கம்பு தரும் சுவைமிகு பண்டங்கள்!

கம்பு kambu saadam e1713511090981

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

சிறுதானியங்களில் ஒன்றான கம்பு, சத்து மிகுந்த உணவுப் பொருளாகும். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், நெல், சோளத்துக்கு அடுத்துப் பயிரிடப்படும் உணவுப் பயிராகும்.

கோடையில் கம்பங்கூழ் இல்லாத வீடே இருக்காது. கோடைக்கு இதமான குளிர்ச்சியைத் தருவதில் கம்புக்கு நிகர் கம்பு தான். இப்போது திருமண விருந்துகளில் கூட, கம்பு தயிர்ச்சோறு, அடை தோசை போன்ற உணவுப் பொருள்களைப் பரிமாறும் அளவில், மக்களின் கவனத்தைக் கம்பு பெற்றுள்ளது.

மற்ற சிறுதானியங்களை விட, கம்பில் புரதச்சத்தும் அமினோ அமிலங்களும் நிறைந்து உள்ளன. போதியளவு மாவுச்சத்தும், கொழுப்பும், இரத்த உற்பத்திக்குத் தேவையான இரும்புச் சத்தும் கம்பில் உள்ளன.

நூறு கிராம் கம்பில், மாவுச்சத்து 67.5 கிராம், புரதச்சத்து 11.6 கிராம், கொழுப்புச் சத்து 5.0 கிராம், இரும்புச் சத்து 8.0 மில்லி கிராம் உள்ளன.

கம்பிலிருந்து கூழ், சாதம் மட்டுமே முன்பு சமைக்கப்பட்டன. ஆனால், இன்றைய கால மாற்றத்துக்குத் தகுந்தவாறு புதுமையான கம்பு உணவுகள் தயாரிக்கப் படுகின்றன.

கம்பில் இருக்கும் உமியை நீக்கி விட்டு, அரிசியைப் போல் சமைக்கும் பழக்கம் இங்கே உண்டு. கம்பங்களி, கம்பஞ்சோறு, கம்பங்கூழ் போன்ற உணவுப் பொருள்கள், வெய்யில் காலத்தில் எல்லாருக்கும் ஏற்ற உணவுகள் ஆகும்.

கம்பு மாவைக் கோதுமை மாவுடன் கலந்து, சப்பாத்தி மற்றும் ரொட்டியைத் தயாரிக்கலாம். தோசை, இட்லியைத் தயாரிக்கலாம். கம்பு பச்சை உருண்டை, கம்பு உருண்டை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு நூடுல்ஸ் மற்றும் கம்பு பிஸ்கட்டைத் தயாரிக்கலாம்.

கம்பு அடை

அரிசிக்குப் பதிலாகக் கம்பு மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்து, அடை தயாரித்தால் தனித்த சுவையில், சத்துகள் நிறைந்த அடை நமக்குக் கிடைக்கும்.

கம்பு உருண்டை

வறுத்த கம்பு மாவில், பொட்டுக்கடலை மாவைக் கலக்க வேண்டும். இத்துடன் வெல்லப்பாகு, ஏலக்காய், முந்திரியைச் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். இப்படித் தயாரித்த கம்பு உருண்டைகள், நெடுநாட்கள் கெடாமல், சுவை மாறாமல் இருக்கும்.

கம்பு உப்புமா

கம்பு உப்புமா, மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் சுவையான உணவாகும். இதைக் காலை நேர உணவாக எல்லாரும் உண்ணலாம். நல்ல சக்தியைக் கொடுக்கும்.

கம்பு தோசை, இட்லி

ஒரு கிலோ கம்புக்கு 400 கிராம் உளுத்தம் பருப்பு வீதம் ஊற வைத்து, இட்லிப் பதத்துக்கு அரைத்துப் புளிக்க வைத்து, இட்லி மற்றும் தோசை செய்யலாம். காலை, மாலை உணவுக்கு ஏற்றது.

கம்பிலிருந்து பலவகையான பண்டங்களைத் தயாரித்து விற்கலாம். கம்பைப் பயிரிடும் விவசாயிகள், அறுவடைக்குப் பின் மதிப்புக்கூட்டு உத்திகளைக் கடைப்பிடித்து, உடனடி கலவைகளாக, பண்டங்களாகத் தயாரித்து, விற்பனை செய்ய முன் வந்தால், அதிக இலாபத்தை ஈட்டலாம்.


PB_Thenmozhi

முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் எஸ்.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!