வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய முடிந்தவர்கள் மட்டுமே விவசாயத்தில் நிலைத்து நிற்கிறார்கள். ஒன்று நீரில்லை; மற்றொன்று கூலி கொடுத்து மீள முடியவில்லை; அடுத்தது போதிய விலையில்லை. இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா இல்லையா என்றால், இருக்கிறது என்பது தான் பதில்.
நீரில்லாமல், பயிர் செய்ய வழியில்லாமல் விவசாயத்தை விட்டு வெளியேறிய நான், தமிழகத்தின் வறட்சி மாவட்டமான வேலூரைச் சுற்றிப் பார்த்த போது வியந்து போனேன். எங்குப் பார்த்தாலும் தென்னை மரங்கள், மாமரங்கள் எனத் தோப்புகள் தோப்புகள்! மரப் பிள்ளைகளை ஒன்றிரண்டு ஆண்டுகள் வளர்த்து விட்டால், அவர்கள் காலமெல்லாம் நம்மைக் காப்பாற்றுவார்கள். பெய்யும் மழைநீர் அவர்களுக்குப் போதும். அந்த நீரைக்கொண்டே அவர்கள் வாழ்வது மட்டுமல்லாமல், அந்த நீரை நிலத்தடி நீராகச் சேமித்தும் வைப்பார்கள். ஆக, நீரில்லை என்று விவசாயத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை.
நீடித்த வேளாண்மை நிலைத்த வேளாண்மை மாசற்ற வேளாண்மை அது மரப்பயிர் வேளாண்மை என்னும் பசுமைமொழி சொல்வது போல, நிலைத்த வேளாண்மையைச் செய்து விட்டால் அங்கே அடிக்கடி வேலையாட்கள், அதிக வேலையாட்களுக்கு அவசியமில்லை. குடும்ப உறுப்பினர்கள் போதும். ஆக, வேலையாட்கள், அதிகக் கூலி என்று சொல்லி விவசாயத்தை விட்டு விலகத் தேவையில்லை.
உங்கள் நிலத்தில் பத்து தென்னை மரங்கள் இருக்கட்டும். பத்து மாமரங்கள், பத்து கொய்யா மரங்கள், பத்து புளிய மரங்கள் இருக்கட்டும். பத்து எலுமிச்சை மரங்கள், பத்து இலவம் மரங்கள், பத்து நெல்லி மரங்கள் இருக்கட்டும். பத்து பலா மரங்கள், பத்து சப்போட்டா மரங்கள் இருக்கட்டும். பத்துக் கொடுக்காய்ப்புளி மரங்கள் இருக்கட்டும். ஒவ்வொன்றாக, மாறி மாறிக் காய்த்துக் கொண்டே இருக்கும். இடைத் தரகர்களின்றி நாமே விற்பனையில் ஈடுபடலாம். இதனால், கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என்று, விவசாயத்தை விட்டு வெளியேறத் தேவையில்லை.
இந்த மரங்களின் ஊடே பணப்பயன் மிகுந்த தேக்கு, குமிழ்தேக்கு, மகாகனி போன்ற மரங்களையும் வளர்க்கலாம். இவை மட்டுமல்ல, இந்தச் சோலை வனத்தில் ஆடு வளர்க்கலாம், மாடு வளர்க்கலாம், கோழி வளர்க்கலாம், காடை வளர்க்கலாம். கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம், காளானும் வளர்க்கலாம், கலப்புப் பண்ணையாய் ஆக்கலாம். கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம் என்பது பசுமை மொழி மட்டுமல்ல, உழவர்களின் செழுமை மொழியுமாகும்.
ஆசிரியர்