தாதுகள் நிறைந்த புளிச்ச கீரை!

புளிச்ச கீரை

ந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வளரும் கீரைகளில் ஒன்று புளிச்ச கீரை. இதன் புளிப்புச் சுவையால் இப்பெயர் பெற்றது. பச்சைத் தண்டு மற்றும் சிவப்புத் தண்டுப் புளிச்ச கீரை எனவும், வெள்ளைப்பூ மற்றும் சிவப்புப்பூ புளிச்சை கீரை எனவும், செம்புளிச்சை, கரும் புளிச்சை எனவும் பல வகைகள் உள்ளன. சிவப்புத் தண்டுப் புளிச்ச கீரை, தேநீர்த் தயாரிப்பில் உதவுகிறது. சிவப்புப்பூ கீரையில் புளிப்புச் சற்றுக் கூடுதலாக இருக்கும்.

புளிச்ச கீரை சாகுபடி முறை

புளிச்ச கீரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையும் மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டலப் பயிராகும். பல்வேறு மண் வகைகளில் நன்கு வளரும். சித்திரை, ஆடி, மார்கழி, மாசியில் சாகுபடி செய்யலாம்.

எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இட்டு நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.

பிறகு, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும். விதைகளைப் பார்களின் பக்கவாட்டில் ஊன்றிப் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட வேண்டும்.

ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும். 10-15 நாட்கள் கழித்துக் களையெடுக்க வேண்டும். அவ்வப்போது களைகளை நீக்கி நிலத்தை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூச்சித் தாக்குதல் தெரிந்தால், நொச்சி, பிரண்டை, சோற்றுக் கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து, ஒருநாள் வைத்திருக்க வேண்டும்.

பிறகு, பத்து லிட்டர் நீருக்கு 300 மில்லி கரைசல் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இருமுறை பாசனநீரில் கலந்துவிட வேண்டும். இதனால், கீரையின் வளர்ச்சிச் சீராக இருக்கும். இக்கீரையை 5 செ.மீ. உயரம் விட்டு, கீரையை முற்ற விடாமல் குறிப்பிட்ட இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும்.

புளிச்ச கீரையின் பயன்கள்

புளிச்ச கீரை, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலுள்ள நீர்ச்சத்து, LDL, டிரைகிலிஸரைடு மற்றும் ஒட்டுமொத்தக் கொழுப்பைக் குறைக்கும்.

புளிச்ச கீரைப் பூக்களில் செய்த தேநீரில் இருக்கும் ஆன்ட்டி ஸ்பாஸ்மோடிக் தன்மை, மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வலியைப் போக்கும்.

இக்கீரைக்கு ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் குணங்கள் உள்ளன. புளிச்ச கீரைப் பொடியை நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், எஸ்சீரிசியா கோலை, ஆரியஸ், மைக்ரோகாக்கஸ் லூக்கியஸ் போன்ற பாக்டீரிய வகைகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஆந்திரத்தில் இந்தக் கீரையின் பயன்பாடு மிகவும் அதிகம். இதற்கு அங்கு கோங்குரா எனப் பெயர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, சனம்பு, கைச்சிரங்கு, காய்ச்சக்கீரை என மேலும் பல பெயர்களும் உண்டு.

புளிச்ச கீரையில், புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், ரிபோஃபிளவின், வைட்டமின் சி, மாவுச்சத்து, லீனோலெனிக் மற்றும் ஓலிக் அமிலம், ஃபோலிக் அமிலம், ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் என, உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் நிறைந்து உள்ளன.

எனவே, குறைந்தது வாரம் இருமுறை, உடல் வலுவற்ற குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தனர். இக்கீரை உடல் வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.

தோல் ஒவ்வாமைக்குச் சிறந்த தீர்வாக உள்ளது. புளிச்ச கீரைப் பழச்சாற்றை, சர்க்கரை மிளகைச் சேர்த்துப் பருகினால், மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகும்.

புளிச்ச கீரை விதை பாலுணர்வைத் தூண்டும். காசநோயை குணமாக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இக்கீரையை அரைத்து உடலில் பூசினால் உடல்வலி அகலும்.

நீர்க் கோர்த்தல், இதயநோய் மற்றும் இரத்தநாளச் சிக்கல் உள்ளோர், இக்கீரையை மசியல் செய்து சாப்பிடலாம். இதிலுள்ள நீர்ச்சத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். வைட்டமின் சி மற்றும் தாதுகள் சருமத்தைப் பாதுகாக்கும்.

பித்தம் மிகுந்து நாவில் சுவை தெரியாமல் உள்ளோர், இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மந்தம், இருமல், காய்ச்சல் மற்றும் வீக்கம் அகல புளிச்ச கீரை உதவும். சொறி, சிரங்கு உள்ளவர்கள், இக்கீரையைத் துவையலாகச் செய்து உணவில் சேர்த்து வர வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி கூடும்.

புளிச்ச கீரையில் உள்ள இரும்புச்சத்து, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவால் ஏற்படும், தலைமுடி உதிர்வு, மயக்கம், சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவை குணமாக உதவும்.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் இளநரை மற்றும் வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையாக இருக்க வைக்கும். பாலிபீனால், ஆன்தோ சையானின், ஃபிளவனாய்ட்ஸ் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் வராமல் காக்கும். புற்றுநோய் அணுக்களை அழித்து மேலும் வளர விடாமல் தடுக்கும்.

புளிச்ச கீரைத் துவையல்

தேவையான பொருள்கள்: புளிச்ச கீரை ஒரு கட்டு,

மிளகாய் 3-4,

வெந்தயம் அரைத் தேக்கரண்டி,

உப்பு தேவைக்கேற்ப,

பூண்டு 7-8 பல்,

மிளகாய் வற்றல் 10,

முழுத் தனியா 1.5 தேக்கரண்டி,

எண்ணெய் தேவைக்கேற்ப,

மிளகாய் வற்றல் 6,

பூண்டு 6 பல்.

செய்முறை: கீரையை மட்டும் ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கீரையைத் தவிர மற்ற பொருள்களை இட்டு வதக்கி ஆற வைக்க வேண்டும்.

அடுத்து, கீரையை நன்கு வதக்கி ஆற வைக்க வேண்டும். இப்போது, முதலில் வதக்கி ஆற வைத்துள்ள பொருள்களை மிக்சியில் இட்டு நன்கு அரைக்க வேண்டும். இத்துடன், கீரையைச் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

பிறகு, இதைக் கடாயில் இட்டு நன்கு வதக்க வேண்டும். எண்ணெய்யைக் கொஞ்சம் தாராளமாக விட்டு, எண்ணெய் மேலே மிதக்கும் வரை விழுதை நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து, மிளகாய் வற்றல் மற்றும் பூண்டுப் பற்களை எண்ணெய்யில் வதக்கித் துவையலில் சேர்த்தால், இவை கீரையில் ஊறி ருசியைக் கூட்டும். இந்தத் துவையல் 10-15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.


புளிச்ச கீரை DR.G.KALAISELVI e1616350379131

முனைவர் கோ.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம். சென்னை – 600 051.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!