கட்டுரை வெளியான இதழ்: மே 2022
தேங்காயில் உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், கலோரிகள் உள்ளன. இதில், லாரிக் என்னும் செரிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. லாரிக் அமிலம் பாக்டீரியா, புரோட்டொசோவா, வைரஸ் ஆகியவற்றை அழிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. லாரிக் அமிலம் எல்.டி.எல் மற்றும் மொத்த கொலஸ்டிராலைக் குறைத்து ஹெச்.டி.எல். என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
கேப்ரிக் அமிலம் தீங்கு செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும். தேங்காயிலுள்ள கொழுப்புச் சராசரியாக 92 சதவிகிதம் செறிவுற்ற கொழுப்பாக உள்ளது. இதில், 62-70 சதவிகிதம் நடுத்தரச் சங்கிலிக் கொழுப்பாகும். இந்தக் கொழுப்பு எளிதில் செரிக்கிறது. மேலும், 9 சதவிகிதம் செறிவுறாக் கொழுப்பு உள்ளது. கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன.
தேங்காயிலிருந்து பிரிக்கப்படும் நார்ச்சத்தில் உள்ள ஹெமிசெல்லுலோஸ் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புள்ளது. இதன் புரதம் இதய நலம் மற்றும் இரத்தச் சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. இளநீர் மற்றும் முற்றிய தேங்காய் நீர் வாழ்க்கை முறை நோய்கள் தாக்குவதைக் குறைக்கும். இளநீரில் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், குளோரைடு, இரும்பு, செம்பு, சல்பர், மெக்னீசியம் போன்ற தாதுப்புகள், வைட்டமின்கள் பி, சி மற்றும் சர்க்கரை ஆகியன உள்ளன.
மேலும், அர்ஜினைன், அலனைன், சிஸ்டின் ஆகிய அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. தேங்காய் எண்ணெய்யில் எதிர் ஆக்ஸிஜனேற்றப் பொருள்கள் உள்ளன. ஒலியிக் அமிலம் என்னும் ஒற்றைச் செறிவுறாக் கொழுப்பு 6-8 சதம் உள்ளது.
தேங்காயிலிருந்து எண்ணெய், தேங்காய்ப்பால், மணமிகு தேங்காய்ப்பால், யோகார்ட், கிரீம், பால் பொடி, சர்க்கரை, பாகு, மிட்டாய், பானம், நீரா, தேன், வெல்லம், வினிகர், ஜாம், ஜெல்லி, ஊறுகாய், சட்னிப்பொடி, சீவல், உலர வைத்த தேங்காய், பர்பி, பொதியாக்கம் செய்யப்பட்ட இளநீர் போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. வெர்ஜின் தேங்காய் எண்ணெய்யில் உயிரிக்கக் கூட்டுப் பொருளான பாலிபினால் நிறைந்துள்ளது. முற்றாத இளம் பருப்புடன் 1.25 சதம் பெக்டின், 0.5 சதம் சிட்ரிக் அமிலம் சேர்த்துத் தேங்காய் ஜாம் தயாரிக்கலாம்.
உலர வைத்த தேங்காய்
நன்கு முற்றிய, அதாவது, 11-12 மாதத் தேங்காயை உலர வைத்த தேங்காயாகத் தயாரிக்கலாம். மட்டையுடன் ஒரு மாதம் சேமித்து வைப்பதால் நீர் உறிஞ்சப்படுகிறது. உலர வைத்த தேங்காயைத் தயாரிக்க, முதலில் தேங்காய் மட்டை மற்றும் ஓட்டினை அகற்றி விட்டு, பருப்பின் மேலுள்ள பழுப்புப் பகுதியை நீக்கி நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
இரண்டு துண்டுகளாக நறுக்கித் தேங்காய் நீரை நீக்கி விட்டு 1 சதவீத உப்புக் கலந்த கொதிநீரில் 8-10 நிமிடம் போட்டு வைக்க வெண்டும். அடுத்து இயந்திரத்தின் மூலம் 1-5 மி.மீ. அளவுள்ள துகள்களாக்க வேண்டும். பிறகு, இதைத் தட்டில் பரப்பி மின் உலர்த்தி மூலம் 80-90 டிகிரி செ.கி. வெப்ப நிலையில் 3 சதவீத ஈரப்பதம் வரும் வரை 45 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
பிறகு, ஆற வைத்து 12, 14, 16 கண்ணிகள் உள்ள அதிரும் சல்லடை மூலம் சலித்துத் தரம் பிரிக்க வேண்டும். அடுத்து, பாலிஎத்திலீன் பைகளில் அடைத்து வைத்தால் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். இதை, உணவில், அடுமனைப் பொருளில், ஐஸ்கிரீமில், இனிப்பு மற்றும் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.
தேங்காய்ச் சீவல்
8 முதல் 10 மாத முற்றிய தேங்காய், சீவல் தயாரிக்கப் பயன்படுகிறது. இதற்கு முதலில் பருப்பின் மேலுள்ள பழுப்புப் பகுதியை நீக்கி விட்டு இரு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, பருத்தித் துணியிலிட்டு, 90-95 டிகிரி செ.கி. வெப்ப நிலையில் உள்ள 0.05 சத பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் கலந்த கொதிநீரில் 15 நிமிடம் இட வேண்டும். அடுத்து, தேங்காய்ப் பருப்பை 0.75 மி.மீ. தடிமனில் நறுக்க வேண்டும்.
பிறகு, ஒரு மணி நேரம் சவ்வூடு பரவல் மூலம் (50 டிகிரி பிரிக்ஸ்) உலர்த்த வேண்டும். பிறகு, இனிப்புச் சீவல் தயாரிப்புக்கு, ஒரு கிலோ தேங்காய்ச் சீவலுக்கு ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உப்பு, ஒரு லிட்டர் நீர் வீதம் சேர்த்த கரைசலில் ஒரு மணி நேரம் மூழ்க வைக்க வேண்டும். ஒரு லிட்டர் சர்க்கரைப் பாகுக்கு 10 மி.லி. வீதம், வெனிலா, அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றில் ஒரு மணமூட்டியைச் சேர்க்க வேண்டும். இந்தக் கரைசலை, 150 கிராம் சர்க்கரை மற்றும் 5 கிராம் உப்பைச் சேர்த்து மீண்டும் சீவல் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.
உப்புச் சுவையுள்ள சீவல் தயாரிப்பில், ஒரு கிலோ சீவலுக்கு 30 கிராம் உப்புக் கலந்த ஒரு லிட்டர் நீரைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மணி நேரம் இக்கரைசலில் ஊற வைத்த சீவல்களைத் தனியாக எடுத்துத் தட்டில் பரப்பி, 70-80 டிகிரி செ.கி. வெப்ப நிலையில் உள்ள மின்சார அல்லது சூரிய உலர்த்தியில் 5-6 மணி நேரம் உலர்த்த வேண்டும்.
அடுத்து, அலுமினியம் தடவப்பட்ட பாலி எத்திலீன் பைகளில் அடைத்து 6 மாதம் வரை சேமித்து வைக்கலாம். இந்தச் சீவல்களை எண்ணெய்யில் பொரிக்காமல் அப்படியே சாப்பிடலாம். ஒருமுறை பயன்படுத்திய உப்புக் கரைசலில் 10 கிராம் உப்பைச் சேர்த்து மீண்டும் சீவல் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.
தேங்காய் மாவு
தேங்காய் பால் மற்றும் எண்ணெய்யை எடுத்த பிறகு உள்ள சக்கையை, 2.5-3 சத ஈரப்பதம் வரும் வரை உலர வைத்துத் தேங்காய் மாவைத் தயாரிக்கலாம். இதில், குறைந்தளவில் கொழுப்பும், 30-40 சத அளவில் புரதம் மற்றும் தாதுப்புகளும் இருக்கும்.
இது இனிப்பு மற்றும் பிழிதல் முறை உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. தேங்காய் மாவுடன் 25-30 சத கோதுமை மாவைச் சேர்த்து, பிரட், குக்கீஸ், நூடுல்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். தேங்காய் மாவில் 600 கிராம் உணவு வகை நார்ச்சத்து, 560 கிராம் கரையா நார்ச்சத்து, 40 கிராம் கரையும் நார்ச்சத்து ஆகியன உள்ளன. தேங்காய் மாவு கலந்த உணவுகளில் கிளைசீமிக் இன்டக்ஸ் என்னும் சர்க்கரையை உயர்த்தும் குறியீடு குறைவாக உள்ளது.
தேங்காய் குக்கீஸ்
கோதுமை மாவு 5 கிலோ, வெண்ணெய் 3.25 கிலோ, தேங்காய் நீரா வெல்லப்பொடி 5 கிலோ, தேங்காய் மாவு 1.87 கிலோ, பேக்கிங் பொடி 200 கிராம், வெனிலா மணமூட்டி 100 கிராம் மற்றும் தேவையான அளவில் உப்பைச் சேர்த்து, தேங்காய் குக்கீசைத் தயாரிக்கலாம். இப்படி, தேங்காய் மூலம் பல்வேறு உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பதன் மூலம் அதிக இலாபம் ஈட்டலாம்.
முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணகலா,
முனைவர் வீ.மு.இந்துமதி, வேளாண்மை அறிவியல் நிலையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!