வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்

ழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன.

நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்; இதயநோய், நீரிழிவு மற்றும் புற்று நோயைத் தடுப்பது தெரிய வந்துள்ளது. எனவே, மருத்துவர்கள் மற்றும் சத்தியல் நிபுணர்கள், வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகளைக் கருத்தில் கொண்டு, வெந்தயம், பூண்டு மற்றும் இஞ்சியை, அன்றாட உணவில் சேர்க்கச் சொல்கின்றனர்.

வாசனைப் பொருள்களைக் குறைவாகப் பயன்படுத்துவதால், அவற்றின் மூலம் கிடைக்கும் சத்துகளும் குறைவாகவே உள்ளன. ஆனால், சில பொருள்களில் இரும்பும் பொட்டாசியமும் அதிகமாக உள்ளன.

சிலவற்றில் இருக்கும் டானின் என்னும் வேதிப்பொருள், இரும்புச் சத்தை உடலில் சேர விடாமல் தடுக்கிறது. வாசனைப் பொருள்களில் மருத்துவக் குணமுள்ள கோலீன் அமைன்கள் உள்ளன. சில பொருள்கள் தீய பாக்டீரியாவை அழிக்கும் கிருமி நாசினியாகத் திகழ்கின்றன.

சத்துகள்

புரதம்: வாசனைப் பொருள்களில் 1-26 சதம் புரதம் உள்ளது. வெந்தயம், கொத்தமல்லி, சீரகம், ஓமம், கசகசா மற்றும் மிளகில் புரதம் மிகுந்துள்ளது.

கொழுப்பு: இது, எளிதில் ஆவியாகும் எண்ணெய்யாக உள்ளது. ஜாதிக்காய், பத்திரி, கசகசா, கொத்தமல்லி மற்றும் சீரகத்தில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. வாசனைப் பொருள்களில் தாதுப்புகளும் நார்ச்சத்தும் மிகுதியாக உள்ளன. கொத்தமல்லி, வற்றல், ஏலக்காய், ஓமம், மிளகு, சீரகம், கிராம்பு, கசகசா மற்றும் வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

மாவுச்சத்து: 3-70 சத மாவுச்சத்து மற்றும் 29-472 கிலோ கலோரி ஆற்றலை, வாசனைப் பொருள்கள் தருகின்றன. ஜாதிக்காய், கசகசா மற்றும் மஞ்சளில் மாவுச்சத்து அதிகம்.

நுண் சத்துகள்: கசகசா, ஓமம், சீரகத்தில் கால்சியம் மிகுந்துள்ளது. சீரகம், ஓமம், கசகசா, கொத்தமல்லி, வற்றல் ஆகியவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. மஞ்சள், பெருங்காயம், திப்பிலி, மிளகு, சீரகம், கிராம்பு, கசகசா, புளியில் இரும்புச்சத்து மிகுந்துள்ளது. ஜாதிக்காய், கொத்தமல்லி, மிளகு மற்றும் வற்றலில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

கோலீன் என்னும் சத்து, வாசனைப் பொருள்களில் நிறைய உள்ளது. நரம்புகளின் உணர்ச்சிகளைப் பரிமாற்றம் செய்ய உதவும் இது, ஏலக்காய், வெந்தயம், கொத்தமல்லி, சீரகத்தில் மிகுதியாக உள்ளது. இதய நலனுக்குத் தேவையான பொட்டாசியம், கொத்தமல்லி, சீரகம், வெந்தயம் மற்றும் வற்றலில் அதிகளவில் உள்ளது.

நோயெதிர்ப்பு ஆற்றலைத் தரும் துத்தநாகம், செலீனியம் ஆகியன, கசகசா, ஓமம், வெந்தயம், கொத்தமல்லியில் கூடுதலாக உள்ளன. இனி, அன்றாட உணவில் பயன்படும் வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகளைப் பார்க்கலாம்.

சோம்பு: குடலிலுள்ள வாயுவை அகற்ற, வயிற்றுவலி மருந்தாகப் பயன்படுகிறது.

பெருங்காயம்: கிருமிகளை அழிக்க, நெஞ்சுச்சளி, கக்குவான் இருமல் குணமாக, உடலிலுள்ள நஞ்சை வெளியேற்றும் சுரப்பைப் பெருக்க உதவுகிறது.

கிராம்பு: யூஜினால் வேதிப்பொருள் இதில் உள்ளது. உடல் செல்களில் ஏற்படும் திடீர் மாற்றத்தைத் தடுக்க, பல்வலி மருந்தாக உதவுகிறது.

கொத்தமல்லி: நீரில் ஊற வைத்த கொத்தமல்லி விதைச் சாற்றைக் குடித்தால் வாயு, வாந்தி, வயிற்றுச் சிக்கல் அகலும்.

சீரகம்: கியுடீனால்டிஹைடு தைமால் தலாய்டுகள் போன்றவை உள்ளன. புற்றுநோயைத் தடுக்கும் நொதிலினைப் பெருக்க உதவும். இதிலுள்ள வாசனை எண்ணெய், மக்னீசியம் மற்றும் சோடியம் பசியைத் தூண்டிச் செரிக்கச் செய்யும். மூலம், வயிற்றுவலி, இரத்தச் சோகையைப் போக்கும். பால் சுரப்பைத் தூண்டும்.

இஞ்சி: ஜின்ஜிபெரின், கேம்பின், போரனியால் ஆகிய வேதிப் பொருள்கள் உள்ளன. ஒற்றைத் தலைவலி, காய்ச்சல், இருமல், மூட்டுவலி, செரிமானச் சிக்கல், மூலம், பசியின்மை அகலும். இதிலுள்ள சினியோல் மன அழுத்தத்தைக் குறைக்கும். இறைச்சி எளிதில் செரிக்கும்.

பூண்டு: நோயெதிர்ப்பு சக்தியைத் தரும். கேன்டிடா ஈஸ்ட் மற்றும் பாக்டீரிய பூஞ்சையை அழிக்கும். பதரச, காரீய நச்சை உடலிலிருந்து வெளியேற்றும். குடற்புற்றைத் தடுக்கும். இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி, இரத்தச் சர்க்கரையைச் சீராக வைக்கும். இரத்த உறைவைத் தடுக்கும். காசநோய், தோல் நோய், செரிப்புச் சிக்கல், விஷக்கடியைப் போக்கும். முதுமையைத் தள்ளிப் போடும்.

வெந்தயம்: இது, வாசனை மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. ஒருவிதக் கசப்புச் சுவை மற்றும் வேறுபட்ட மணமுள்ளது. இதில், புரதம், மாவுச்சத்து, ஆவியாகும் எண்ணெய், நிலையான எண்ணெய், வைட்டமின்கள், என்சைம்கள், நார்ச்சத்து, சல்போனின், கோலீன், டிரைகோ நெல்லீன் போன்றவையும் உள்ளன.

இதயநோய் மற்றும் நீரிழிவைத் தடுக்கும் வெந்தயம்: கொலஸ்ட்ராலைக் குறைப்பதில், உணவில் பயன்படும் கொழுப்பு மற்றும் எண்ணெய் அளவு, கொழுப்பு அமிலங்களின் விகிதம், கரையும் நார்ச்சத்து போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் கூடுவதால், உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள தேசியச் சத்து மையத்தின் ஆய்வில், வெந்தயத்தை உண்ட மனிதர்களின் மொத்த கொலஸ்ட்ரால்; குறைந்த அடர்த்தியுள்ள லிப்போ புரோட்டின் மற்றும் மிகக் குறைந்த அடர்த்தியுள்ள லிப்போ புரோட்டின் அளவைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன், வெந்தயத்தை உண்பது உறுதுணையாகச் செயல்படுகிறது. வெந்தயத்தில் உள்ள நீரில் கரையும் 48 சத நார்ச்சத்து, சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை வெகுவாகக் குறைக்கிறது. இது, சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் ரிசாப்டர்களை அதிகப்படுத்தி, குளுக்கோசின் தேவையைக் குறையச் செய்கிறது.

மேலும், இரத்தம் மற்றும் கண் லென்சிலுள்ள சர்க்கரையைக் குறைக்கிறது. தினமும் வெந்தயத்தை, காலையில் 5 கிராம், மதியம் 10 கிராம், இரவில் 10 கிராம் வீதம் உண்டு வந்தால், இரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் குறையும்.

மேலும், தினமும் நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் மற்றும் சீரான உணவு முறைகளைக் கையாள வேண்டும். உடல் எடை குறைந்தால் இன்சுலின் நன்கு வேலை செய்யும்.

இதிலுள்ள டையோஸ்ஜெனின் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவும். வலி மற்றும் வீக்கம் குறைத்தல், செரிப்பைத் தூண்டுதல், குடலிலிருந்து வாயுவை அகற்றுதல், வயிற்றுப் போக்கு, பசியின்மை மற்றும் தொடர் இருமலைக் குணமாக்கும். அழகுப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

உணவில் பயன்படுத்துதல்: முளைக்கட்டி அல்லது இரவில் நீரில் ஊற வைத்து அல்லது அப்படியே விதையாக அல்லது பொடியாக, உணவில் அல்லது மோரில் கலந்து உண்ணலாம்.

தோசை, இட்லி, சப்பாத்தி, பிரெட், பிஸ்கட், உப்புமா, தயிர், பருப்புப்பொடி, குழம்பு மற்றும் காய்கறிகளில், வெந்தயப் பொடியைச் சேர்த்து உண்டால், வெந்தயத்தின் கசப்புத் தன்மை ஓரளவு குறையும்.

மஞ்சள்: இது, கிழங்கு வகை வாசனைப் பயிராகும். கர்குமா லாஸ்கா எனப்படும். மஞ்சளில் உள்ள நிறமியின் பெயர் கர்குமின். இது, 3 சதம் உள்ளது. நறுமணப் பொருள்கள், மருந்துகள் தயாரிப்பில் மஞ்சள் உதவுகிறது.

மருத்துவக் குணங்கள்: மஞ்சள் தூளைத் தேன் அல்லது நெய்யில் கலந்து உண்டால், சளி, இருமல் குணமாகும். பாக்டீரியா போன்ற கிருமிகளை எளிதில் அழிக்கும். எனவே, உடல் காயங்கள் எளிதில் ஆறும்.

தொடர் வயிற்றுவலி தீர உதவுகிறது. மஞ்சள் சிறந்த கிருமிநாசனி. எனவே, சொறி, சிரங்கு எளிதில் குணமாகும். மஞ்சளில் தயாராகும் வேதிப் பொருள்கள் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.

மஞ்சளில் உள்ள கர்குமின், மனிதக் கல்லீரலைப் பாதுகாக்கும். புற்றுநோய்ச் செல்களை அழிக்கும். எனவே, மார்புப்புற்று மற்றும் சருமப் புற்றைக் குணமாக்கும். கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பைக் குறைக்கும்.

குங்குமப்பூ: இதில், 150 ஆவியாகும் நறுமணப் பொருள்கள், கரோட்டினால்ட் என்னும் இரசாயனப் பொருள் உள்ளன. சுவையூட்டும் பிக்ரோ குரோசின், மணமூட்டும் சாக்ரனால், நிறமூட்டும் குரோசினும் உள்ளன. இதில், கரையும் நிலையிலுள்ள, பிக்ரோ குரோசினால் கசப்பாக இருக்கும். சாப்ரனால் ஆலில் தனிப்பட்ட மணத்தைத் தரும்.

ஆயுர்வேத மருந்துகளில் குங்குமப்பூ அதிகளவில் பயன்படுகிறது. முக்கியமாக, விஷ முறிவு மருந்துகள், இதயம், குடல், ஈரல், நரம்பு நோய்கள் சார்ந்த மருந்துகள், புத்துணர்வு டானிக் ஆகியவற்றில் இது பயன்படுகிறது. மேலும், ஆஸ்துமா, இருமல், மூளை நோய் மருந்தாக விளங்குகிறது. நல்ல பார்வை மற்றும் உடல் நிறம் பளிச்சிட உதவுகிறது.

யுனானி மருத்துவத்தில், ஈரல், வயிறு, இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் சிறுநீரகச் சிக்கலைச் சரி செய்ய, குங்குமப்பூ உதவுகிறது. இதில், பொடி மற்றும் எண்ணெய் எடுக்கப்படுகிறது. கட்டிகள் மற்றும் புற்றுநோய்க்கு மருந்தாக விளங்குகிறது.


வாசனைப் பொருள் SHANTHI 1 e1644646100327

முனைவர் கி.சாந்தி, முனைவர் ஜெ.செல்வி, சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை. முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணக்கலா, முனைவர் தி.உமா மகேஸ்வரி, முனைவர் க.ஹேமலதா, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!