கன்னி நாய் வளர்ப்பு!

ன்னி நாயினத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். இது வேட்டைக்கு உகந்த இனம். இந்த நாய்கள் தமிழகத்தில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. தொடக்கக் காலத்தில் இந்நாய்களை விவசாயிகள் கௌரவத்துக்காக வளர்த்து வந்தனர். மேலும், இந்த நாய்களை அவர்கள் வேட்டைக்காகப் பயன்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக, அடர்ந்த புதர்கள் மற்றும் தரிசு நிலங்களில் வாழும் முயல்கள் போன்ற சிறு விலங்குகளை, பொழுதுபோக்கு நோக்கில் வேட்டையாடப் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில், வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பிறகு, இந்த நாய்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் காவலுக்காகவும், செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. கன்னி நாய்கள் வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருடனும் நட்புடன் பழகுவதால், இவற்றை மக்கள் விரும்பி வளர்த்து வருகின்றனர்.

கன்னி நாய்கள் கறுப்பு, அடர் பழுப்பு, வெளிர் பழுப்பு நிறங்களில் இருக்கும். இவற்றில் கறுப்பு நாய்களைக் கறுப்புக் கன்னி என்றும், அடர் பழுப்பு நாய்களைச் செவலை என்றும் அழைக்கின்றனர். செவலை என்பது, சிவப்பு என்பதன் வழக்குச் சொல்லாகும். இளம் பழுப்பு நாய்கள் பிள்ளை என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. இளம் பழுப்பு நிறத்தை அப்பகுதி மக்கள் பிள்ளை எனக் கூறுகின்றனர். ஓர் ஈற்றில் பிறக்கும் குட்டிகளில் இந்த மூன்று நிறங்களைக் கொண்ட குட்டிகள் அவசியம் இருக்கும்.

கன்னி நாய்களின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். செவி மடல்கள் சரியாகப் பாதி நீளத்தில் மடங்கி இருக்கும். வாலானது கீழ் நோக்கியும், அதன் மூன்றிலொரு பகுதி மேல்நோக்கி வளைந்தும் இருக்கும். கோபம் மற்றும் மகிழ்ச்சியான நேரத்தில், வால் முழுவதும் மேல்நோக்கி வளைந்து இருக்கும். அடிவயிற்றின் சுற்றளவு, மார்பின் சுற்றளவில் பாதியை விடக் குறைவாக இருக்கும். இத்தகைய உடலமைப்பு, வேட்டை நாய்களுக்கே உரிய சிறப்பு அமைப்பாகும்.

ஒரு நாயின் எடை 20-25 கிலோ இருக்கும். உயரம் 25-27 அங்குலம் இருக்கும். உடலின் நீளம் 23-25 அங்குலமும், தலையின் சுற்றளவு 12-14 அங்குலமும் இருக்கும். மார்புச் சுற்றளவு 25-27 அங்குலமும், செவிமடலின் நீளம் 4-5 அங்குலமும், வாலின் நீளம் 15-17 அங்குலமும் இருக்கும்.

கிராமங்களில் கன்னி நாய்களை வளர்ப்போர் தங்களிடம் உள்ள பெட்டை நாய்களை, தங்களிடம் உள்ள ஆண் நாயுடன் விட்டு இனச்சேர்க்கை செய்வதில்லை. இந்த நாய்களுடன் தொடர்பே இல்லாத இதே இனத்தைச் சேர்ந்த வேற்று நாய்களுடன் மட்டுமே இனச்சேர்க்கை செய்ய விடுகின்றனர். மேலும், தங்களுக்குக் குட்டிகள் தேவைப்படும் நிலையில் மட்டுமே இனச்சேர்க்கை செய்ய விடுகின்றனர். இல்லையெனில், பெட்டை நாய்களை இனச் சேர்க்கைக்கு விடாமல் வீட்டிலேயே கட்டி வைத்து விடுகின்றனர்.

கிராமங்களில் வளர்க்கப்படும் கன்னி நாய்களுக்கு, சிறப்பு உணவு எதையும் வழங்குவதில்லை. வீட்டில் உள்ளவர்கள் உண்ணும் உணவே இந்த நாய்களுக்கும் உணவாகும். நகர்ப்புறங்களில் வணிக நோக்கில் கன்னி நாய்களை வளர்ப்போர், இந்த நாய்களுக்கு என, தனியாக உணவைத் தயாரித்துக் கொடுக்கின்றனர்.

எளிமையான உணவுப் பராமரிப்பு, அதிக நோயெதிர்ப்பு சக்தி, அழகான வேட்டைநாய்த் தோற்றம் போன்ற காரணங்களால், கன்னி நாய்கள் மக்களிடம் பிரபலமாகி வருகின்றன. எனவே, வணிக நோக்கில் நாய்களை வளர்க்க விரும்புவோர், கன்னி நாய்களை வளர்த்தால் நல்ல வருவாயைப் பெறலாம்.


மு.ச.முருகன்,

வெ.பழனிச்சாமி, கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி

மற்றும் ஆராய்ச்சி மையம், இராஜபாளையம்- 626 117.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!