பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

பூச்சி 22516 22516 1620

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் கெடுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; விளைபொருள்களில் எஞ்சிய நஞ்சு தங்குகிறது; தீமை செய்யும் பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையைப் பெறுவதும், அவற்றின் பெருக்கமும் தொடர்கின்றன; நன்மை செய்யும் பூச்சிகள் பாதிப்பை அடைகின்றன.

மனிதர்கள் மற்றும் கால்நடைகளைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க வேண்டுமானால், பயிர்ப் பாதுகாப்பு முறைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

மருந்தைத் தெளிக்குமுன் செய்ய வேண்டியவை

பொருளாதாரச் சேதநிலையை ஏற்படுத்தும் அளவில் தீமை செய்யும் பூச்சிகள் இருந்தால் மட்டுமே இரசாயன மருந்துகளைத் தெளிக்க வேண்டும். மருந்துப் புட்டியில் உள்ள விவரங்களைப் படித்தறிய வேண்டும்.

உடலில் மருந்து படாமலிருக்க, மருந்தைத் தெளிப்பவர், கையுறை, காலுறை, கண்ணாடி, மூக்கு மற்றும் வாய்க்கவசம், முழுக்கைச் சட்டை ஆகியவற்றை முறையாக அணிய வேண்டும்.

பரிந்துரை செய்யப்பட்ட அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இரசாயன மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. மருந்தை அளக்கவும் கலக்கவும், தகுந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். கையுறையின்றி மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

குளிர்ந்த காலை அல்லது மாலையில் தான் இரசாயன மருந்துகளைத் தெளிக்க வேண்டும். 

மருந்துத் தெளிப்பின்போது செய்ய வேண்டியவை

இரசாயன மருந்தையும் நீரையும் சரியான அளவில் கலந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானில் தெளிக்க, ஏக்கருக்கு 200 லிட்டர் நீரும், விசைத் தெளிப்பானில் தெளிக்க 60 லிட்டர் நீரும் தேவைப்படும். ஒரே மருந்தைத் தொடர்ந்து தெளிக்கக் கூடாது.

இணக்கமாக இருந்தால் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைக் கலந்து பயன்படுத்த வேண்டும். மாறுபட்ட குணங்களைக் கொண்ட மருந்துகளைக் கலந்து தெளித்தால், பயிர்களுக்குத் தீங்கு நேரும். பூச்சி அல்லது நோய்த் தாக்குதல் உள்ள பயிர்களில் நன்கு படும்படி மருந்தைத் தெளிக்க வேண்டும்.

காற்று வீசும் திசையிலேயே மருந்தைத் தெளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் காற்றுக்கு எதிர்த் திசையில் தெளிக்கக் கூடாது. மழை பெய்யும் போதும், காற்று பலமாக வீசும்போதும் மருந்துத் தெளிப்பை நிறுத்திவிட வேண்டும்.

நாஸிலில் அடைப்பு ஏற்பட்டால், அதில் வாயை வைத்து ஊதக்கூடாது. பயிர்கள் பூக்கும் போது, கைத்தெளிப்பான் மூலம், மாலையில் தெளிக்க வேண்டும். மருந்தைத் தெளிப்பவர் அந்தப் பணியில் இருக்கும் போது, சாப்பிடவோ, நீர் அருந்தவோ, புகைக்கவோ, மூக்குப்பொடி போடவோ கூடாது. மருந்தடிப்பு வேலையை, ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு ஏக்கருக்கு மேல் செய்யக் கூடாது.

தெளிப்புக்குப் பின் செய்ய வேண்டியவை

மருந்தைத் தெளித்த பின் கைகளைச் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். மருந்துப் புட்டிகளை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. மருந்து, மருந்துப்புட்டி, மருந்துக் கரைசல் ஆகியவை நீர்நிலைகளில் கலந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தெளிப்புக் கருவிகளில் கசிவு எதுவும் இருக்கக் கூடாது. காலி மருந்துக் கலன்களை உடைத்து, மக்கள் புழக்கம் இல்லாத இடத்தில் புதைத்துவிட வேண்டும்.

முதல் உதவி

மருந்துத் தெளிப்பின் போது பாதிக்கப்படும் நபரை, காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும். மூச்சுத் திணறல் ஏற்பட்டால், செயற்கைச் சவாசம் கொடுத்து, உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

உடம்பில் மருந்து பட்டால், உடனே சோப்பால் கழுவி, வேறு உடையை மாற்ற வேண்டும். இரசாயன மருந்து கண்களில் பட்டு விட்டால், சுத்தமான நீரால் கண்களைக் கழுவ வேண்டும். கண்களில் தொடர் எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மருந்தைக் குடித்த நபரை உடனே வாந்தியெடுக்க வைக்க வேண்டும். எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் எண்ணெய்யைத் தவிர்க்க வேண்டும்.

வெந்நீரில் 15 கிராம் உணவு உப்பைக் கரைத்துக் கொடுப்பதுடன், வெந்நீரை நிறையக் கொடுக்க வேண்டும். நன்றாக அரைத்த கடுகைச் சாப்பிடச் சொல்ல வேண்டும். 2-3 முட்டைகளில் உள்ள வெள்ளைக் கருவை நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

மருந்துகள் சேமிப்பு

இரசாயன மருந்துகளைக் காற்றோட்டமான இடத்தில், குழந்தைகள், வீட்டு விலங்குகளுக்கு எட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். உணவருந்தும் இடங்களில் வைக்கக் கூடாது.


பூச்சி RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், 

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!