திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மாம்பட்டு இராமாபுரத்தைச் சேர்ந்தவர் வி.கார்த்திக். பி.சி.ஏ. பட்டப் படிப்பை முடித்த 25 வயது இளைஞர். இப்போது இவர் பொறுப்புள்ள முழு நேர விவசாயி. விவசாயத்தில் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பதைப் பற்றி, அவர் நம்மிடம் கூறியதாவது:
“நானு கல்லூரிப் படிப்பை முடிச்சதும் அப்பிடியே விவசாயத்துக்கு வந்துட்டேன். இந்த நாலஞ்சு வருசமா என்னோட முழு கவனமும் விவசாயத்துல தான் இருக்கு. எங்களுக்கு இருக்குறது ஒரு எண்பது சென்ட் நிலம் தான். இது தான் எங்க வாழ்க்கைக்கான ஆதாரம். அதனால, இந்த நிலத்தை நல்ல முறையில பயன்படுத்துறது அவசியம்ன்னு முடிவு செஞ்சேன்.
இன்னிக்கு, விவசாயத்துல ஆள் பற்றாக்குறை இருக்கு. அதனால, எந்த வேலையையும் சரியான நேரத்துல செய்ய முடியல. அதோட ஆள் கூலியும் அதிகமா இருக்கு. உர விலையும் அதிகமா இருக்கு. உழுகுறேன், பாத்தி கட்டுறேன், நடவு நடுறேன், களை எடுக்குறேன், அறுவடை செய்யிறேன்னு, உழவடைச் செலவுகளும் அதிகமா இருக்கு.
சரி, இப்பிடியெல்லாம் செலவழிச்சு விளைய வைக்கிற பொருள்களுக்கு நிரந்தர விலை, உத்தரவாதமான விலைன்னு ஏதாவது இருக்கான்னா அதுவும் இல்ல. இதுமட்டுமில்ல, ஒவ்வொரு பொருளும் அப்பிடியே லேசா வெளஞ்சு வந்துர்றது இல்ல.
மழை, வெய்யில், காத்து, பூச்சி, நோயின்னு, இயற்கை நடத்துற பல வேலைகள சமாளிச்சு தான் எடுக்க வேண்டியிருக்கு. அப்போ, இத்தனை சிக்கல்கள்ல இருந்து மீளணும்ன்னா, விவசாயத்துல ஒரு தற்சார்பு நிலைய உருவாக்கியே தீரணும்.
அதாவது, நம்ம விவசாயம், முழுசா வேலையாள்கள நம்பி இருக்கக் கூடாது. முடிஞ்ச மட்டும் நாமளே செஞ்சுக்கிறணும். உழவடைச் செலவுகள குறைக்கணும். வியாபாரி வந்தா தான் நம்ம பொருள விற்க முடியும்ங்கிற நிலைய மாத்தணும். அதாவது, நாமளே நம்ம பொருள ஜனங்ககிட்ட கொண்டு போயி சேர்க்கணும்.
இத்தனை யோசனைகளோட முடிவு தான், என்னோட கொய்யா சாகுபடி. எழுபது சென்ட் நிலத்துல அடர் நடவு முறையில, ஆறுக்கு ஏழடி இடைவெளியில, தைவான் பிங்க் கொய்யா இரகத்தைப் பயிர் செஞ்சிருக்கேன்.
ஆந்திராவுல இருந்து 600 கன்னுகள வாங்கிட்டு வந்து, 2022 ஆம் வருசம் ஜூலை மாசம் நட்டேன். அதுல ஒரு ஐம்பது கன்னுக சேதமாகிப் போச்சு. மற்ற கன்னுக இப்போ காய்ப்புக்கு வந்துருச்சு.
ஒரு சதுர அடி அளவுல குழிகள எடுத்தேன். குழிக்கு 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு, வேம் உயிர் உரம், 50 கிராம் டிஏபின்னு போட்டு கன்னுகள நட்டேன். வாரம் ஒருமுறை பாசனம் செய்யிறேன். அமுதக் கரைசல், மீன் அமிலம், இ.எம். கரைசல சொந்தமா தயார் செஞ்சு, அப்பப்போ பாசனத் தண்ணியில கலந்து விடுறேன்.
எங்ககிட்ட நாலு பசு மாடுக இருக்கு. அதுக போடுற சாணம் இந்தச் செடிகளுக்கு இயற்கை உரமா கிடைக்குது. அதனால உரச் செலவுங்கிறது இல்ல. நாலு மாட்டுச் சாணமும் இந்த நிலத்துலயே சேருறதுனால, மண்ணு வளமா இருக்கு. இதனால கொய்யாச் செடிக நல்லா இருக்கு.
இப்போ, ஒருநாள் விட்டு ஒருநாள், இருபது கிலோ பழம் வருது. இதை மெயின் ரோட்டுல கொண்டு போயி வச்சு நானே வித்துட்டு வந்துருவேன். அப்புறம் போளூர் உழவர் சந்தைக்கும் கொண்டு போயி வித்துட்டு வருவேன்.
என்னோட உற்பத்திப் பொருளுக்கான விலையை நானே முடிவு செஞ்சு விக்கிறேன். இந்தப் பழங்கள மதிப்புக்கூட்டுப் பொருள்களா மாத்துனா, வருமானம் இன்னும் கூடுதலா கிடைக்கும். அதுக்கு முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
நம்மளோட ஒவ்வொரு உணவுப் பொருளும் சத்தானது தான். கொய்யாப் பழம் எப்பிடி சத்தானதோ, அதே மாதிரி கொய்யா இலையிலயும் மருத்துவக் குணம் இருக்கு. நீரிழிவு இருக்குறவங்க, கொய்யா இலையில, தேனீர் போட்டுக் குடிக்கிறது ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க.
அதனால, எங்க நிலத்துல இருக்குற கொய்யா இலைகள பறிச்சு, முறையா காய வச்சுப் பொடி பண்ணி, டீத்தூள் டிப்புக மாதிரி தயாரிச்சு விக்கிறேன். எங்க ஊரு டீக்கடைகள்ல இதை விரும்பி வாங்குறாங்க. பொது மக்களும் பிரியமா வாங்கிட்டுப் போறாங்க. இதை தயார் செய்யுறதுக்கு ஒரு மிஷின் வாங்கி வச்சுருக்கேன். தரமா தயாரிச்சுத் தர்றேன்.
ஆவாரை இருக்க, சாவார் உண்டோ அப்பிடின்னு ஒரு பழமொழி சொல்லுவாக. ஏன்னா, ஆவாரம் பூவுல கசாயம் செஞ்சு குடிச்சா, நீரிழிவு ஓடிப் போகும்ன்னு சொல்லுது சித்த வைத்தியம். அதைப் போல, செம்பருத்திப் பூவும் மருத்துவக் குணம் நெறஞ்ச பூ. இதய நோய் இருக்குறவங்க சாப்பிடலாம். எலுமிச்சைப் புல்லும் உடம்புக்கு நன்மை செய்யக் கூடியது.
அதனால, கொய்யா இலைத் தேனீர்த் தூள் மாதிரி, ஆவாரம் பூ தேனீர்ப் பொடி, செம்பருத்தித் தேனீர்ப் பொடி, எலுமிச்சைப் புல் தேனீர்ப் பொடியவும் டிப்புகளா தயாரிச்சுத் தர்றேன். என்னோட தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு. இன்னிக்கு விவசாயத்தை மட்டும் வச்சு பொழைக்க முடியாது. அதைச் சார்ந்த தொழில்களும் கைவசம் இருந்தா தான் சமாளிக்க முடியும்’’ என்றார்.
அவரின் நல்ல முயற்சி வெற்றிப் பெற வாழ்த்தி விடை பெற்றோம்.
பசுமை