அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

வனப் பகுதி Valley View Parambikulam 02 e1616507591860

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014

மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால் உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று வெறும் 22 கோடி எக்டர் அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டன. இதைக் கொண்டு, மனிதப் பயன்பாட்டுக்காகக் காடுகள் எந்த அளவுக்கு அழிக்கப்படுகின்றன என்பதை உணரலாம்.

உயிர்க்கோளம் தான் பெற்றிருந்த சூழலியல் பண்புகளில் பாதியளவுக்கும் மேல் ஏற்கெனவே இழந்து விட்டது என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அழிவின் விளிம்பில் நிற்கும் உயிர்க்கோளம் முற்றிலும் அழியாதிருக்க வேண்டுமானால், இயற்கைக் காரணிகளின் பாதுகாப்பில் உலகம் இன்னும் அதிக அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.

உலக நிலப்பகுதியில் 2.5%ஐப் பெற்றுள்ளது நம்நாடு. அதே சமயம் உலக இயற்கை வளத்தில் 6% ஐ விடக் கூடுதலான வளம் இந்தியாவில் உள்ளது. தேசம் பெருமை கொள்ள வேண்டிய இந்த அம்சம், சூழலியல் பாதுகாப்பில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்கு அதிகப் பங்குள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.

அதனால் காடுகளைப் பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் அதிக அக்கறை கொள்கின்றன. இந்தியக் காடுகள் கொள்கை, 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்திலேயே வந்து விட்டது. ஆயினும், நாடு விடுதலை பெற்றபின் 1952 ஆம் ஆண்டில் முதன் முதலில் அதில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுவல்லாது, அவ்வப்போது நாட்டில் புதுப்புதுச் சட்டங்கள் இயற்றப்பட்டு அவற்றுக்கும் செயல் வடிவம் தரப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வனத்துறை உள்ளது. இதன் மூலம், காடுகள் அழிவது, அனுமதியின்றிக் காட்டு மரங்கள் வெட்டப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தடுக்கப்படுகின்றன. டேராடூனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம், காட்டுயிர் மற்றும் மரங்கள் பெறுகின்ற நோய்களைப் பற்றி ஆய்ந்து நிவாரணம் வழங்கி இயற்கைப் பாதுகாப்புக்கு உதவுகிறது.

வனவிலங்கு வாரம், செடி நடுவிழா போன்ற கொண்டாட்டங்களின் வாயிலாகக் காடுகளின் அவசியம் குறித்து மக்களுக்குச் சிறந்த விழிப்புணர்வு தரப்படுகிறது. இவ்வாறெல்லாம் வனப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையிலும், இந்தியாவில் காடுகளின் பரப்பளவு சுருங்கிக் கொண்டே போகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

புயல் காரணமாகக் காட்டு மரங்கள் வீழ்தல், வண்டினங்கள் துளைப்பதால் மரங்கள் பட்டுப்போதல், காட்டுத்தீ பரவுதல் போன்ற இயல்பான காரணங்களை விடவும், நகரமயமாதல், தொழில் பெருக்கம் உள்ளிட்ட அரசின் கொள்கைகளால் தான் இந்தியக் காடுகளின் பரப்பளவு வெகுவாகக் குறைகிறது.

மேலும், அரசின் அனுமதியுடன் அல்லது அனுமதி பெறாமலேயே காட்டு மரங்கள் வெட்டப்படுவதால், காடுகளின் அடர்த்திக் குறைந்து கான்பரப்புச் சுருங்குகிறது. இப்படிக் காடுகள் அழிந்து வருவதால் மட்டும் ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் எக்டர் அளவுக்கும், பிற காரணங்களால் இன்னொரு மில்லியன் எக்டர் அளவுக்கும், உயிர்க்கோளம் தன் சூழலியல் பண்புகளை இழந்து உயிர்வாழத் தகுதியற்றதாக மாறுவதாக அண்மைய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும் இந்தியக் காடுகளின் நிலை பற்றிய அறிக்கை, அண்மையில் கடந்த ஜூலை எட்டாம் நாள் வெளியாகியுள்ளது. இவ்வறிக்கை, 2011-2013 காலக்கட்டத்தில் இந்தியக் காடுகளின் பரப்பளவு முன்பிருந்ததை விட 5,871 ச.கி.மீ. மீட்டர் அளவுக்குக் கூடியிருப்பதாகக் கூறுவது சற்றே ஆறுதலான செய்தி.

இந்தியாவில் பசுமைவள மேம்பாட்டுக்கு வழிவகுத்த மாநிலங்களென, மேற்கு வங்காளம் (3,810 ச.கி.மீ), ஒடிசா (1,444 ச.கி.மீ), பீகார், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகியவற்றை இவ்வறிக்கை சுட்டுகிறது. அதேபோல் பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளும், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் பசுமைவளம் குன்றிவரும் பகுதிகளாகக் குறிப்பிடப் படுகின்றன. இவ்வறிக்கைப்படி, இந்தியாவில் தற்போது 6,97,898 ச.கி.மீ. பரப்பில் காடுகள் அமைந்துள்ளன. இது, இந்தியாவின் மொத்தப் பரப்பில் 21% எனலாம். வரவேற்கத்தக்க செய்தி என நாம் இதைக் கருதும் போது, இவ்வறிக்கை குறித்த சூழலியல் அறிஞர்களின் பார்வை சற்றே மாறுபட்டதாக உள்ளது.

‘ஒரு எக்டர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள முழு வனப்பகுதி மட்டுமின்றி 10% மேற்புறப் பசுமையுள்ள அனைத்துப் பகுதிகளுமே வனப்பகுதிக்கு உரிய தகுதியைப் பெற்றவையாக இந்நிறுவனம் எடுத்துக் கொள்கிறது. அதனால், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான சமூகக் காடுகள், வர்த்தகத் தோட்டங்கள், பழமரப் பகுதிகள், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் ஆகியனவும் பசுங்காடுகளாக ஆகி விடுகின்றன. இதன் அடிப்படையில் தான் இந்தியக் காடுகளின் பரப்புக் கூடியிருப்பதாக இவ்வறிக்கை கூறுகிறது’ என்கிறார்கள் இவர்கள்.

‘இந்தக் காட்டுப் பகுதிகளில் மேற்புறப் பசுமையளவு 70%க்கும் மேலுள்ளவை அடர்வனப் பகுதிகளாகவும், 40%க்கும் 70%க்கும் இடைப்பட்டவை மித அடர்த்தியைக் கொண்டவையாகவும் 40%க்கும் கீழ் பசுமை கொண்ட பகுதிகள் திறந்தவெளிக் காடுகள் எனவும் கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அடர் வனப்பகுதி 64 ச.கி.மீ. அளவுக்கும் திறந்தவெளி வனப்பகுதி 1,769 ச.கி.மீ. அளவுக்கும் அதிகரித்துள்ள அதே சமயம், மித அடர்த்தியைக் கொண்ட காடுகள் 1,701 ச.கி.மீ. அளவுக்குக் குறைந்துள்ளன.

மேலும் தொல்பசுங் காடுகளை ஒட்டி அடர்வனப் பகுதி 33 ச.கி.மீ. அளவுக்கும், மிதவனப் பகுதி 290 ச.கி.மீ. அளவுக்கும் குறைந்துள்ள போது, திறந்தவெளிக் காடுகளின் அளவு 6,062 ச.கி.மீ. அதிகரித்துள்ளது என்கிறது இவ்வறிக்கை. இந்தப் புள்ளிவிவரத்தைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் காடுகள் தம் அடர்த்தியை இழந்து தரம் குன்றிக் கீழ்நிலையை அடைவதைப் புரிந்துகொள்ள முடியும் ’ என்பதும் இவ்வறிஞர்களின் கருத்தாக உள்ளது.

சூழலியல் நிபுணர்களின் இந்தக் கருத்துகளில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், காடுகளின் தரத்தை இன்னும் துல்லியமாக வரையறுக்கும் வகையில், நுண்ணிய அளவுகோல்களை இனிவரும் கணக்கெடுப்புகளில் பயன்படுத்துமாறு இவ்வமைப்பை அறிவுறுத்தியுள்ளது.

எது எவ்வாறாகினும், நாட்டின் அடர்வனப் பகுதிகள் மித அடர்த்தியைக் கொண்டும், மித அடர்த்திக் காடுகள் திறந்தவெளி வனப்பகுதியாகவும் தரமிழக்கின்றன எனில், அங்கே வனவளம் கொள்ளை போகிறது என்றே பொருள். ஆகவே, வனவளப் பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இன்னும் கடுமையாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


வனப் பகுதி Selloor Kannan

கண்ணன் ஸ்ரீஹரி

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!