விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

விலங்குகளிடம் இருந்து GettyImages 601905790 5c32e69c46e0fb000115e5ac Copy

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

னிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் விலங்குவழி நோய்கள் எனப்படும். இவை விலங்குகளில் இருந்து காற்று, புழுதி, நேரடித் தொடர்பு, நோய்த் தொற்றுள்ள பொருள்கள், வாய்வழித் தொற்று மற்றும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும். இவ்வகையில், சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த சில நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

அடைப்பான் நோய்

நோய்க்காரணி: இந்நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இக்கிருமி கருக்கூடுகளை உற்பத்தி செய்து பல ஆண்டுகள் வரை மண்ணில் இருக்கும். இந்நேரத்தில் மாசுபட்ட மண்ணை உண்ணும் கால்நடைகளை இக்கிருமிகள் தாக்கும். இந்நோயால் கால்நடைகள் திடீரென இறந்து போகும். இறந்த கால்நடையின் மூக்கு, வாய் மற்றும் மலவாயிலில் உறையாத இரத்தக்கசிவு காணப்படும்.

பரவும் விதம்: இந்தக் கிருமிகள் தோலிலுள்ள காயங்கள், தூசிக்காற்று, இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை இறைச்சியைச் சரியாக வேக வைக்காமல் சாப்பிடுதல் மற்றும் கடிக்கும் பூச்சிகள் மூலம் பரவுகிறது.

தடுப்பு முறை: நோய் நிலவும் பகுதிகளில் கால்நடைகளுக்குத் தடுப்பூசியைப் போடுதல், நோயுற்ற விலங்குகளைத் தனிமைப்படுத்துதல் மற்றும் நோயால் இறந்த விலங்குகளை ஆழமான குழிகளில் புதைத்தல் அல்லது எரித்து விடுதல்.

கன்று வீச்சு நோய்

நோய்க்காரணி: புரூசெல்லா என்னும் நுண்ணுயிரியால் இந்நோய் ஏற்படும். இது ஆடு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைத் தாக்கும். இக்கிருமிகள், சிதைந்த கரு, கருப்பை நீர், தொப்புள் கொடி, இனப்பெருக்கக் கழிவு, நோயுற்ற மாட்டின் பால், சிறுநீர், இரத்தம், விந்து போன்றவற்றில் காணப்படும். இக்கிருமிகள் தாக்கினால் கருச்சிதைவு ஏற்படும். எவ்வித அறிகுறியும் இல்லாமலும் கால்நடைகள் காணப்படும்.

பரவும் விதம்: இக்கிருமிகள் உள்ள பாலைச் சரியாகப் பதப்படுத்தாமல் உண்ணுதல், இவை தங்கியுள்ள கரு மற்றும் நஞ்சுக்கொடியைக் கையாளுதல், தோல் காயங்கள், கண் மற்றும் வாயிலுள்ள சவ்வுப்படலம் மூலம் மனித உடலில் நுழையும்.

நோய் அறிகுறிகள்: நிலையற்ற காய்ச்சல், உடல் பலவீனம், தலைவலி, மூட்டுவலி மற்றும் இரவில் வியர்த்தல்.

தடுப்பு முறை: பதப்படுத்தாத பால் பொருள்களை உண்ணாமல் இருத்தல், பாதிக்கப்பட்ட மாடுகள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கக் கழிவுகளைக் கையாளும்போது பாதுகாப்புக் கையுறைகளை அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.

டெர்மட்டோஃபிலோசிஸ்

நோய்க்காரணி: இது, டெர்மட்டோஃபிலஸ் காங்கோலென்சிஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும் தோல் நோயாகும். கால்நடைகளில் பரவலாகக் காணப்படும் இக்கிருமிகள், குளம்புச் சிதைவு, தோல் புண்கள், தழும்புகள், ரோம உதிர்வு மற்றும் கம்பளி ரோமத்தில் முடிச்சுகளை ஏற்படுத்தும்.

பரவும் விதம்: பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடித் தொடர்பு வைத்தல் மற்றும் கடிக்கும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்கு மிக அரிதாகப் பரவும். இதனால், தோலில் புண்கள் மற்றும் தழும்புகள் உண்டாகும்.

தடுப்பு முறை: பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கையாளும்போது பாதுகாப்புக் கையுறைகளை அணிதல். கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.

லெப்டோஸ்பைரோசிஸ்

நோய்க்காரணி: இந்நோய், லெப்டோஸ்பைரா பிரிவின் இனங்களைச் சேர்ந்த நுண்ணுயிரிகளால் பல்வேறு விலங்குகளில் ஏற்படுகிறது. இக்கிருமிகள் நீரிலும் மண்ணிலும் பல மாதங்கள் வரையில் உயிருடன் இருக்கும். இவற்றால் தாக்கப்பட்ட மாடுகளில் கருச்சிதைவு, கன்றுகள் பலவீனமாகப் பிறத்தல் போன்றவை நிகழும்.

பரவும் விதம்: இந்நோய், பாதிக்கப்பட்ட விலங்குகளை நேரடியாகக் கையாளுதல், அவற்றின் சிறுநீர், வாய் மற்றும் மூச்சுக்காற்று மூலம் மனிதர்களுக்குப் பரவும். இது, மெலிதான காய்ச்சலில் தொடங்கி, கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாக மாறும்.

தடுப்பு முறை: எலிகளைக் கட்டுப்படுத்துதல், நீர் தேங்குவதைத் தவிர்த்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாப்புடன் கையாளுதல், குளம் குட்டையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.

சுழல் நோய்  

நோய்க்காரணி: இந்நோய் லிஸ்டீரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் நின்ற இடத்திலேயே சுற்றுதல், தடுமாற்றம், ஒருங்கிணைப்பின்மை, மெல்லுதல் மற்றும் விழுங்க முடியாமை, கருச்சிதைவு போன்றவை நிகழும்.

பரவும் விதம்: இக்கிருமிகள், கெட்டுப்போன அல்லது சரியாகப் பதப்படுத்தப்படாத தீவனத்தை உண்ணுதல் மூலம் கால்நடைகளுக்குப் பரவும். பொதுவாக, இந்நோயை எதிர்க்கும் தன்மை மனிதர்களுக்கு உள்ளது. ஆயினும் நோய் எதிர்ப்புத்திறன் இல்லாதவர்கள், கர்ப்பிணிகளை இந்நோய் தாக்கும். இக்கிருமிகள் உள்ள இறைச்சி, சரியாகப் பதப்படுத்தப்படாத பாலை உண்பதால் மனிதர்களுக்குப் பரவுகிறது.

தடுப்பு முறை: உணவுப் பொருள்களைக் கழுவிப் பயன்படுத்துதல், இறைச்சியை நன்கு வேக வைத்து உண்ணுதல், சரியாகப் பதப்படுத்தப்பட்ட பால் பொருள்களை உண்ணுதல்.

போலி மாட்டம்மை

இது, பசுக்களின் மடி மற்றும் காம்புகளில் சிறிய கொப்புளங்கள், புண்கள் மற்றும் தழும்புகளை ஏற்படுத்தும் வைரஸால் உண்டாகும் தொற்று நோயாகும். இந்த வைரஸ், கறவையாளர்கள், பால் கறவை எந்திரங்கள் மூலம் பசுக்களிடம் பரவுகிறது. மாட்டம்மையால் பாதிக்கப்பட்ட பசுக்களைக் கையாளுதல் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதனால், கைகள் மற்றும் விரல்களில் வலியுடன் கூடிய புண்கள், அரிப்பு, தழும்புகள் ஏற்படும்.

தடுப்பு முறை: சுத்தமான சூழலில் பாலைக் கறத்தல், பாதிக்கப்பட்ட பசுக்களைக் கையாளும்போது பாதுகாப்புக் கையுறைகளை அணிதல், பால் கறவைக்குப் பின், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.

க்யூ காய்ச்சல்

கால்நடைகளில் கருச்சிதைவை ஏற்படுத்தும் இந்நோய், காக்ஸியெல்லா பர்னெட்டி என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள், பாதிக்கப்பட்ட விலங்கின் இனப்பெருக்கத் திரவங்கள் மற்றும் சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்கள் மூலம் பரவும். இதனால், காய்ச்சல், இரவில் வியர்த்தல், நுரையீரல் தொற்று, கல்லீரல் ஒவ்வாமை, கருச்சிதைவு போன்ற அறிகுறிகள் மனிதர்களுக்கு ஏற்படும்.

தடுப்பு முறை: இறந்த கருக்கள் மற்றும் இனப்பெருக்கக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல், ஈற்றுக் காலத்தில், பாதுகாப்புக் கையுறைகள் மற்றும் கண்ணாடியை அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், பதப்படுத்தாத பால் பொருள்களைத் தவிர்த்தல்.

படர் தாமரை

இது ட்ரைக்கோபைடான் அல்லது மைக்ரோஸ்போரா என்னும் பூஞ்சையால் ஏற்படும் தோல் நோயாகும். இது பாதிக்கப்பட்ட விலங்குகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது. விலங்குகளில் தோலில் வட்ட வடிவில் முடி உதிர்தல், அரிப்பு, தோல் உரிதல் ஏற்படுகிறது. மனிதர்களில் தோலில் வட்ட வடிவில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது.

தடுப்பு முறை: சுகாதாரமாக இருத்தல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்.

காச நோய்

மைக்கோபாக்டீரியம் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும் இந்நோய், பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூச்சுக்குழல் திரவங்கள், கழிவுகள் மற்றும் பால் மூலம் பரவுகிறது. இதனால், கால்நடைகளில் எடைக்குறைவு, பலவீனம், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சரியாகப் பதப்படுத்தப்படாத பால் பொருள்களை உண்பதால் இந்நோய் மனிதர்களுக்கு உண்டாகிறது. இதனால், நுரையீரல், சிறுநீரகம், மூளை, தண்டுவடம் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. தொடர் இருமல், சளி போன்ற அறிகுறிகள் காணப்படும். தடுப்பு முறை: பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்த்தல்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் பல்வேறு நோய்கள் அதிக பாதிப்பையும், அதிக வீரிய நோய்கள் இறப்பையும் ஏற்படுத்தும். கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இத்தகைய நோய்களால் மிகவும் பாதிக்கின்றனர். எனவே, இந்த நோய்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்க, விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


விலங்குகளிடம் இருந்து LAVANYA C

மரு..லாவண்யா,

இளங்கலை உதவியாளர், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல். 

மரு.ம.சிவக்குமார், கால்நடை மருத்துவர், மாவட்டக் கால்நடைப் பண்ணை, திருநெல்வேலி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!