கேழ்வரகில் விதவிதமான மதிப்புக் கூட்டிய தின்பண்டங்கள்!

கேழ்வரகில் அல்வா

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018

சிறுதானிய வகைகளில் கேழ்வரகு சிறந்ததாகும். சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றுக்கு அரிசி உணவு காரணமாகிறது. அரிசி, கோதுமையை விட, கேழ்வரகில் அதிகளவில் இரும்புச்சத்து (3.9 கிராம்), கால்சியம் (344 மி.), நார்ச்சத்து (3.6 கிராம்) உள்ளன. இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியாவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்துக் குறைவதால் இரத்தச்சோகை வருகிறது.

எனவே, இரும்புச்சத்து மிகுந்த கேழ்வரகைச் சாப்பிட்டால் இரத்தச்சோகையைத் தடுக்கலாம். மேலும், கேழ்வரகில் மிகுந்துள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. ஆகவே, கேழ்வரகு ஆரோக்கிய உணவாகக் கருதப்படுகிறது.

கேழ்வரகின் சிறப்புகள்

கேழ்வரகில் இருக்கும் நார்ச்சத்து எளிதில் செரிக்கவும், உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக் குறையவும் பயன்படுகிறது. அரிசி உணவு, இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிப்பதால் நீரிழிவு வருகிறது. ஆனால், கேழ்வரகு உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நாகரிகம் என்னும் பெயரில் சிறிது சிறிதாக நமது உணவுப் பழக்கத்திலிருந்து மறையத் தொடங்கிய கேழ்வரகு, அதன் பயன்களால் தற்போது மீண்டும் மக்களால் விரும்பப்பட்டு வருகிறது.

கேழ்வரகில் உள்ள சத்துகள்

மாவுச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து போன்றவை, மற்ற தானியங்களைக் காட்டிலும் கேழ்வரகில் அதிகளவில் உள்ளன. நூறு கிராம் கேழ்வரகில் மாவுச்சத்து 72 கிராம், புரதச்சத்து 7.3 கிராம், சுண்ணாம்புச்சத்து 344 மில்லி கிராம், பாஸ்பரஸ் 283 மில்லி கிராம், இரும்புச்சத்து 3.9 மில்லி கிராம் உள்ளன.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான டிரிப்டோபேன், சிஸ்டின், மெத்தியோனின் ஆகிய அமினோ அமிலங்கள் கேழ்வரகில் உள்ளன. கேழ்வரகில் முளைகட்டும் தன்மை இருப்பதால், இணைமாவைத் தயாரிப்பதற்குப் பெருமளவில் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து, நன்கு செரிக்கவும், இரத்தத்திலுள்ள தேவையற்ற சர்க்கரை, கொழுப்புப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

கேழ்வரகில் மிகக் குறைந்த அளவே கொழுப்புச்சத்து இருப்பதால், உடலுக்குத் தீங்கற்ற தானியமாக உள்ளது. இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், வயதானவர்களுக்கு எலும்புத் தேய்வால் ஏற்படும் வலி, ஆர்த்தரைடீஸ் ஆஸ்டியோ போரஸீஸ் போன்ற நோய்களின் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.

இராகி பிஸ்கட்

தேவையான பொருள்கள்: இராகி மாவு 500 கிராம், கோதுமை மாவு 700 கிராம், வெண்ணெய் 500 கிராம், சர்க்கரைப் பொடி 500 கிராம், பேக்கிங் பௌடர் 5 கிராம்.

தயாரித்தல்: கோதுமை மாவு, இராகி மாவை பேக்கிங் பௌடரைச் சேர்த்துச் சலிக்க வேண்டும். சர்க்கரையில் வெண்ணெய்யைச் சேர்த்து கிரீமைத் தயாரிக்க வேண்டும். பிறகு, கிரீமுடன் சலித்த மாவைச் சேர்த்துப் பிசைய வேண்டும்.

அடுத்து, இந்த மாவை உருட்டி பிஸ்கட் அச்சுகளில் வெட்ட வேண்டும். கடைசியாக, அடுமனையில் 140 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 30 நிமிடம் சூடு செய்தால் இராகி பிஸ்கட் தயார்.

இராகி முறுக்கு

தேவையான பொருள்கள்: இராகி மாவு 300 கிராம், பச்சரிசி மாவு 500 கிராம், கடலை மாவு 200 கிராம், உப்பு 10 கிராம், பெருங்காயம், எள் தேவையான அளவு.

தயாரித்தல்: இராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். மாவு சூடாக இருக்கும் போதே, இத்துடன் பச்சரி மாவு, கடலை மாவு, எள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இதை நீர் விட்டுப் பிசைந்து முறுக்கு அச்சில் இட்டுப் பிழிந்து எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இராகி முறுக்குகள் தயாராகி விடும்.

இராகி அடை

தேவையான பொருள்கள்: இராகி மாவு 500 கிராம், சோயாமாவு  500 கிராம், எண்ணெய், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது   தேவைக்கேற்ப, முருங்கைக் கீரை  100 கிராம், நறுக்கிய வெங்காயம் 100 கிராம்.

தயாரித்தல்: அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி உப்பையும் ஒரு தேக்கரண்டி எண்ணெய்யையும் ஊற்றிச் சூடாக்க வேண்டும். நன்றாகக் கொதிக்கும் போது, தணலைக் குறைத்து மாவைக் கொட்டிக் கிளறி, உடனே அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

கை பொறுக்கும் சூடு வரும்போது, தேவைப்பட்டால் நீரைத் தெளித்து நன்றாகப் பிசைய வேண்டும். அத்துடன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, முருங்கைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைய வேண்டும்.

பிறகு, எலுமிச்சையளவு மாவை எடுத்து, எண்ணெய் தடவிய வாழையிலையில் வைத்து அடையைப் போலத்   தட்டி, சூடான தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால் சத்தான இராகி அடை தயாராகி விடும்.

இராகி லட்டு

தேவையான பொருள்கள்: இராகி மாவு ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, நெய் 500 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, முந்திரிப் பருப்புத் தேவையான அளவு.

தயாரித்தல்: வறுத்த இராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, நெய்யைச் சூடாக்கி ஊற்றி உருண்டைகளாகப் பிடித்தால் இராகி லட்டு தயார். முந்திரிக்குப் பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.

மேலும், கேழ்வரகிலிருந்து களி, கூழ், புட்டு, தோசை, இட்லி, இடியாப்பம், ரொட்டி, உப்புமா, அவல் போன்ற காலைச் சிற்றுண்டிகளையும், அல்வா, கொழுக்கட்டை போன்ற இனிப்பு வகைகளையும், வடை, பக்கோடா, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி, முறுக்கு, தட்டுவடை, காரக் கொழுக்கட்டை போன்ற கார வகைகளையும் தயாரிக்கலாம். இவை அனைத்தையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

கேழ்வரகிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருள்களைத் தயாரித்தால், மாதம் ஒன்றுக்கு அதிகபட்ச இலாபமாக ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம். எனவே, கிராம மகளிர் வணிக நோக்கில், கேழ்வரகிலிருந்து மதிப்புக் கூட்டிய பண்டங்களைத் தயாரித்துப் பயன்படுத்தி, உடல் நலத்தையும் நல்ல வருமானத்தையும் ஈட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.


PB_Thenmozhi

முனைவர் பெ..தேன்மொழி,

முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண் அறிவியல் நிலையம்,

குன்றக்குடி-630206, சிவகங்கை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!