். இவை அனைத்தும்  தங்க அரிசியாக இருந்தால் 10,434 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டீனைத் தரும். ஏழை மக்களுக்கு இந்த 282 கிராம் அரிசியில் வெறும் 94 கிராம் அரிசி மட்டுமே கிடைக்கிறது. இது தங்க அரிசியாக இருந்தால், 3,478 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டீன் கிடைக்கும்.

ஒரு வைட்டமின் ஏ மூலக்கூறு கிடைக்க 12 மூலக்கூறு பீட்டா கரோட்டீன் மூலக்கூறு தேவை. நலமாக இருக்கும் ஒருவருக்கு ஒரு மூலக்கூறு வைட்டமின் ஏ கிடைக்க, 3-4 மூலக்கூறு பீட்டா கரோட்டீன் போதும். 12 பீட்டா கரோட்டீன் மூலக்கூறுக்கு ஒரு மூலக்கூறு வைட்டமின் ஏ கிடைத்தாலும், 72 கிராம் தங்க அரிசி மூலம், ஒரு நாளைக்கு வேண்டிய 50% வைட்டமின் ஏ, குழந்தைகளுக்குக் கிடைத்து விடும்.

தேவைக்கு அதிகமான பீட்டா கரோட்டீனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், தேவைக்கு அதிகமான வைட்டமின் ஏ-யால் பாதிப்பு ஏற்படும். சாதாரணத் தாவரக் கலப்பு மற்றும் பயிர்ப் பெருக்கம் மூலம், தங்க அரிசியை உருவாக்க முடியாது; மரபணு மாற்ற முறையால் தான் முடியும்.

தங்க அரிசியின் அறிவியல்

டெவோடில் தாவரத்தின் பைட்டோயின் சிந்தேஸ் என்னும் மரபணுவும், எருவினியா இருடோவோர என்னும் நுண்ணுயிரியில் இருந்து கரோட்டீன் டிசேச்சுரேஸ் என்னும் மரபணுவும் நெல்லில் புகுத்தப்பட்டன. இதனால், ஒரு கிராம் அரிசியில் 1.6 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டீன் உருவாக்கப்பட்டது. இது தங்க அரிசி1 எனப்படுகிறது.

இந்த அளவு குறைவாக இருப்பதால், பைட்டோயின் சிந்தேஸ் மரபணுவை மக்காச்சோளத்தில் இருந்து எடுத்து நெல்லில் புகுத்தியதில், ஒரு கிராம் அரிசியில் 37 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டீன் இருந்தது. இது தங்க அரிசி 2 எனப்படுகிறது. தங்க அரிசியிலுள்ள பீட்டா கரோட்டீன், நமது உடலில் வைட்டமின் ஏ-யாக மாற்றப்படுகிறது.

தங்க அரிசி, மனிதனுக்குத் தேவையான சக்தி மற்றும் வைட்டமின் ஏ-யைக் கொடுத்து நோய்களில் இருந்து காக்கிறது. எனவே, தங்க அரிசித் தொழில் நுட்பம் காலத்தின் தேவையாக உள்ளது.


தங்க அரிசி GOPI KRISHNAN e1629480458473

முனைவர் அ.கோபிகிருஷ்ணன்,

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அறிவியல் நிலையம், 

விரிஞ்சிபுரம். வேலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!