மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

PB_Neem Tree

தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண் அதாவது அகழியுடன் விளங்கிய காலமும் இருந்தது. எல்லாம் போய் இப்போது கருவேல மரங்களையும், தைல மரங்களையும் வளர்க்கும் அளவுக்கு அரசாங்கத்தின் குறிக்கோள் தேய்ந்து போய் விட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உட்படப் பல்வேறு அரசு அலுவலகங்கள் இட வசதியுடன் இப்போது பராமரிக்கப் படுவதை ஆங்காங்கே காண்கிறோம். ஆனால், இங்கே வளர்க்கப்படும் மரங்களைப் பார்க்கும் போது, என்னென்ன மரங்களை வளர்க்க வேண்டும் என்னும் புரிதல் இல்லை என்பதாகவே எண்ண வேண்டியுள்ளது. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக் கழக வளாகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகமும் இதே நிலைதான்.

அழகுக்காக வரிசையாக மரங்களை வளர்க்கலாம். அதுவே மக்களின் பயன் கருதி வளர்த்தால் இன்னும் சிறப்புத்தானே? அதிலும், மருத்துவப் பயனுக்கான மரங்களை வளர்த்தால், பெருகி வரும் நோய்களுக்கும், உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளுக்கும் ஈடு கொடுக்கும் மரங்களை வளர்த்தால் இன்னும் கூடுதல் சிறப்புத்தானே?

வரிசையாக நின்றிருந்த ஆலமரங்கள் அனைத்தும் சாலைப் பராமரிப்புக்காக வெட்டப்பட்டு விட்டன. அதனால், மக்களிடமும் மாடுகளிடமும் ஆண்மை குறைந்து மலடு பெருகி வருகிறது. ஆலங்குச்சி, ஆல விழுதால் பல் துலக்கி, ஆல விழுதின் நுனியை மென்று சுவைத்து வந்தவர்களைப் போல, ஆலம் பழங்களைப் பொறுக்கித் தின்ற ஊர் பொலி காளைகள், முழுமையான ஆண்மையுடன் விளங்கி வந்த வரலாறு நம்முடையது. இன்று ஆலும் போயிற்று; ஆண்மையும் போயிற்று.

அரசு அறிவை வளர்க்குமாம். ஆற்றங் கரையில் அரசு இருந்த இடத்தில் பிள்ளையார் வீற்றிருந்த நிலை மாறி, அந்த இடத்தில் சாமியின் பெயரைச் சொல்லி எத்தனையோ படங்களை வைத்திருக்கிறார்கள். அரசையும் வேம்பையும் காப்பதற்காகக் கட்டப்பட்ட ஆற்றங்கரைக் கோயில் இன்று ஏதேதோ படங்களை மாட்டி வைப்பதற்கான இடமாகத் தேய்ந்து விட்டதைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.

வேப்பம் பழங்களைச் சாப்பிடும் பறவைகள் அந்த விதைகளைத் தங்களின் எச்சத்தின் மூலம் நாடெங்கும் பரப்பும். இப்படி இயற்கையாகவே இந்த விதைகள் விதைக்கப் படுவதால் வேப்ப மரங்களுக்குப் பஞ்சமில்லை. இருப்பினும் இந்த மரங்களும் வரிசையாக இல்லையென்பதற்காக அழிக்கப்பட்டு வருவது வேதனையை அளிக்கிறது. வேம்பு, வளைகாப்பு, திருவிழா என நமது வாழ்க்கையுடன் தொடர்புள்ளது மட்டுமல்ல, பல்வேறு மருத்துவப் பயன்கள் மிக்கது. ஆனால், அதன் மருத்துவப் பயன்கள் மறக்கப்பட்டு விட்டன. அரசுப் பண்ணைகளில், அலுவலகங்களில் வளர்க்கப்படும் மருத்துவ மூலிகை மரங்களின் பயன்களை, ஒவ்வொரு மரத்தின் அருகிலும் எழுதி வைக்க வேண்டுவது தேவையாக இருக்கிறது.

கோயில்களில் உள்ள வில்வ மரங்களின் பயனை அறியாமல், கடவுள் பெயரைச் சொல்லி வணங்கி வருகிறார்கள். தினமும் அல்லது கோயிலுக்குச் செல்லும் போது, நான்கைந்து இலைகளைப் பறித்துப் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வைரஸ் காய்ச்சல் உட்பட அனைத்துக் காய்ச்சல்கள், எலும்புருக்கி நோய் உட்படப் பல்வேறு நோய்கள் தீர்ந்து போகும். வில்வம் அரும்பெரும் மூலிகை. விலவச் சர்பத், வில்வக் குடிநீர் நம் உடல் உறுதிக்கான அரிய மருந்து என்பதைச் சொல்லித் தந்து, பொது இடங்களில் மக்களின் பயன்பாட்டுக்காக வில்வ மரங்களை வளர்த்து வரவேண்டும்.

இன்றைய நிலையில் பல்வேறு காரணங்களால், ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் விந்து வெளியேறுவது நடைபெறுகிறது. இதைத் தடுக்கும் மிகப்பெரிய மூலிகை வில்வம் தான். “விந்தை அடக்க வில்வம்’’ என்னும் பழமொழி வந்தது இந்த அடிப்படையில் தான். முழுமையான இல்லற இன்பம் கிடைப்பது தானே குடும்பத்தின் பேரின்பம்!

நீக்கமற நிறைந்து காணப்படுவது சர்க்கரை நோய். இந்நோயைத் தீர்க்கும் அரும்பெரும் மூலிகை மரம் நாவல். நாவல் பழம் துவர்ப்புச் சுவையுள்ளது. இன்று நாவல் மரங்கள் நாட்டில் அருகி விட்டதால், விளைச்சல் குறுகி விட்டதால், ஒரு கிலோ நாவல் பழம் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனாலும், நோய் தீர வேண்டுமே என்பதற்காக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.  நாவல் கொட்டைப் பருப்பு, நாவல் மரப்பட்டையில் கஷாயம் தயாரித்துப் பருகினால், சர்க்கரை நோயைத் தடுப்பதுடன், அமிலநிலைத் தாக்கத்தில் இருந்தும் விடுபடலாம்.

“அத்தியிலைச் சாப்பாடு ஆற வைக்கும்’’ என்பது மருத்துவப் பழமொழி. அத்தி ஆற்றுப்படுத்தும் என்று சொல்வதுண்டு. அல்சர் எனப்படும் தீராத வயிற்றுப் புண், நெடுநாள் அமிலநிலைத் தாக்கம் உட்பட, பல்வேறு வயிற்றுச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பது அத்தியிலை. முற்காலத்தில் வெளியூர் விருந்தினர் வந்தால், அவருக்கு அத்தியிலைகளைப் பறித்து வந்து தைத்து அதில் உணவைப் பரிமாறுவார்கள். காரணம், அவருக்கு நோய் எதுவும் இருந்தால் தீர்ந்து விடும் என்பது. இன்னொரு முக்கியக் காரணம், வந்த இடத்தில் புதிய நோய் எதுவும் வந்துவிடக் கூடாது என்பது.

எனவே, நாம் வேண்டுவது, மறைந்து போன மகத்துவங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தி, சொல்லிக் கொடுத்து, மருத்துவப் பயன்மிக்க மூலிகை மரங்களை வளர்க்க வேண்டும்; பராமரிக்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும் என்பது தான்.


மரங்கள் KASI PICHAI e1628414081244

மருத்துவர் காசிபிச்சை,

தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர்-621715, அரியலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!