எங்களைக் காக்கும் கறவைப் பசுக்கள்!

கறவைப் பசு Cow e1612563893734 e6239b6ab0508df25725b01a925afb7b

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

ருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெட்டூரைச் சேர்ந்த பூ.சங்கர்-சித்ரா தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, நல்ல முறையில் கறவைப் பசுக்களை வளர்த்து வருகிறார்கள்.

இதையறிந்த நாம் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பசுக்கள் வளர்ப்பு அனுபவத்தைக் கேட்டோம். அப்போது அவர்கள் கூறியதாவது:

“நாங்க இருபது வருஷமா கறவைப் பசுக்கள வளர்க்குறோம். ஒரு ஐயாயிரம் ரூபா முதலீட்டுல ஒரு மாட்டை வச்சுத்தான் ஆரம்பிச்சோம். இப்போ எங்ககிட்ட இருபது மாடுகள், ஆறு கன்னுக்குட்டிகள் இருக்கு.

எங்ககிட்ட இருக்குறது எல்லாமே எச்.எப்., கறுப்பு, ஜெர்சி மாடுகள் தான். ஒவ்வொரு மாடும் பத்துல இருந்து பதினேழு லிட்டர் பால் வரைக்கும் குடுக்கும். ஐம்பது ஆயிரத்துல இருந்து எழுபது ஆயிரம் ரூபா மதிப்புள்ள மாடுகள். அதனால, ரொம்ப கவனமா வளர்க்கணும். இல்லேன்னா நமக்குத் தான் கஷ்டம்.

அதனால இந்த மாடுகளை எங்க பிள்ளைகளைப் போல வளர்க்குறோம். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கலப்புத் தீவனம் கலந்த தண்ணிய குடுப்போம். அதுக்கு முன்னால கொட்டகையை நல்லா சுத்தம் பண்ணுவோம்.

கொட்டம் சுத்தமா இல்லேன்னா மாடுகள நோய்கள் தாக்க வாய்ப்பிருக்கு. அதனால மாடுக போடும் சாணத்தை அப்பப்போ அள்ளிருவோம்.

காலையில தண்ணி கொடுத்துட்டு மடியை நல்லா கழுவி விட்டு, கறவை இயந்திரம் மூலமா பாலைக் கறப்போம். இந்த வேலை முடிஞ்சதும் கோ.4 தீவனப்புல், வேலிமசால், மக்காச்சோளம், செஞ்சோளத் தட்டையை நல்லா நறுக்கிப் போடுவோம். அப்பத்தான் வீணாகம தட்டையை மாடுகள் சாப்பிடும்.

அப்புறம், மதியத்துல மறுபடியும் கலப்புத் தீவனம் கலந்த தண்ணியும், புல்லும் குடுத்துட்டு, சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல பாலைக் கறப்போம். பாலைக் கறந்து அனுப்பி முடிக்க ரெண்டு மணி நேரம் ஆகிரும்.

பிறகு, நாங்க இராத்திரி சாப்பாட்டை முடிச்சிட்டு, மாடுகளுக்கும் தீனி குடுத்து முடிக்க பத்து மணியாகிரும். தினமும் சராசரியா நூறு லிட்டர் பால் கிடைக்கும். இந்தப் பாலை லிட்டர் முப்பது ரூவான்னு, மொத்தமா ஹட்சன் கம்பெனிக்குக் குடுத்துருவோம்.

அன்றாடம் ஒரு மாட்டுக்கு ஐம்பது கிராம் கணக்குல தாதுப்புக் கலவையும், மாசத்துல பதினஞ்சு நாளைக்கு, மாட்டுக்கு ஐம்பது மில்லி ஹெல்த் டானிக்கும் குடுப்போம். இதனால, மாடுகள் நல்லா இருந்து, பாலை நெறையா கறக்கும்; சினைப்பிடிப்பும் சிறப்பா இருக்கும். எங்க மாடுக ஈண்டு மூணு மாசத்துக்குள்ள மறுபடியும் சினையாகிரும்.

இந்த மாடுகள் இருக்குறதுனால சாண எரிவாயு அடுப்புல சமைக்கிறோம். சாணம், தீவனக்கழிவை வச்சு மண்புழு உரம் தயாரிக்கிறோம். எங்ககிட்ட இருக்குற கோ.4 தீவனக் கரணையை, ஐம்பது பைசான்னு தேவைப்படுற விவசாயிகளுக்குக் குடுக்குறோம்.

அதனால, பால் மூலமா, புல் கரணை மூலமா, மண்புழு உரம் மூலமா எங்களுக்கு வருமானம் வருது. அடுப்புக்கு எரிவாயு கெடச்சிருது. எங்க சொந்த வேலையைச் செஞ்சு சம்பாதிக்கிறதுனால நிம்மதியாவும் இருக்கோம்.

மேலும், நாங்க நல்ல முறையில இந்தப் பண்ணையை நடத்தி வர்றதுனால, புதுசா பால் பண்ணை அமைக்க விரும்புறவங்க எங்ககிட்ட வந்து யோசனை கேப்பாங்க.

குண்டலப்பட்டி கால்நடை ஆராய்ச்சி மையம், தருமபுரி இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம், பையூர் மண்டல ஆராய்ச்சி மையத்துல பயிற்சிக்கு வரக்கூடிய விவசாயிகள் எங்க பண்ணைக்குக் களப்பயிற்சிக்கு வருவாங்க. இதனால எங்களுக்குப் பெருமையாவும் இருக்கு.

விலை மதிப்புள்ள மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செஞ்சு கவனமா வளர்க்குறோம். அதுக்குப் பிரதிபலனா அந்த மாடுகள் எங்களைச் சந்தோசமா வாழ வைக்குது’’ என்றனர்.


பொம்மிடி முருகேசன்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!