ஆட்டெரு வைத்தால் அருமையாகக் காய்க்கும்!

ஆட்டெரு Organic Fertilizer for Moringa Tree in Tamil

இரா.கோதண்டராமனின் மர முருங்கை சாகுபடி அனுபவம்

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகில் இருக்கிறது தி.பொம்மிநாயக்கன் பட்டி. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த ஊர். ஒரு காலத்தில் நெல் விளையும் அளவில் செழிப்பாக நீர்வளம் இருந்த ஊர். மழைக்காலத்தில் குன்றுகளில் இருந்து ஊற்றெடுக்கும் நீர் மாதக் கணக்கில் ஓடைகளில் ஓடியுள்ளது.

ஆனால், இப்போது மழை சரியாகப் பெய்வதில்லை என்பதால், அப்பகுதியில் வறட்சியே நிலவுகிறது. பெரும்பகுதி மானாவாரியாகவும், ஆங்காங்கே சிறியளவில் இறவையிலும் விவசாயம் நடந்து வருகிறது.

இங்கே கொஞ்சமாகக் கிடைக்கும் கிணற்று நீரை வைத்து, சொட்டுநீர்ப் பாசனம் மூலம், கத்தரி, தக்காளி, சர்க்கரைப் பூசணி, மரமுருங்கை போன்ற காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார், இரா.கோதண்டராமன்.

இவரது தோட்டத்துக்கு அண்மையில் போயிருந்தோம். அப்போது தனது மர முருங்கை சாகுபடி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“ஒரு ஏக்கர் நெலத்துல மர முருங்கையை சாகுபடி செஞ்சிருக்கோம். இந்த மரங்கள வச்சு நாலு வருசமாச்சு. தண்ணி குறைவா இருக்கிறதால இந்த மாதிரி மரப்பயிர்கள் தான் விவசாயிகளுக்குக் கொஞ்சம் கை குடுக்குது.

மேலும், பல்லாண்டுப் பயிராவும் இருக்கிறதால அடிக்கடி பயிரை மாத்தணும், செலவழிக்கணும் அப்பிடீங்கிற நிலை இல்லை.

மர முருங்கையை ஆடிப் பட்டத்துல நடவு செஞ்சோம். வரிசைக்கு வரிசை செடிக்குச் செடி 22 அடி இடைவெளி விட்டு, ஒரு அடி ஆழத்துல குழிகளை எடுத்தோம். அதுல தொழுவுரத்தைப் போட்டோம்.

அப்புறம், நடவுக் குச்சிகளை கரையான், எறும்புகள் தாக்காம இருக்குறதுக்காகச் சுருட்டைப் பொடியைத் தூவி விட்டோம். இதையெல்லாம் செஞ்சுட்டு, நல்லா காய்க்கக் கூடிய முருங்கை மரத்துல இருந்து ரெண்டடி நீளத்துல இளங்குச்சிகளை வெட்டிட்டு வந்து நட்டு, தண்ணி விட்டோம்.

ஆடிக்கு மேல தைமாசம் வரைக்கும் மழை, குளிர்காலம் தான். அதனால பாசனம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதே சமயத்துல இந்தக் காலத்துல களைகள் நெறயா முளைக்கும். இந்தக் களைகளை அடிக்கடி அகற்றி, நெலத்தைச் சுத்தமா வச்சுக்கிறணும்.

குச்சிகள் துளிர்த்து ஒரு நாலடி உயரம் வந்ததும், கத்தரியை வச்சு நுனியை வெட்டி விடணும். இதனால சிம்புகள் வெடிக்கும். அதாவது பக்கக் கிளைகள் உருவாகும். இந்தக் கிளைகள் நிறைய வந்தால் தான் நமக்கு நெறையக் காய்கள் கிடைக்கும்.

இளஞ்செடியா இருக்கும் போது செடிக்கு அரை கிலோ டிஏபி உரத்தைக் குடுத்தோம். இப்போ பெரிய மரங்களா வளர்ந்திருச்சு. அதனால மரத்துக்கு ஒரு கிலோ டிஏபி உரத்தை மரத்தூருல இருந்து மூணடி தூரத்துல வைக்கிறோம்.

இதோட ஆறு மாசத்துக்கு ஒருமுறை ஒரு மரத்துக்குப் பத்து கிலோ ஆட்டெருவைக் குடுக்குறோம். இப்படிக் குடுத்து வந்தா, காய்கள் பச்சையாவும் வாளிப்பாவும், நீளமாவும் இருக்கும். இதனால சந்தையில நல்ல விலை கிடைக்கும். அடுத்து, மரத்துல இருந்து தழைகள் உதிராது.

முருங்கையில வண்டுகள், புழுக்களோட தாக்குதல் இருக்கும். பதினஞ்சு நாளுக்கு ஒருமுறை, கடையில கிடைக்கும் இயற்கை சார்ந்த மருந்தைத் தெளிச்சு வந்தா இந்த வண்டு, புழுக்கள் தாக்குதல் இருக்காது. வெய்யில் காலம் தொடங்கிட்டா பத்து நாளைக்கு ஒருமுறை பாசனம் செஞ்சிருவோம். அதுக்காகச் சொட்டுநீர்ப் பாசனத்தை அமச்சிருக்கோம்.

நடவு செஞ்சு ஆறு மாசத்துல முருங்கைக் குச்சிகள் ஓரளவுக்கு மரமாகிக் காய்க்க ஆரம்பிச்சுரும். மரம் பெருசாகப் பெருசாக நெறையக் காய்களைக் காய்க்கும். முருங்கை பூக்கும் சமயத்துல மழை பெய்யாமல் இருக்கணும். மழை பெய்தா பூக்கள் எல்லாம் கீழே கொட்டிரும்.

அதனால விளைச்சல் கடுமையா பாதிக்கும். இயற்கை ஒத்துழைச்சா மர முருங்கையில நல்ல வருமானம் கிடைக்கும். கூடவே நல்ல விலையும் இருந்துட்டா ரொம்ப சந்தோசமா இருக்கும்.

கூலி அதிகமாகிப் போச்சு, ஆட்களும் வேலைக்குக் கிடைக்கிறதில்ல. தண்ணியும் போதுமானதா இல்ல, இடுபொருள்கள் விலையும் உசந்துக்கிட்டே போகுது. இப்படிப்பட்ட சூழ்நிலையில, பெருசா பராமரிப்புச் செலவு இல்லாம, அதிகமான ஆட்கள் தேவை இல்லாம, பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வருமானம் தரக்கூடியது இந்த மர முருங்கை.

இந்த மரங்கள் பெருசாகி நிலம் முழுசும் நிழல் தர்ற வரைக்கும், இந்த நெலத்துல நெலக்கடலை, வெங்காயம், பயறு வகைன்னு ஊடுபயிர்களை சாகுபடி பண்ணலாம். இதனால இன்னொரு வருமானம் கிடைக்கும்.

இந்த விவசாயத்துல ஏதாவது சிக்கல்ன்னா, தேனி காமாட்சிபுரத்துல இருக்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகுவோம். முடிஞ்சா அவங்க நம்ம நிலத்துக்கே வந்து பார்த்து ஆலோசனை தருவாங்க.

எங்களுக்கு இந்த ஒரு ஏக்கருல இருந்து ஏழு அல்லது எட்டு டன் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ முருங்கைக்காய் சராசரியா நாற்பது ரூபாய்க்கு விற்றாலும் மொத்த வருமானமா ஒரு மூணு இலட்ச ரூபா வரையில கிடைக்கும்.

இதுல பராமரிப்புச் செலவு, அறுவடை, போக்குவரத்துச் செலவுன்னு பாதி ரூபா போயிட்டாலும் பாதி ரூபா மிச்சமாகும். விலை குறஞ்சு போயிட்டா வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போகும். அப்புறம் அடுத்த சாகுபடிக்கும் சரி, பொழப்புக்கும் சரி கடன் தான் வாங்கணும்.

அதனால, நெல்லுக்கும் கரும்புக்கும் அடிப்படை விலையை நிர்ணயம் செய்யிறதைப் போல, எல்லா விவசாயப் பொருள்களுக்கும் கட்டுபடியான அடிப்படை விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்யணும். ஏன்னா இயற்கையை நம்பித் தான் விவசாயம் நடக்குது.

விவசாயிகளை இயற்கை ஏமாத்துது, இல்லேன்னா நல்ல விலை கிடைக்க மாட்டேங்குது. இந்த ரெண்டுலயும் இருந்து விவசாயிகள் தப்பிச்சு, தொடர்ந்து விவசாயத்தைச் செய்யணும்ன்னா இந்த அடிப்படை விலைங்கிறது அவசியம். இதை அரசாங்கம் செஞ்சு குடுக்கணும்’’ என்றார்.

இரா.கோதண்டராமனின் கோரிக்கை நிறைவேற வாழ்த்தி விடை பெற்றோம். 


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!