பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்?

பட்டாசு HP Copy e1611697581257

விநாயகா சோனி பயர் வொர்க்ஸ் குழும அதிபர்கள் கார்வண்ணன், கணேசன் விளக்கம்!

ழையில் குளித்த மண்ணும், மரங்களும், செடி கொடிகளும், ஈரம் பொதிந்து கிடக்கும் ஐப்பசி மாதம். இது பனியின் தொடக்கமாகவும் இருப்பதால் குளிருக்குச் சொல்லவே வேண்டாம்; அடைமழையும் இருந்தால் அவ்வளவு வாடையிருக்கும். பாம்பைப் போல உடலைச் சுருட்டி இறுக்கிப் போர்த்தித் தூங்கும் இந்த மாதத்தில் கொண்டாடப்படும் கதகதப்பான திருவிழா தீபாவளி. அதிகாலையில், வீட்டுக்கொல்லை விறகடுப்பில் காய்ந்து கிடக்கும் வெந்நீரில் எண்ணெய்க் குளியல்; ஆசையாய் அணியப் புதுத் துணிகள்; இனிப்புகள், பலகாரங்கள், சுவையான உணவுகள், பட்டாசுகள், தலைத் தீபாவளி மாப்பிள்ளைகள் நிறைந்திருக்கும் பண்டிகை.

பட்டாசு இல்லையெனில் தீபாவளி இனிப்பு இனிக்காது; உணவு ருசிக்காது. ஐந்து வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரையில் விரும்புவது, தீபாவளி நாளில் தீப ஆவளியாய் ஒளிரும் பட்டாசுகள். சிறுவர்க்கும் பெரியோர்க்கும், சடசடக்கும் கம்பி மத்தாப்பு, சரசரக்கும் தரைச்சக்கரம், புஸ்ஸென்று ஒளிரும் கும்ப வாணம், ஓலைவெடி, பாம்பு மாத்திரை, பொட்டுக் கேப்பு, சுருள் கேப்பு; அச்சமறியா இளைஞர் கூட்டத்துக்குச் சீனிவெடி, ஓசைமிக்க யானை வெடி, குதிரை வெடி, இலட்சுமி வெடி, சரஸ்வதி வெடி, அணுக்குண்டு என, நம் வாழ்க்கையுடன் இணைந்து விட்ட பட்டாசுகள்.

சீனாவில் ஓர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நெருப்பில் விழுந்த சமையல் உப்புத்துண்டு கக்கிய தீப்பொறி தான் பட்டாசு உற்பத்தியின் மூலக்கூறு. இவ்வகையில் பட்டாசின் பிறப்பிடமாகச் சீனம் விளங்கினாலும் இதன் பயன்பாடு இன்று உலகெங்கும் நிறைந்துள்ளது. தமிழ்நாட்டின் சிவகாசிப் பகுதியில் 1914 ஆம் ஆண்டில் பட்டாசு உற்பத்தித் தொடங்கப்பட்டது.

கால ஓட்டத்தில் இங்கே பட்டாசு உற்பத்தி ஆலைகள் பெருகியதால், குட்டி ஜப்பான் என்று சிவகாசியைப்  பெருமைப்படுத்தினார், பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு. இன்று சிவகாசிப் பகுதியில் உள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுமார் எட்டு இலட்சம் பேருக்கு வாழ்க்கை ஆதாரமாக விளங்குகின்றன. தீபாவளியின் போது மட்டுமே பயன்பட்டு வந்த இந்தப் பட்டாசு, இப்போது அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பிடித்து விட்டது. அதனால், ஒருசில மாதங்கள் மட்டுமே இயங்கி வந்த பட்டாசு ஆலைகள், இப்போது ஆண்டு முழுவதும் இயங்கி வருகின்றன.

இந்தியாவுக்குத் தேவையான 90 விழுக்காடு பட்டாசுகள் சிவகாசியில் தான் தயாராகின்றன. இதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்படுகின்றன. இந்நிலையில், பட்டாசு வணிகர்கள் சிலர், குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்று, சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ததால், சிவகாசிப் பட்டாசுகள் தேக்கமடைந்தன. இதனால் பட்டாசு உற்பத்தியும், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டன. போதாக்குறைக்கு, பட்டாசுகளை வெடிப்பதால், சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக வழக்கும் தொடுக்கப்பட்டது.

இப்படி நெருக்கடிக்கு மேல் நெருக்கடி ஏற்பட்டதால், நிலைகுலைந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலைகளை மூடினார்கள். இதனால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்கள் வேலை கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். பட்டாசு உற்பத்தி இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில், பட்டாசு உற்பத்திக்குத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டுமென்றும், ஆபத்து நிறைந்த பட்டாசுகளை வெடிக்கக் கூடாதென்றும் ஆணையிட்டதுடன், பட்டாசுகளை வெடிப்பதற்குச் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.

பட்டாசு 3Q2A3132 Copy e1611696962748

இதனால், போன உயிர் திரும்பி வந்த கதையாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட பட்டாசு ஆலை அதிபர்கள், தங்கள் தொழிலை மீண்டும் செய்யத் தொடங்கினர். இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் சுற்றுச்சூழலை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருக்காது என்கிறார், விநாயகா சோனி பயர் வொர்க்ஸ் குழும இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் பஞ்சுராஜன். அவரை, சிவகாசியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

சுற்றுச்சூழலை மனதில் வைத்துப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதையும், அதில் கையாளப்படும் பாதுகாப்பு நடைமுறைகளையும் நாம் நேரில் கண்டு, உண்மையை விளக்கி எழுத வேண்டும் என்று நம்மிடம் கேட்டுக் கொண்டவர், நம்மை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே ஆலமரத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலைக்கு அழைத்துச் சென்றார்.

குறைந்து போன வெப்பம்

தொழிற்சாலைக்குள் கார் நுழைந்த போது, வெளியில் இருந்த வெய்யிலின் கடுமை குறைவாக இருந்ததை உணர முடிந்தது. அதற்குக் காரணம் அங்கிருந்த வேப்ப மரங்கள். நூற்றுக்கணக்கான வேப்ப மரங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே, நான்கு வாசல்களைக் கொண்ட அறைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் நான்கு தொழிலாளர்கள் வீதம் வேலை செய்து கொண்டிருந்தனர்.

முதலில் ஓர் அறைக்குச் சென்றோம். அங்கிருந்த தொழிலாளர்கள் வானத்தில் போய் வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பணியைப் பார்வையிட்டு, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய கணேசன் பஞ்சுராஜன், அந்தப் பட்டாசுத் தயாரிப்பைப் பற்றி நம்மிடமும் விளக்கினார்.

அதைத் தொடர்ந்து அங்குக் காய வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளைப் பார்த்து விட்டு அருகிலிருந்த மற்றொரு குடிலுக்குச் சென்றார். அங்குச் சீனி வெடிகள் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து விட்டு அருகில் காய்ந்து கொண்டிருந்த சங்குச் சக்கரங்களைப் பார்வையிட்டார். பிறகு ஆலைக்குள் நடந்து கொண்டே பட்டாசுத் தொழிலைப் பற்றி நம்மிடம் விளக்கினார்.

எட்டு இலட்சம் மக்களின் வாழ்க்கை

“இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் சுமார் 95 சதவீதப் பட்டாசுகள் நமது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு மொத்தம் 1070 சிறு, குறு, பெரிய பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுமார் ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் இந்தப் பட்டாசுத் தொழிலைச் சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். இப்படிச் சுமார் எட்டு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்தப் பட்டாசுத் தொழில்.

தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களைப் பின்தங்கிய மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று விருதுநகர், மற்றொன்று இராமநாதபுரம். ஏனெனில், இந்த மாவட்டங்களில் மழை மிகவும் குறைவாகப் பெய்வதால், விவசாயமும் சொல்லும்படி இல்லை; பெரியளவில் தொழிற்சாலைகளும் இல்லை.

பட்டாசுத் தொழிலும் இடர்களும்

சிவகாசியில் பட்டாசுத் தொழில் 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்கப்பட்ட இந்தப் பாரம்பரியத் தொழிலுக்கு அவ்வப்போது ஒன்றன்பின் ஒன்றாகச் சோதனைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. முதலில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பட்டாசுத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகப் புகார் எழுந்ததால், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை தலைவிரித்து ஆடியது. ஆனால் இன்று இந்தத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர் என ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மை.

மத்திய அமைச்சரின் நல்லெண்ணம்

அதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு இந்தப் பட்டாசுத் தொழிலுக்கு மத்திய கலால் வரி விதிக்கப்பட்டதால் பட்டாசுகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பட்டாசு விற்பனை மந்த நிலைக்குச் சென்றது. அதிலிருந்து மீள்வதற்குள் சீனப்பட்டாசு என்னும் பேரிடி விழுந்தது. அந்த நேரத்தில் தொழிற்துறை இணையமைச்சராக இருந்த,  தற்போதைய நமது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்கள், இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பினார். அதில், துறைமுகங்களில் இறக்கப்படும் அனைத்து கன்டெய்னர்களையும் சோதனை செய்து சீனப் பட்டாசுகளைப் பெருமளவில் தடுத்தார். ஆனால், தற்போது இந்தியாவில் இந்தச் சீனப் பட்டாசுகளின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

உயிர்த்தெழுந்த பட்டாசுத் தொழில்

அதன் பின், பட்டாசுகளால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை என்று அறிவித்தது. இப்படித் தனக்கு வந்த சோதனைகள் அனைத்தையும் வென்று, பீனிக்ஸ் பறவையாகத் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பட்டாசுத் தொழில்’’ என்று சொல்லிக் கொண்டிருக்க, அங்கே மிதிவண்டியில் வந்த இளைஞர் நம்முடன் இணைந்தார்.  

பட்டாசு 3Q2A3160 Copy e1611697079168

“இவர் என்னுடைய மகன். பெயர் அமர்நாத் கணேசன். இப்போது தான் வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறார். என்னுடன் சேர்ந்து இவரும் இந்தப் பட்டாசுத் தொழிலைக் கவனித்து வருகிறார்’’ என்று அறிமுகம் செய்து வைத்த கணேசன் பஞ்சுராஜன், அங்கிருந்த பெரிய பட்டாசுகள் சேமிப்புக் கிடங்குக்குள் நம்மை அழைத்துச் சென்றார். முழுமையாகத் தயாரித்து முடிந்த பட்டாசுகளை அங்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டே நம்மிடம் மீண்டும் தொடர்ந்தார்.

அரசுகள் மற்றும் நீதிமன்றங்களின் ஆதரவு

“கடந்த 2015 ஆம் ஆண்டு, காற்று மாசை உண்டாக்குவதில் பட்டாசு முக்கியப் பங்கு வகிப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசடைவதில்லை என்று கூறி விட்டது. அதன் பின்னர், பட்டாசுகளை வெடிப்பதால் ஒலி மாசு ஏற்படுவதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டதன் அடிப்படையில், பட்டாசின் ஒலியளவு 125 டெசிபலுக்கு மேல் இருக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இன்றுவரை 125 டெசிபல் ஒலியளவில் தான் பட்டாசுகளைத் தயாரித்து வருகிறோம்.

நமது பட்டாசும் சீனப் பட்டாசும்

பட்டாசை வெடிக்கும் போது நச்சு வாயு எதுவும் வெளியாவது கிடையாது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் காற்றில் பரவும். இவற்றைக் கட்டுப்படுத்த, பசுமைப் பட்டாசு என்னும் புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறோம். உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள ஆறு இரசாயனப் பொருள்கள், இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளில் இந்தப் பொருள்கள் உள்ளன.

இவற்றை வெடிக்கும் போது வெளியாகும் புகை, குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதிக்கும். சீனப் பட்டாசுகளைக் கையாள்வது பாதுகாப்பற்றது. சில்வர் பல்மனைட் என்னும் விஷத் தன்மையுள்ள இரசாயனப் பொருள், சீனப் பட்டாசுகளில் அதிகளவில் உள்ளது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஒலியும் புகையும் அதிகமாக இருக்கும். இந்தப் பட்டாசுகள் பிளாஸ்டிக் போன்ற பொருள்களால் செய்யப்படுகின்றன.

ஆனால் நாம் அரசு விதிகளின்படி, ஒலியளவும், புகையளவும் இருக்கும் வகையிலேயே பட்டாசுகளைத் தயாரிக்கிறோம். மேலும், காகிதம், காகித அட்டைகள், சணல், மணல் உள்ளிட்ட, சூழலுக்குப் பாதிப்பில்லாத, மண்ணில் மட்கும் பொருள்களால் தான் தயாரிக்கிறோம். எனவே, நமது பட்டாசுகளால் எந்தவிதக் கேடும் இல்லை’’ என்று சொல்லிக் கொண்டிருக்க, அவரது மூத்த சகோதரரும் விநாயகா சோனி பயர் வொர்க்ஸ் குழும நிர்வாக இயக்குநருமான கார்வண்ணன் பஞ்சுராஜன் மற்றும் அவரது மகன் அபிஷேக் கார்வண்ணன் ஆகியோர் அங்கு வந்தனர்.

இந்நிலையில், ஆய்வுக்காக வந்த அரசு அலுவலர்களிடம் கணேசன் பஞ்சுராஜன், கார்வண்ணன் பஞ்சுராஜன் ஆகியோர் இருக்க வேண்டிய நிலையில், பட்டாசுத் தொழிலில் உள்ள பாதுகாப்பு முறைகளைப் பற்றி, அமர்நாத் கணேசனும், அபிஷேக் கார்வண்ணனும் நம்மிடம் விளக்கினர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

“இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையில் ஆங்காங்கே சிறு சிறு அறைகள் இருப்பது ஏன் என்னும் கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் அங்கே தான் தொழிலாளர் பாதுகாப்புக்கான நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு உற்பத்தி அறையிலிருந்து மற்றொரு உற்பத்தி அறைக்கான இடைவெளி 12 மீட்டர். உற்பத்தி அறைக்கும் மருந்துக் கலவை அறைக்கும் உள்ள இடைவெளி 18 மீட்டர். உற்பத்தி அறைக்கும் இரசாயனக் கலவை இருப்பு அறைக்கும் உள்ள இடைவெளி 37 மீட்டர். உற்பத்தி அறைக்கும் பட்டாசுத் திரிகள் உள்ள அறைக்குமான இடைவெளி 27 மீட்டர். தொழிற்சாலையின் உள்பாதுகாப்பு தூரம் 45 மீட்டர்.

ஒரு அறையில் நான்கு வாசல்கள் இருக்கும். இந்த வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கும். ஒரு அறையில் விபத்து ஏற்பட்டால் அது அடுத்த அறையை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில், ஒவ்வொரு அறையின் வாசல்களும் மாறிமாறி அமைக்கப்பட்டிருக்கும். ஒரு அறையில் 4 பேர் மட்டுமே வேலை செய்வார்கள். இந்த அறைகளில் மின்சாரம் இருக்காது. தொழிலாளர்கள் செல்போன்களைப் பயன்படுத்த மாட்டார்கள். ஆங்காங்கே மணல் மற்றும் நீர் நிரப்பப்பட்ட வாளிகள் இருக்கும்.

பட்டாசு விபத்துக்குக் காரணம் 

பட்டாசுத் தொழிலைப் பொறுத்தவரை விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் உராய்வுகள் தான். 95 சதவீத விபத்துகள் இந்த உராய்வுகள் மூலம் தான் ஏற்படுகின்றன. உராய்வைத் தடுக்கும் நடவடிக்கைகளை எவ்வளவு எடுக்கிறோமோ அவ்வளவில் விபத்துகளைத் தடுக்கலாம். எனவே, உராய்வுகளைத் தடுக்க, பல வழிகளில் முயற்சி செய்து வருகிறோம். எங்களின் முக்கியமான வேலை, இங்குள்ள எங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை  மேம்படுத்துவது தான்’’ என்றனர்.

முடக்க முயற்சி

அதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்த கார்வண்ணன் பஞ்சுராஜன், “தற்போது பாரம்பரியப் பட்டாசுகளில் இருந்து மாறி, புதுமையான, வண்ண வண்ணப் பட்டாசுகளைத் தயாரிக்கும் அளவில் வளர்ந்து விட்டோம். பட்டாசு வெடிக்கும் போது வெளியில் பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள், அதாவது, நமது தலை முடியின் கனத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருக்கும் நுண் துகள்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் பட்டாசு உற்பத்திக்கு எதிராக, நீதிமன்றத்தில் பல வழக்குகளைப் போட்டு, கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். பட்டாசுத் தொழில் ஆபத்தானது, சுற்றுச்சூழலைக் கெடுப்பது என்றெல்லாம் சொல்லி முடக்கப் பார்க்கிறார்கள்.

புகையில்லாப் பட்டாசுகள்

எனவே தற்போது அந்த நுண் துகள்களைக் கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் மற்றும் நாக்பூரில் உள்ள தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளின் உதவியோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் இந்த நுண் துகள்களைக் குறைப்பதுடன், புகையே இல்லாத பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

பட்டாசு 3Q2A3149 Copy e1611697234810

சாதனை

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய கணேசன் பஞ்சுராஜன், இந்தத் தொழிற்சாலை சுமார் 60 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கே 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதைப்போல் எங்களுக்கு 13 தொழிற்சாலைகள் உள்ளன. எங்களது தந்தை பஞ்சுராஜன் இந்த ஆலையை எங்களிடம் கொடுத்த போது 2 அறைகள் மட்டுமே இருந்தன. அதைத் தொடர்ந்து நானும் எனது அண்ணனும் கடுமையாக உழைத்து, இதை நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுத் தயாரிப்பு அறைகளைக் கொண்ட ஆலையாக உயர்த்தியுள்ளோம் என்பதுடன், இதைப்போல 13 புதிய ஆலைகளையும் உருவாக்கி இருக்கிறோம்’’ என்று பெருமையுடன் சொன்னார்.

தினமும் சோதனை

அப்போது நாம் அவரிடம், “நீங்கள் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பீர்களா?’’ என்றதும் கலகலவெனச் சிரித்தவாறே, “எங்களுக்குத் தினமும் தீபாவளி தான். எங்கள் ஆலைகளில் தயாராகும் பட்டாசுகளை, தினமும் மாலையில் வெடித்துச் சோதித்துப் பார்ப்போம். இவ்வகையில் தினமும் இலட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வெடித்துச் சோதிப்போம். இப்படி ஓராண்டில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளைச் சோதித்துப் பார்ப்போம்’’ என்றவர், “நாம் இப்போது பட்டாசுகளை வெடித்துச் சோதிப்பதைத் தான் பார்க்கப் போகிறோம்’’ என்றார்.

அப்படியே நடந்து அந்தத் தொழிற்சாலையின் கடைசிப் பகுதியை அடைந்தோம். அங்கே அனைத்து ஆலைகளிலும் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆலைகளின் கண்காணிப்பாளர்களும் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் அந்தப் பட்டாசுகள் வெடித்துச் சோதிக்கப்பட்டன. அப்போது சரியாக வெடிக்காத பட்டாசுகள், வெடித்துக் கீழே விழும் பட்டாசுகள் ஆகியவற்றில் செய்ய வேண்டிய சரியான திருத்தங்களை, கணேசன் பஞ்சுராஜனும், கார்வண்ணன் பஞ்சுராஜனும் கண்காணிப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்தச் சோதனைக்குப் பின், மீண்டும் ஆலை அலுவலகத்தை அடைந்தோம்.   

தொடர்ந்து நம்மிடம் பேசிய கணேசன் பஞ்சுராஜன், “பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் விஷயத்தில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரிகளை அணுகும் போது, அவர்கள் எங்கள் ஆலோசனைகளை ஏற்றுப் பரிசோதித்து, அவற்றை விதிகளாகவும் ஆக்கி உறுதுணை புரிந்து வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் பேருதவி

மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பட்டாசுத் தொழிலுக்கு எதிரான வழக்கில், மாண்புமிகு நமது தமிழக முதலமைச்சர் அவர்கள், அனுபவமிக்க வழக்கறிஞர்களை நியமித்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, பட்டாசுத் தொழிலையும், இதை நம்பியுள்ள எட்டு இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் பாதுகாக்கும் வகையில், எங்களுக்குப் பேருதவி புரிந்து வருகிறார்.

பாசமுள்ள அமைச்சர்

அவருடன் இணைந்து, எங்கள் மண்ணின் மைந்தரும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்களும் பேருதவி புரிந்து வருகிறார். ஒருமுறை இந்த வழக்குக்காக நாங்கள் டெல்லிக்குச் சென்றபோது, தனக்கிருந்த கடும் காய்ச்சலையும், டெல்லிக் குளிரையும் பொருட்படுத்தாமல் எங்களுடன் வந்து, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆலோசனைகளை வழக்கறிஞர்களிடம் கூறியதுடன் அவரும் ஆலோசனைகளை வழங்கியது, தன் மண்ணில் வாழும் மக்கள் மீது அவர் கொண்டுள்ள பாசத்தைக் காட்டுவதாக இருந்தது.

பட்டாசு 59571896 858776987823710 1621539429153767424 n

நன்றிக்கு உரிய தலைவர்கள்

இப்படி, பட்டாசுத் தொழிலையும், எட்டு இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பதில், எங்களுக்குத்துணையாக இருந்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி, மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பிலும், எட்டு இலட்சம் தொழிலாளர்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்கள் சார்பில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியப் பங்கு வகிப்பது பட்டாசு. அந்த வகையில் மத, இன, மொழி வேற்றுமையைக் கடந்து அனைவரையும் இணைப்பது இந்தப் பட்டாசு தான்’’ என்று முடித்தார்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் நம் வாழ்க்கையோடு கலந்து விட்ட பட்டாசுகளால் நன்மையா தீமையா என்று ஆராய்ச்சி செய்வதை விட, அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதே சாலச் சிறப்பாக இருக்கும்.


மு.உமாபதி

படங்கள்: ஈஸ்வரன்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!