உவர்நீர் இறால் வளர்ப்பு!

இறால் உவர்நீர் இறால்

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.

யற்கையாக அமைந்த அல்லது அமைக்கப்பட்ட குளங்களில் உவர்நீர் இறால் இனங்களை வளர்க்கலாம். இவை, தனித்தன்மை வாய்ந்த புரதம் மற்றும் சுவையுடன் இருப்பதால், சந்தை வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

உவர்நீர் இறால் இனங்களில் பல வகைகள் இருப்பினும், குறுகிய காலத்தில், விரைவாக வளர்ந்து அதிக எடையை அடையும் வரி இறால், வெள்ளைக்கால் இறால், இந்திய வெள்ளை இறால் ஆகியன விரும்பி வளர்க்கப்படும் இனங்களாக உள்ளன. வரி இறால், 33 செ.மீ. நீளம், 320 கிராம் எடையை அடையும்.

இறால் குளம் அமைவிடம்

உவர்நீர் நிலைகளுக்கு அருகில் வண்டல் மண், களிமண் கலந்த இடத்தில் உவர்நீர் இறால் வளர்ப்புக் குளத்தை அமைக்கலாம். குளத்தின் ஆழம் வரப்புடன் ஆறடி இருக்க வேண்டும்.

இதில், 3.5-4 அடி நீரைத் தேக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு குளமும் 0.5-1.5 எக்டர் பரப்பில் செவ்வக வடிவில் இருக்க வேண்டும். குளக்கரைச் சரிவானது 1:1.5 என்னும் விகிதத்தில் இருக்க வேண்டும்.

குளத் தயாரிப்பு

குளத்தை நன்கு காயவிட்டு உழ வேண்டும். பிறகு, 250 கிலோ சுண்ணாம்பை இட்டு, குளத்தின் கார அமிலத் தன்மையை 7.5-8.5 வரை உயர்த்த வேண்டும். ஒரு எக்டர் குளத்தில் 1,000 கிலோ மட்கிய சாணம், 250 கிலோ கோழியெருவை இட்டு, ஒரு அடி உயரத்தில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.

மேலும், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்களை 4:1 வீதம், 25-50 கிலோ வரையில் இட வேண்டும். உரமிடுதல் மூலம் இயற்கை உயிருணவுகளின் உற்பத்தியை உயர்த்தலாம்.
சில நாட்கள் கழித்து நீரின் நிறம் பச்சையாக மாறியதும், நீர் மட்டத்தை ஒரு மீட்டருக்கு உயர்த்தி, தேவைக்கேற்ற உரமிட்டு அறுவடைக் காலம் வரையில் பராமரிக்க வேண்டும்.

குஞ்சுகளை இருப்பு வைத்தல்

தரமான குஞ்சுகளை வாங்கி நாற்றங்கால் குளத்தில் ஒரு மாதம் வரையில் வைத்திருந்து, அதன்பின் வளர்ப்புக் குளத்தில் விட வேண்டும். இதனால், குஞ்சுகளின் பிழைப்புத் திறன் அதிகமாக இருக்கும்.

நாற்றங்கால் குளத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 100 குஞ்சுகள் வீதம் இருப்பு வைக்கலாம். வளர்ப்புக் குளத்தில் பாரம்பரிய முறையில், எக்டருக்கு 50 ஆயிரம் குஞ்சுகளை இருப்பு வைக்கலாம். மிதத்தீவிர முறையில் ஒரு இலட்சம் குஞ்சுகளை விடலாம்.

இருப்புக்குப் பின் பராமரிப்பு

குஞ்சுகளைக் குளத்தில் விட்ட பிறகு, குளத்து நீரின் தரத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இறால்களின் வளர்ச்சியும், பிழைப்புத் திறனும், குளத்து நீரைப் பொறுத்தே அமையும். அதனால், நீரில் கரைந்துள்ள பிராண வாயு, கார அமிலத் தன்மை மற்றும் நுண்ணுயிரிகளின் உற்பத்தியைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

நீரின் வெப்பநிலை 26-32 டிகிரி செல்சியஸ், பிராண வாயு 5-8மி.கி./லி., நீரின் ஒளிப்புகாத் தன்மை 30-45 செ.மீ., உப்புத் தன்மை 10-25 பி.பி.டி. இருந்தால், இறால்கள் நன்கு வளரும். பிராண வாயு சரியான அளவில் கிடைக்க, காற்றூட்டியைப் பயன்படுத்தலாம்.

உணவு

இயற்கையாகக் குளத்திலிருந்து கிடைக்கும் உணவுடன், மேலுணவாக, 35-40 சதம் புரதமுள்ள உணவைக் கொடுக்க வேண்டும். இந்த மேலுணவின் அளவானது, இறால்களின் மொத்த எடையில் 8-2 சதம் வரையில், அவற்றின் வளர்ச்சிக்குத் தகுந்து இருக்க வேண்டும்.

இந்த உணவை மீன் தூள், கடலைப் புண்ணாக்கு, அரிசிக் குருணை, கோதுமைத் தவிடு, மரவள்ளி மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கலாம். இதைத் தவிர, இறால்களின் வளர்ச்சிக்குத் தகுந்து, தொடக்கக்கால, வளர்ச்சிக்கால, முடிவுக்காலத் தீவனத்தை, சந்தைகளில் இருந்து வாங்கிக் கொடுக்கலாம்.

அறுவடை மற்றும் விற்பனை

120-150 நாட்களில், இறால்கள் 20-30 கிராம் அளவில் வளர்ந்து விடும். குளத்து நீரைக் குறைத்தும், பை போன்ற வலைகளைக் கொண்டும், இந்த இறால்களைப் பிடிக்கலாம். மேலும், குளத்து நீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு, கைத்தடவல் முறையில் மீதமுள்ள இறால்களைப் பிடிக்கலாம்.


இறால் Dr.K.Sivakumar e1628865572936

முனைவர் கி.சிவக்குமார், முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் – 603203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!