தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம்.
அப்போது அவர், “பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல், சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கும் மேலாக, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு விரைந்து வழங்கப்படுகிறது.
மேலும், விதைப்புப் பொய்த்தாலும், நடவு செய்ய இயலா விட்டாலும், அறுவடைக்குப் பின் இழப்பு ஏற்பட்டாலும், புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை, வயல்களில் வெள்ளநீர்த் தேக்கம் போன்ற இயற்கை இடர்கள் மற்றும் பயிர் வளர்ச்சியில் ஏற்டும் இடர்களுக்கும் இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
காப்பீடு அலகு
இத்திட்டத்தில், மிகத் துல்லியமாகப் பயிர் இழப்பீட்டுத் தொகையைப் பெறும் வகையில், நெல், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு போன்ற முக்கியப் பயிர்களுக்கான காப்பீடு அலகாக, வருவாய்க் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளன. இத்திட்டத்தில், அனைத்துத் தானியப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், கரும்பு, பருத்தி, தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.
காப்பீட்டுத் தொகை
கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான காப்பீட்டுத் தொகையும், சாகுபடிச் செலவினத்துக்கு இணையாகக் காப்பீட்டுத் தொகையும் நிர்ணயம் செய்யப்படும்.
காப்பீட்டுக் கட்டணம்
காரீப் பருவத்தில், அனைத்துத் தானியங்கள், பயறு வகைகள் அடங்கிய உணவு தானியப் பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய, காப்பீட்டுத் தொகையில் 2 சதம், ராபி பருவத்தில் 5 சதம், ஆண்டு வணிக மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதம் காப்பீட்டுக் கட்டணமாக விவசாயிகளிடம் வசூலிக்கப்படும்.
திட்டச் சிறப்புகள்
கடன்பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு ஒரே மாதிரி இருத்தல். வருவாய்க் கிராம அளவில் 20 எக்டருக்கு அதிகமாகச் சாகுபடி செய்யப்படும் பயிர்கள், பருவத்திற்கேற்பத் தெரிவு செய்யப்படுதல்.
முக்கியப் பயிர்களான நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, வருடாந்திர தோட்டக்கலைப் பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான வருவாய்க் கிராமங்கள் அறிவிக்கப்படுதல். பிற பயிர்களான இராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், சூரியகாந்தியைக் காப்பீடு செய்யக் குறுவட்டங்கள் அறிவிக்கப்படுதல்.
காப்பீடு செய்யப்படும் பயிருக்கேற்ப, காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தல். அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மொத்தப் பயிர்ப் பரப்பில் 50 சதம் காப்பீடு செய்யப்படுதல்.
திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்
அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட பயிர்களைச் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்யலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், குத்தகைக்குப் பயிரிடுவோர் உட்பட அனைத்து விவசாயிகளும் இதில் சேர்க்கப்படுவர்.
பயிர்க்கடன் பெறுவோர் கட்டாயமாகவும், பயிர்க்கடன் பெறாதோர் விருப்பத்தின் பேரிலும் சேர்க்கப்படுவர். இதில் பதிவு செய்யும் விவசாயிகள், பொதுச்சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையைச் செலுத்தி இரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.
இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடுதல்
பயிர் அறுவடைச் சோதனைகள் அடிப்படையில் மகசூல் இழப்புக் கணக்கிடப்படும். தெரிவு செய்யப்பட்ட வருவாய்க் கிராமம் ஒன்றில் 4 பயிர் அறுவடைச் சோதனைகளும் குறுவட்டம் ஒன்றில் 8 பயிர் அறுவடைச் சோதனைகளும் நடத்தப்படும்.
மகசூல் இழப்பைக் கணக்கிட, தமிழ்நாட்டில் 2 இலட்சத்துக்கும் மேல், பயிர் அறுவடைச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. மகசூல் விவரம் பெறப்பட்ட 21 நாட்களில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கும்.
வேளாண்மைத் துறையால் எடுக்கப்படும் நடவடிக்கைகள்
அதிகளவில் விவசாயிகள் பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், கிராம அளவில் களப்பணியாளர்களை ஈடுபடுத்தி, விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் விளம்பரப் பலகைகளை வைத்தும், விவசாயிகளுக்குத் துண்டறிக்கைகளை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இத்திட்டத்தின் சிறப்புகள் மற்றும் பதிவு செய்யத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்க, மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி மையங்கள் செயல்படுகின்றன.
பத்திரிகைச் செய்தி மற்றும் தொலைக்காட்சி மூலமும் விழிப்புணர்வு தரப்படுகிறது.
சாதனைகள்
2016-2017 ஆம் ஆண்டில் 15.76 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். 32.47 இலட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்த விவசாயிகளில் 79 சதம் பேர், அதாவது 12 இலட்சம் பேர், கடன்பெறா விவசாயிகள் என்பதால், தேசியளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.565 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை 12,08,254 விவசாயிகளுக்கு 3,527 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக ஒப்பளிக்கப்பட்டதில், 11,79,642 விவசாயிகளுக்கு 3,387 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இதில் 3,363 கோடி ரூபாய் 11,65,536 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், 2016-17 இல் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதில் தமிழ்நாடு முதலிடம் வகித்தது.
தமிழகத்தில் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதைப் பாராட்டிய, பன்னாட்டுப் பொருளாதார இணைப்புக்கான இந்திய ஆராய்ச்சிக் கழகம், “தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு மகசூல் விவரங்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டண மானியத்தை வழங்குவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
2017-2018 ஆம் ஆண்டில் 27.60 இலட்சம் ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. பதிவு செய்த 13.98 இலட்சம் விவசாயிகளில் 77 சதம் பேர் கடன்பெறா விவசாயிகள். காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக 638 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை 5,50,691 விவசாயிகளுக்கு 1,108 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக ஒப்பளிக்கப்பட்டு, 4,45,404 விவசாயிகளுக்கு 901 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இதில், 2,21,902 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை 429 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
2018-2019 ஆம் ஆண்டில் 29.50 இலட்சம் ஏக்கர் காரீப் மற்றும் ராபி பருவப் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. பதிவு செய்த 19.37 இலட்சம் விவசாயிகளில் 79 சதம் பேர் கடன்பெறா விவசாயிகள். திட்டம் தொடங்கிய மூன்றாண்டில், 2018-2019 இல் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக 632 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ராபி பருவப் பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.
உழவன் செயலி
உழவர்களுக்குத் தேவையான முக்கியச் செய்திகளை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட உழவன் செயலி மூலம், பயிர்க் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்த அனைத்து விவசாயிகளும் தங்கள் பதிவு தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.
மு.உமாபதி