வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆடு, மாடுகளுக்கு மழைக் காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைக்கும். இதுவே கோடையில் கடும் தட்டுப்பாடாக இருக்கும். போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலையில், உற்பத்திக் குறைந்து விடும். இதனால் வருமானமும் குறையும். மேலும், இனப்பெருக்கமும் சீராக இருக்காது.
இவற்றுக்குத் தீர்வாக அமைவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு. அதாவது, மழைக்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் பசுந்தீவனத்தைக் காற்றுப் புகாத இடத்தில் முறையாகச் சேமித்து, கோடைக்காலத்தில் பச்சைத் தீவனமாகவே வழங்கும் உத்தி.
இதற்குத் துளையில்லாத தண்டுள்ள தீவனப்பயிர்கள் மிகவும் ஏற்றவை. இவ்வகையில், சோளம், மக்காச்சோளம், கோதுமை மற்றும் பயறு வகைத் தீவனப் பயிர்களை ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம். இந்தப் பயிர்களின் கதிர்கள், பால் அல்லது மாவுப்பதத்தில் இருக்கும் போது அறுவடை செய்தால், தரமான ஊறுகாய்ப் புல்லாக இருக்கும். கம்பு நேப்பியர் ஒட்டுப் புற்கள் என்றால், 45 நாட்கள் வளர்ந்த புல்லைப் பயன்படுத்தலாம். சாதாரணப் புல்லையும் ஊறுகாய்ப் புல்லாகத் தயாரிக்கலாம்.
இந்தப் பசுந்தீவன வகைகளை அறுவடை செய்து குழியில் இட்டு அல்லது குவித்து வைத்து, வைக்கோலாலும், அதற்கு மேல் நெகிழித் தாளாலும் மூடி வைத்தால் சுமார் ஆறு வாரங்களில் ஊறுகாய்ப் புல்லாக மாறி விடும். இருபது அடி நீள, அகல, ஆழமுள்ள குழியில் சுமார் 50 டன் ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்க முடியும்.
புல்லின் தரத்தை மேம்படுத்த, நான்கு பங்கு புல், ஒரு பங்கு தட்டைப் பயற்றஞ் செடிகள் வீதம் கலந்து வைக்கலாம். அல்லது ஒரு டன் தீவனத்தில் 20 கிலோ வெல்லப்பாகு, 5 கிலோ உப்பைக் கலந்து வைக்கலாம். மேலும், 1% சுண்ணாம்பு, 1% சோடியம் மெட்டா பைசல்பைட் புரொப்பியோனிக் மற்றும் ஃபார்மிக் அமிலத்தைச் சேர்க்கலாம்.
தங்கப் பழுப்பு நிறம் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறமாக இருத்தல், இனிய பழவாசம் அடித்தல் ஆகியன, ஊறுகாய்ப்புல் தரமாக உள்ளதன் அடையாளம் ஆகும். கொஞ்சம் அமிலச்சுவை இருப்பதும், இனிய மணமும் ஆடு மாடுகளுக்குப் பிடிக்கும். ஊறுகாய்ப் புல்லாக மாற்றுவதால் 4% வரை சத்து மதிப்புக் கூடும். கார அமிலத் தன்மை 4.0-4.5 இருக்கும். மற்ற அமிலங்களை விட இலாக்டிக் அமிலம் அதிகமாக இருக்கும்.
எனவே, மழைக்காலத்தில் மிகுதியாகக் கிடைக்கும் பச்சைத் தீவனத்தை வீணாக்காமல், ஊறுகாய்ப் புல்லாக மாற்றிக் கால்நடைகளுக்குக் கொடுத்தால், உற்பத்தி பெருகும்; கால்நடைகளை வளர்ப்போரின் வாழ்க்கை வளமாக இருக்கும். மேலும், விவரமாக அறிய, அருகிலுள்ள கால்நடை மருத்துவர்களை அணுகலாம்.
ஆசிரியர்