சுத்தமான வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?

வெண்ணெய் Organic Farming

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வேளாண்மை செழிக்க, நீர்வளம் அவசியம். போதியளவில் மழை பெய்யாமல் போவதும், நிலத்தடி நீர் வற்றிப் போனதும், கடந்த பல ஆண்டுகளாகவே நீடித்து வருகின்றன. எனவே, சீரான வேளாண்மையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அவர்களின் நிலங்களைத் தரிசாகப் போட்டு விட்டு, மாற்றுப் பிழைப்பைத் தேடி நகரங்களை நோக்கிச் சென்றபடி உள்ளனர்.

படப்போடு தின்ற மாட்டுக்கு அள்ளிப் போட்டால் போதாது என்பதைப் போல, வாய்க்கால் நிறைய நீரை விட்டுப் பாசனம் செய்த விவசாயிகள், அந்தளவில் நீர் இல்லையென்று ஆனதும், இனி விவசாயமே செய்ய முடியாது என்று, மாற்றுத் தொழிலைத் தேடி வெளியூர்களுக்குச் சென்று கொண்டே இருப்பதால், அவர்களின் நிலங்கள் எல்லாம், சீமைக்கருவேல முள் காடுகளாக மாறி வருகின்றன.

ஆனால், கொஞ்ச நீரிலும் சிறப்பாக வளர்ந்து பயன்படும் மர வகைகளை வளர்த்தால், அவர்கள் நிறைய நீர்விட்டு விவசாயம் செய்த காலத்தில் வாழ்ந்ததை விடச் சிறப்பாக வாழலாம் என்பது உண்மையிலும் உண்மை ஆகும்.

எவ்வளவு வறட்சி வந்தாலும் வாழ்ந்து காட்டுவது புளிய மரம். மழைக் காலத்தில் கன்றுகளை நட்டு விட்டால், அந்த மழை நீரிலேயே மரங்களாக வளர்ந்து காலமெல்லாம் நம்மை வாழ வைக்கும். பாசனமே தேவையில்லை. அதிலும் இப்போது ஒட்டுக் கன்றுகள் வந்து விட்டன. கன்றுகளை நட்டுக் கொஞ்சம் பராமரித்தால் போதும். மூன்று ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி, ஏழெட்டு ஆண்டுகளில் முழுக் காய்ப்புக்கு வந்து விடும்.

பி.கே.எம்.1, உரிகம் போன்ற ஒட்டுக் கன்றுகள் சிறந்த மகசூலைத் தருகின்றன. மூன்றடி நீள, அகல, ஆழத்தில் ஆழத்தில், பத்து மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுத்து ஆற விட்டு, தொழுவுரம், மணல் மற்றும் குழி மண்ணைக் கலந்து குழிகளில் இட்டுக் கன்றுகளை நட வேண்டும். கன்று நடவுக்கு மழைக்காலமே மிகவும் ஏற்றது. நீர்த் தேங்காமல் இருக்க வேண்டும்.

மிகவும் அக்கறையுடன் வளர்க்க விரும்பினால், நட்ட ஆறு மாதம் கழித்து, செடிக்கு 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு 50 கிராம் மண்புழு உரம். 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் மற்றும் கியூமிக் அமிலத் துகளை இடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இன்னும் விரைவாக வளர, ஒரு கிலோ புண்ணாக்குக்கு 40 லிட்டர் நீர் வீதம் கலந்து செடிக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றலாம். காய்க்கும் மரங்களுக்கு வேப்பம் புண்ணாக்கை இட்டால் மகசூல் பெருகும். பி.கே.எம்.1 புளிய மரம் ஒன்பதாம் ஆண்டில் 400 கிலோ பழங்களைக் காய்க்கும். இதற்கு மேல் என்ன வேண்டும்? சுத்தமான வெண்ணெய் நம்மிடம் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா என்ன?


ஆசிரியர்

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!