வயிற்றைக் காக்கும் மருந்துகள்!

PB_Cardamom Seed In Sack

நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்கச் செய்து சத்துகளாக மாற்றி, உடம்பின் அனைத்துப் பாகங்களுக்கும் கிடைக்கச் செய்யும் முக்கிய வேலையைச் செய்வது நமது வயிறு. நாம் சீராக இயங்க வேண்டுமானால், தேவையான நேரத்தில் சரியான உணவை இந்த வயிற்றுக்குள் அனுப்பிவிட வேண்டும்.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை மறந்து விட்டு, ருசியாக இருக்கிறதே என்று அதிகமாகச் சாப்பிட்டு உள்ளே தள்ளி விட்டாலும் சிக்கல்; போதுமான அளவில் கிடைக்கா விட்டாலும் சிக்கல்.

கூடுதலாக அனுப்பி விட்டால் செரியாமை, வாந்தி, உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற சிக்கல்கள் உண்டாகும். குறைவாக அல்லது சாப்பிடாமல் இருந்து விட்டால் பசி, குடற்புண் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சரி. நம்மால் உண்டாகும் இந்தக் கோளாறுகளை எப்படிச் சரி செய்வது என்று பார்ப்போம்.

ஓமம். சுக்கு, திப்பிலி, ஏலத்தைச் சம அளவில் எடுத்து வறுத்துப் பொடியாக்கி, அத்துடன் தேவையான அளவில் சர்க்கரையையும் கலந்து வைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் அரைத் தேக்கரண்டி அளவில் சாப்பிட்டால், செரியாமையும், கடுமையான வயிற்றுப்போக்கும் சரியாகும்.

ஓமத் தண்ணீரைக் குடிக்கலாம். அல்லது நான்கைந்து கற்பூரவல்லி இலைகளை மென்று தின்றால் வயிற்றுக்கோளாறு சரியாகும்.

புளியந்தளிரைத் துவையலாக்கிச் சாப்பிட்டால் வயிற்று மந்தம் தீரும். ஒரு துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டால் செரிக்கும் திறன் கூடும். கொய்யாத் தளிரை மென்று தின்றாலும் செரியாமை அகலும்.

நுணா இலைச்சாறு ஒரு பங்கு, உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறு ஒரு பங்கு எடுத்துக் கலந்து, மூன்று நான்கு வேளை சாப்பிட்டால் அனைத்து வயிற்றுக் கோளாறுகளும் நீங்கும்.

இதை ஆறு மாதக் குழந்தைக்கு 50 சொட்டும், 1-2 வயது குழந்தைக்கு 15 மில்லி, 3 வயதுக்கு மேலான குழந்தைக்கு 30 மில்லி கொடுத்தால் போதும்.


மரு.சு.சத்தியவாணி எம்.டி.,

வளசரவாக்கம், சென்னை-87,

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!