வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

வாழை maxresdefault Copy e1614433977920

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

துரை மாவட்டத்தின் மதுரைக் கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள வாழைகளில், குறிப்பாக, தென்னந்தோப்புகளில் உள்ள வாழைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. 

பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி

முட்டை: வாழையிலையின் அடியில் சுருள் வடிவத்தில் முட்டைகளை இடுவதால் சுருள் வெள்ளை ஈ எனப்படுகிறது. முட்டைகள் நீள் வட்டத்தில், மஞ்சள் நிறத்தில் மிகச்சிறிய அளவில் (0.3மி.மீ.) வெள்ளை மெழுகுப் போர்வையுடன் இருக்கும்.

குஞ்சுப் பருவம்: குஞ்சுகளில் ஐந்து பருவங்கள் உண்டு. முதல் பருவம் நகருதல். முட்டை பொரிந்ததும் இந்தக் குஞ்சுகள் மெதுவாக நகர்ந்து இலையின் சாற்றை உறிஞ்சும். மற்ற பருவங்கள் நகரும் தன்மையற்றவை. இக்குஞ்சுகள் தட்டையாக, நீளமாக மாறி அவ்விடத்திலேயே கூட்டுப்புழுக்களாக மாறும். 1.1-1.5 மி.மீ. நீளமுள்ள இக்குஞ்சுகள் இளமஞ்சள் நிறத்தில், மெழுகுப் படலத்தால் மூடப்பட்டிருக்கும்.

வளர்ந்த பூச்சி: 20-30 நாட்களில் கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் முதிர்ந்த ஈ 2.5 மி.மீ. நீளமிருக்கும். முன் இறக்கைகளில் ஒழுங்கற்ற இரண்டு வெளிர் சாம்பல் நிறத்திட்டுகள் இருக்கும். இது மற்ற வெள்ளை ஈக்களைக் காட்டிலும் பெரியது; எளிதில் காற்றில் அடித்துச் செல்லப்படுவதால், மற்ற தோட்டங்களுக்கும் பரவிச் சேதத்தை ஏற்படுத்தும்.

சேதாரம்: இப்பூச்சிகள் தாக்கிய இலைகள் போதிய சத்தின்றி வாடும். இவை வெளியேற்றும் தேன் போன்ற கழிவு அடியிலைகளில் விழுவதால், அங்கே கரும்பூசணம் வளரும். பிறகு இது இலை முழுதும் படர்ந்து ஒளிச்சேர்க்கையைத் தடுப்பதால், மரத்தின் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கும்.

தாக்குதல் அறிகுறிகள்: இலைகளின் அடியில் சுருள் வடிவில் முட்டைகள் இருக்கும். முதிர்ந்த பூச்சிகளும் அங்கே கூட்டமாக இருக்கும். மாலை மற்றும் இரவில் பறந்து திரியும். இலைகளின் பின்புறம் முழுதும் அடர்த்தியான வெள்ளை மெழுகுப்பூச்சு இருக்கும். அடியிலைகளின் மேலே படரும் கழிவில் பூசணம் வளர்வதால் கருநிறப் படலம் இருக்கும்.

மேலாண்மை

5×1.5 அடி மஞ்சள் பாலித்தீன் தாள்களை ஒட்டும் பொறிகளாக்கி, ஏக்கருக்கு 10 இடத்தில் 2 அடி உயரத்தில் பரவலாக வைத்து, பூச்சிகளை ஈர்த்து அழிக்க வேண்டும். கிரீஸ், விளக்கெண்ணைய் போன்ற ஒட்டும் பொருளை வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, கீழ் இலையின் அடியில் நன்கு படுமாறு நீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

கிரைசோபிட் இரை விழுங்கிகளை எக்டருக்கு 1,000 வீதம் விடலாம். இவை, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை, பெங்களூரு தேசியப் பூச்சிப் பாதுகாப்பு மையம் மற்றும் தனியார் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்களில் கிடைக்கும். 1,000 கிரைசோபிட் முட்டைகளின் விலை 150 ரூபாய்.

வெள்ளை ஈக்கள் மிகும் போது, பொறிவண்டுகள் மற்றும் என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் இயற்கையாகவே உருவாகி விடும். இவற்றால் தாக்கப்பட்ட வெள்ளை ஈக்களின் இளம் மற்றும் கூட்டுப்புழுக்கள் கறுப்பாக மாறி விடும். ஒட்டுண்ணி வெளியேறிய துளைகளும் இருக்கும். ஆகவே, தோப்புகளில் இவ்வகை இயற்கை எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளான இலைகளைச் சிறியளவில் வெட்டி, பாதிப்பு மிகுந்த மரங்களின் இலைகளில் கட்டிவிட வேண்டும். என்கார்ஸியா ஒட்டுண்ணி, பொள்ளாச்சி ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும்.

ஒரு லிட்டர் நீருக்கு 3% வேப்பெண்ணைய் அல்லது 1% அசாடிராக்டின் மருந்து, ஒரு மில்லி ஒட்டும் திரவம் வீதம் கலந்து இலையின் அடியில் தெளிக்கலாம். கரும்பூசணத்தைப் போக்க, 2.5% மைதாமாவுக் கரைசல்  அல்லது 0.1% ஸ்டார்ச் கரைசலை இலைகளில் நன்கு தெளிக்கலாம். பூச்சிக்கொல்லிகளை மிகுதியாகப் பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.


வாழை USHA RANI.B rotated e1629486799751

முனைவர் பா.உஷாராணி,

முனைவர் கி.ஆனந்தி, முனைவர் செல்வி இரமேஷ், 

வேளாண் அறிவியல் நிலையம், மதுரை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!