அழகுச் செடிகள் உற்பத்தி!

அழகுச் செடி HEADING PIC 0a25da82a1bc60a1c85c1a4abbc3d660

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

லர்ச் செடிகளையும், அழகுச் செடிகளையும், தேவையான அளவில் உற்பத்தி செய்ய, பாலினப் பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் ஆகிய இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பாலினப் பெருக்கம்

ஓராண்டு மலர்ச் செடிகள், விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படி, விதைகள் மூலம் உற்பத்தி செய்வதை, பாலினப் பெருக்கம் எனலாம். இம்முறையில், முதிர்ந்த விதைகளைக் கொண்டு, நாற்றங்கால் அமைத்து, அதில் வளர்ந்த நாற்றுகளை எடுத்து நடலாம்.

நமக்குத் தேவையான நிறமுள்ள மலர்களைப் பெற, தன் மகரந்தச் சேர்க்கை மூலம் விளைந்த விதைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அயல் மகரந்தச் சேர்க்கையில் விளைந்த விதைகள், தாய்ச்செடியின் குணங்களைப் பெற்றிருக்காது.

இம்முறை எளிமையானது. செடிகளை மிகுதியாக உற்பத்தி செய்யலாம். ஜீனியா, காஸ்மாஸ், கோழிக்கொண்டை, பால்சம் ஆகிய செடிகள், இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பாலிலா இனப்பெருக்கம்

மலர்ச் செடிகள் மற்றும் அழகுச் செடிகள், தாய்ச் செடியின் குணங்களைப் பெற, பாலிலாப் பெருக்க முறை பயன்படுகிறது. விதைகளைத் தவிர மற்ற பாகங்களைப் பயன்படுத்துதல், பாலிலா இனப்பெருக்கம் ஆகும். குச்சிகள், பதியன்கள், மொட்டுக் கட்டுதல், ஒட்டுக் கட்டுதல் ஆகிய முறைகளில், பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

குச்சிகள்

செடிகளின் குச்சிகள் அல்லது இலைத் துண்டுகளைக் கொண்டு, இம்முறையில் செடிகளை உற்பத்தி செய்யலாம். இளம் நுனித்தளிர், மென்தண்டு, மத்திமத் தண்டு, கடினத்தண்டு ஆகியவற்றைக் கொண்டு, இம்முறையில் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இளம் நுனித்தளிர்: பொன்னாங் கண்ணி, புதினா போன்றவை இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்முறையில், இளம் நுனித் தளிர்கள் நேரடியாக நடப்படுகின்றன. இந்த நடவை, மாலையில் செய்ய வேண்டும். இவை பெரும்பாலும் ஒரு பகுதியைச் சுற்றிலும் நடப்படும், ஓரச் செடிகளாகப் பயன்படுகின்றன.

மென்தண்டுக் குச்சிகள்

இவை, சற்று வயதான குச்சிகள். கோலியஸ், டுராண்டா, கருநொச்சி போன்றவை, இவ்வகையில் இனவிருத்தி செய்யப்படுகின்றன. இந்தக் குச்சிகள் 10-15 செ.மீ. நீளத்தில் வெட்டப்பட்டு நடப்படுகின்றன. இவ்வகை மென் தண்டுகள், சதைப்பற்று மற்றும் வளையும் தன்மையில் இருக்கும். இவற்றை நேரடியாக அல்லது மேட்டுப் பாத்திகளில் நட்டு, வேர்கள் வந்ததும் எடுத்து, நெகிழிப் பைக்கு மாற்றி வைத்து நடலாம்.

மத்திமத் தண்டுக் குச்சிகள்

இவ்வகைக் குச்சிகள், மென் தண்டுக்கும் கடினத் தண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும். இந்தக் குச்சிகள் கடினமற்றவை என்றாலும், எளிதாக வளையாது. இந்தக் குச்சிகளில் செல்லுலோஸ் குறைவாக இருப்பதால், எளிதில் வேர்ப் பிடிக்கும். குரோட்டன், அரேலியா, செம்பருத்திச் செடிகள் போன்றவை, இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தக் குச்சிகள் பென்சில் கனத்தில் இருக்க வேண்டும். குச்சிகளின் நீளம் 15-20 செ.மீ. இருக்கலாம். அடிப்பகுதி சாய்வாகவும், மேல்பகுதி தட்டையாகவும் வெட்டப்பட வேண்டும். இந்தக் குச்சிகளில், 3-4 முதிர்ந்த மொட்டுகள் இருக்க வேண்டும்.

இந்தக் குச்சிகளை நேரடியாக, மண், மணல் மற்றும் குப்பையை, சரி பங்கில் கலந்து நிரப்பிய நெகிழிப் பைகளில் அல்லது மேட்டுப் பாத்திகளில் நட்டு, வேர்விட்ட பிறகு எடுத்து நடலாம். பனிக்கூடத்தில் வளர்த்தால், குறுகிய காலத்தில் நிறையச் செடிகளை உற்பத்தி செய்யலாம்.

கடினத் தண்டுக் குச்சிகள்

நன்கு முதிர்ந்த கிளைக் குச்சிகள் கடினத் தண்டுக் குச்சிகள் ஆகும். கடினமான இக்குச்சிகளின் மேல்பகுதி பச்சையமின்றி இருக்கும். அழகு மாதுளைச் செடிகள், திராட்சைக் கொடிகள் இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மத்திமத் தண்டுக் குச்சிகளைப் போலவே இந்தக் குச்சிகளையும் தயாரித்து நட்டு, வேர் வந்த பிறகு பயன்படுத்தலாம். குச்சிகள் மூல உற்பத்தியின் போது, அவற்றில் வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம்.

இன்டோல் பியூட்ரிக் அமிலம் பொதுவான வேர் வளர்ச்சி ஊக்கியாகும். இது, செராடிக்ஸ், ரூட்டெக்ஸ் போன்ற பெயர்களில் விற்கப்படுகிறது. குச்சிகளை நீரில் நனைத்த பின் இம்மருந்திலும் நனைத்து நட்டு, வேர் உண்டாவதை வேகப்படுத்தலாம்.

இந்த முறைகளைத் தவிர, சிலவகை அழகுச் செடிகள், இலைத் துண்டுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாம்புக் கற்றாழை,  பிரையோபில்லம் போன்றவை இதில் அடங்கும். சிலவகைச் செடிகள், வேர்கள் மூலம் பெருக்கப்படுகின்றன. விதையில்லாக் கறிப்பலா இவ்வகையில் அடங்கும்.

மொட்டுக் கட்டுதல்

மொட்டுக் கட்டுதல் மூலம் செடிகளை உற்பத்தி செய்வதில், தாய்ச்செடியின் குணங்கள் மாறுவதில்லை. அதனால், ரோசா போன்ற மலர்ச் செடிகள் உற்பத்திக்கு இம்முறை பின்பற்றப்படுகிறது.

எட்வர்ட் அல்லது ஆந்திர ரோசா வகைகள் இம்முறையில் வேர்ச் செடிகளாக வளர்க்கப்பட்டு, அவற்றில் தேவையான இரகங்களின் மொட்டுகள் எடுத்துப் பொருத்தப்படுகின்றன. மொட்டுக் கட்டுதலில் பல முறைகள் இருந்தாலும், பட்டை வடிவ மொட்டுக் கட்டுதல், T வடிவ மொட்டுக் கட்டுதல் ஆகியன, மிகுதியாக வழக்கத்தில் உள்ளன.

பட்டை வடிவ மொட்டுக் கட்டுதல்

வேர்ச் செடியில் பட்டை வடிவத்தில் சீவிவிட்டு, அதைப் போன்று மொட்டுத் தாய்ச் செடியிலும் சீவி விட்டு, இரண்டையும் பொருத்தி, நெகிழித் தாளால் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால், தாய்ச் செடியிலிருந்து மொட்டு வளர்ந்து செடியாக உருவாகும்.

T வடிவ மொட்டுக் கட்டுதல்

கவசம் போல் மொட்டுகளைத் தாய்ச் செடியிலிருந்து எடுத்துக் கொண்டு T வடிவில் வெட்டிய வேர்ச் செடியின் பட்டைக்குள் செல்லுமாறு பொருத்தி, நெகிழித் தாளால் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்யும் போது, மொட்டுகள் பாதுகாப்பாகப் பேணப்பட்டு, எளிதில் துளிர்த்துச் செடிகளாக மாறும்.

பதியன்கள்

இம்முறையில், அழகுச் செடிகளை எளிதாக உற்பத்தி செய்யலாம். பதியன் என்பது, தாய்ச் செடியிலுள்ள கிளைகளில் வேர்களை உருவாக்கிப் பிரித்து எடுப்பதாகும். இதில், விண் பதியம், மண் பதியம் என இருவகை உண்டு.

விண் பதியம்: இம்முறையில் செடிகளின் மேல் பகுதியில் உள்ள, பென்சில் அளவுத் தண்டுகளில் உள்ள பட்டையை, ஒரு செ.மீ. நீளத்துக்கு வெட்டி எடுத்து விட வேண்டும். இதில் நன்கு வெந்து ஆறிய தென்னை நார்க் கழிவை வைத்து, நெகிழித் தாளால் கட்டிவிட வேண்டும். இதை மண் சட்டியில் வைத்துப் பராமரித்து நடலாம். செடிகளின் மேல் பகுதியில் செய்யப்படுவதால் இது விண் பதியம் எனப்படுகிறது.

மண் பதியம்: தரையில் அல்லது தரைக்கு அருகிலுள்ள குச்சிகளை, மண் பதியத்துக்குப் பயன்படுத்தலாம். பென்சில் அளவுக் குச்சிகளில் நுனியிலிருந்து ஒரு அடி தள்ளிக் காயப்படுத்தி, அந்தப் பகுதியை, மண் நிறைந்த தொட்டிக்குள் வைத்து, தேவையான அளவு மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.

குச்சி மண்ணை விட்டு மேலே எழும்பி விடாமலிருக்க, சிறிய கல்லை அதன் மேல் வைக்க வேண்டும். இப்படிச் செய்து தொடர்ந்து நீரூற்றி வந்தால், இரண்டு மாதத்தில் தாய்ச் செடியிலிருந்து பிரித்து நடவு செய்யலாம்.

திசு வளர்ப்பு

தாவரங்களின் செல்களை அல்லது திசுக்களைக் கொண்டு, செடிகளை உற்பத்தி செய்தல், திசு வளர்ப்பு எனப்படுகிறது. இப்போது இம்முறை பெருமளவில் பயனில் உள்ளது. தாவரச் செல் அல்லது திசுவை எடுத்து, அது வளர ஏதுவான சூழலை ஏற்படுத்தி, செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இம்முறையில், ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற விலையுயர்ந்த மலர்ச் செடிகள் உருவாக்கப் படுகின்றன. இம்முறையில், குறைந்த இடத்தில், குறுகிய காலத்தில் இலட்சக் கணக்கில் கன்றுகளை உருவாக்கலாம்.


அழகுச் செடி SATHISH G 2

முனைவர் கோ.சதீஸ், முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் ப.யோக மீனாட்சி, முனைவர் வி.அ.விஜயசாந்தி, முனைவர் மூ.சபாபதி, முனைவர் இரா.மணிமேகலை, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் – 602 025.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!