செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018
நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும். 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஆபத்தான பாதையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்.
கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அவர்கள் நம்மிடம் கூறியதாவது:
“இந்த இயற்கை முறை விவசாயத்தை நாங்கள் கொல்லிமலையில் மட்டும் மேற்கொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு ஒரு கிராமம் என்று தேர்ந்தெடுத்து, அதை ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் அனைவரும் தத்தெடுத்துச் சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறோம். விரைவில் மாவட்டம் முழுவதும் இந்த இயற்கை விவசாயத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு மாநில வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அவர்களும் பெரிதும் ஆதரவு தருகிறார்.
கொல்லிமலையைப் பொறுத்தவரை கீழே சோதனைச் சாவடியை அமைத்து, அங்கே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் அவற்றை மேலே மலைப்பகுதிக்குக் கொண்டு செல்வதைத் தடுத்து வருகிறோம். அதையும் மீறி மேலே கொண்டு சென்று போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் சுத்தம் செய்து வருகிறோம். கொல்லிமலையின் மேல் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுத்து, சுத்தமாகவும் பசுமையாகவும் கொல்லிமலையைப் பராமரித்து வருகிறோம். கொல்லிமலையைப் பார்க்க வரும் மக்கள், இந்த மலையின் தொன்மையைக் காக்கும் விதத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’’ என்றார்.
மு.உமாபதி