பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பார்த்தீனிய Parthenium hysterophorus yercaud salem India 76bd2f30366e3d46032c8ffbf929667c

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.

னிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம். 1.5-2 மீட்டர் உயரம் வளரும் இது, காங்கிரஸ் புல், கேரட் களை எனவும் அழைக்கப்படும். 1945-இல் நடந்த இரண்டாம் உலகப்போரின் போது, முதன் முதலில் குயின்ஸ்லேன்ட் என்னுமிடத்தில் பார்த்தீனியம் இருந்ததாகவும், இதன் விதைகள் போர் ஆயுதங்கள், கருவிகள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் களைச்செடி, சுமார் 35 மில்லியன் எக்டரில், விளைநிலங்கள், பயிரில்லா நிலங்கள், குன்றுகள், சாலையோரம், இரயில் பாதையோரம் எனப் பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,

இது, முளைத்து நான்கு வாரத்தில் விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம், ஓராண்டில் பல மடங்காகப் பரவி விடுகிறது. ஒரு செடி 5,000- 25,000 விதைகளை உற்பத்தி செய்கிறது. இந்த விதைகள், புல்வெளி, மேய்ச்சல் நிலம், பூங்கா, குடியிருப்புப் பகுதிகளில் முளைத்து மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் தீங்கினை ஏற்படுத்துகின்றன.

இச்செடியின் வேர், இலை, தண்டு, பூ என எல்லாமே தீமை விளைவிப்பன. எனவே, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் வாரம், பார்த்தீனிய விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், பார்த்தீனியச் செடிகளில் உரசுவதால், தோல் நோய், தோலின் நிறம் மாறுதல், அரிப்பு, நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பார்த்தீனிய இலைகளை உண்பதால், வயிற்றுப் போக்கு, கல்லீரல், கணையச் செயலிழப்பு போன்றவையும் நிகழ்கின்றன. கால்நடை இறைச்சியின் தன்மையும், பாலின் தரமும் கெட்டு விடுகின்றன.

மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகள்

தோலில் அரிப்பு, எரிச்சல், கரும் புள்ளிகள், சிறு கட்டிகள், கண்ணெரிச்சல் உண்டாகும். காற்றில் பறக்கும் இதன் மகரந்தத்தைச் சுவாசிக்க நேரிட்டால், ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள் ஏற்படும்.

பயிரில் ஏற்படும் பாதிப்புகள்

விதைகளின் முளைப்புத் தன்மையைப் பாதிக்கும். ஹைமினின், ஹிஸ்டிரின், அம்ரோசின், பிளேவோனாய்ட்ஸ் போன்ற இரசாயனத் திரவங்களைச் சுரக்கும் இதன் இலைகள், மண்ணில் மட்கும் போது, பயிர்களின் வளர்ச்சியைத் தடுத்து விடும்.

விளை நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களின் தன்மையும் பரப்பும் குறைந்து விடும். மேய்ச்சல் நிலத்தின் உற்பத்தித் திறன் 90 சதம் வரை குறைந்து விடும். மானாவாரி நிலங்களில் ஊடுருவி வளர்வதால், தீவனப் பயிர்களின் உற்பத்திக் குறைகிறது.

கட்டுப்படுத்துதல்

உழவியல் முறை: பூக்கள் உருவாகும் முன்பே, இந்தச் செடிகளை வேருடன் பிடுங்கிவிட வேண்டும். நிறைய இருந்தால் குழியில் இட்டு மட்க வைத்து உரமாகப் பயன்படுத்தலாம். வயலில் நிறைய இருந்தால், பூக்கள் உருவாகும் முன் உழுது மண்ணில் மடக்கிவிட வேண்டும்.

இரசாயன முறை: ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் அட்ரசின் வீதம் கலந்து பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்கு முன் தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு சோடியம் குளோரைடு 200 கிராம், 2 மில்லி சோப்பு எண்ணெய் வீதம் கலந்து தெளிக்கலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு 2, 4 டி சோடியம் உப்பு 8 கிராம் அல்லது கிளைப்போசைட் 10 மில்லி, 20 கிராம் அமோனியம் சல்பேட், 2 மில்லி சோப்பு எண்ணைய் வீதம் கலந்து பூக்கள் வருமுன் தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் மெட்டிரிபூஸின் வீதம் தெளித்து, பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை: செடிக்கு 50 மெக்சிகன் வண்டுகள் வீதம் விடலாம். போட்டிப் பயிர்களான செண்டுமல்லி, தீவனச்சோளம், சூரியகாந்தி, மக்காச்சோளம் போன்றவற்றைப் பயிரிடலாம்.


DAISY

முனைவர் மா.டெய்சி, முனைவர் ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், முனைவர் கி. செந்தில்குமார், மருத்துவர் எம்.சக்திப்பிரியா, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!