கறிக்கோழி மற்றும் முட்டை மீதுள்ள முரணான புரிதல்கள்!

கறிக்கோழி Egg

ண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழி இறைச்சியைச் சாப்பிடலாமா, கூடாதா? பண்ணக்கோழி முட்டையைச் சாப்பிடலாமா கூடாதா? இவை, மக்கள் தினமும் எதிர் கொள்ளும் முக்கியமான கேள்விகள்.

கறிக்கோழியின் உடல் எடையைக் கூட்ட, ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் என்பது, கறிக்கோழி குறித்த கட்டுக் கதைகளில் முக்கியமான ஒன்று. முதலில், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கறிக்கோழி என்பது, கறிக்காக வளர்க்கப்படும் கோழியினம். இது, குறைந்த நாட்களில், இறைச்சியின் எடை நன்றாகக் கூடும் வகையில் உருவாக்கப்பட்ட கலப்பினம்.

இதன் இயல்பே, கொழுகொழுவென வளர்ந்து எடை கூடி, குறைவான தீவனத்தில் நிறைவான கறியைத் தருவது தான். இதை FEED CONVERSION RATE என்பார்கள். அதாவது, தீவனம் கறியாக, முட்டையாக மாறும் விகிதம்.

குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க, தடுப்பூசிகளைப் போடுவதைப் போலவே, கோழிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நமக்கு ஏற்படும் சளி, இருமல், நுரையீரல் தொற்றைத் தவிர்க்க, எதிர்ப்பு மருந்து தரப்படுவதைப் போலவே, கோழிகளுக்கும் தொற்று ஏற்படும் போது, ஆன்ட்டி பயாடிக்குகள் தரப்படுகின்றன.

ஆனால், இங்கே பரப்பி விடப்படும் புரளியைப் போல, ஒவ்வொரு கோழியாகப் பிடித்து, உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று, ஹார்மோன் ஊசிகள் போடப்படுவது இல்லை.

இதற்குக் காரணம், ஹார்மோன் ஊசிகள் விலை மதிப்பு மிக்கவை. அவற்றை ஒவ்வொரு கோழிக்கும் போட்டு, எடையைக் கூட்டினால், விற்பனை விலையை விட, உற்பத்தி விலை கூடி விடும். எனவே, ஹார்மோன் ஊசிகளைப் போட்டு, கறிக்கோழிகளை வளர்ப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு மாறாக, மரபணு சோதனை மூலம் தேர்வு செய்து, அலைய விடாமல், இருக்கும் இடத்திலேயே சத்தான தீவனத்தைத் தருவதாலும், நோய் நொடியின்றி வளர்வதாலும், கோழிகள், குறுகிய காலத்தில் அதிக எடையை அடைகின்றன.

புரதம் மிகுந்த கறிக்கோழி, குறைந்த விலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், அனைவராலும் எளிதாக வாங்கி உண்ணும் பொருளாக உள்ளது. எனவே, கறிக்கோழி குறித்து, அவதூறு பரப்பாமல் இருப்பதே நல்லது.

அதைப் போல, முட்டைக் கோழிகள் மூலம் கிடைக்கும் முட்டைகளும், மலிவான விலையில் கிடைக்கும் புரதம் நிறைந்த உணவுப் பொருளாகும். பண்ணைக் கோழிகள் இடும் முட்டைகள் குறித்த கட்டுக் கதைகளில் முக்கியமான ஒன்று, அந்த முட்டைகளைச் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பது.

இதற்குக் கூறப்படும் காரணம், பெட்டைக் கோழிகள், சேவலுடன் இணை சேராமல் வளர்வதால், அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டைகளும், மலட்டுத் தன்மை உடையவை என்பதாகும்.

இதற்கான விளக்கம், முட்டைக்கோழி என்பது, முட்டைக்காக வளர்க்கப்படும் கோழியினம். பொதுவாக, கோழி மற்றும் இதர பறவை இனங்கள், ஆணுடன் இணை சேராமல், இயற்கையாகவே முட்டையிடும் தன்மை மிக்கவை.

ஒரு கோழி முட்டையிட, சேவலுடன் இணை சேர வேண்டிய அவசியம் இல்லை. கரு முட்டை சுழற்சி முறை மூலம், முட்டை வெளியேறிக் கொண்டே இருக்கும். அதனால், சில நாட்களுக்கு ஒருமுறை, பெட்டைக்கோழி முட்டை இட்டுக் கொண்டே இருக்கும்.

சேவலுடன் சேராத கோழி போடும் முட்டை குஞ்சு பொரிக்காது. சேவலுடன் சேர்ந்த கோழி போடும் முட்டை குஞ்சு பொரிக்கும். எனவே, இந்த இயற்கை அடிப்படையைப் புரிந்து கொண்டு, புரதம் நிறைந்த பண்ணைக்கோழி முட்டையை உண்போமாக!


கறிக்கோழி M.PRADEEP

மு.பிரதீப், சே.திவ்யா பிரியா, மு.முத்துலட்சுமி, இரா.இராஜ்குமார், கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!