இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

இறவை Ulundu

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

மிழ்நாட்டில் சாகுபடிப் பரப்பிலும் உற்பத்தித் திறனிலும் முன்னிலை வகிக்கும் உளுந்தை, சித்திரை, ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் நெல் தரிசில் என, ஆண்டு முழுதும் பயிரிடலாம். இது, குறைந்த நாட்களில் குறைந்த இடுபொருள் செலவில் அதிக இலாபத்தைத் தருவது.

கஜா புயலால் தாக்கப்பட்ட மற்றும் புதிய தென்னந் தோப்புகளில், உளுந்தை ஊடுபயிராகப் பயிரிடலாம். இது, காவிரி டெல்டா நெல் தரிசில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

நெல் அறுவடைக்கு முன்னுள்ள மண்ணின் ஈரம் மற்றும் பின்பனிக்காலப் பனி ஈரத்தில், உளுந்தும் பச்சைப்பயறும் விளைகின்றன. மேலும், கோடையில் இறவைப் பாசனத்தில் பயிரிடப்படுகிறது. சித்திரைப் பட்டத்தில் நல்ல மகசூல் கிடைக்கிறது.

கோயம்புத்தூரில் இருந்து 6 இரகங்கள், வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 8 இரகங்கள், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 6 இரகங்கள், குடுமியான்மலையில் இருந்து 2 இரகங்கள் மற்றும் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, கிள்ளிக்குளத்தில் இருந்து தலா ஒரு உளுந்து இரகமும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆடுதுறை 5, டி9 ஆகிய இரண்டு இரகங்கள் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளாக விவசாயிகளால் தொடர்ந்து பயிரிடப்படுகின்றன.

அண்மைக்காலமாக மஞ்சள் தேமல் என்னும் வைரஸ்  நோய்  உளுந்தின் உற்பத்தித் திறனைக் குறைக்கிறது. இது பெமிசியா பொபாசி என்னும் வெள்ளை ஈக்களாக பரவுவதால், இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் தான் இந்நோயைத் தடுக்க முடியும்.

இது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இம்முனைப்புடன் அண்மையில் வெளியிடப்பட்ட இரகங்கள் மஞ்சள் தேமல் நோயைத் தாங்கி வளர்கின்றன.

டி.9 உளுந்து உத்திரப்பிரதேச மாநிலம் பரோலியிலிருந்து 1972 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கோடை இறவையில் 1,000 கிலோவுக்கு மேல் மகசூலைத் தரும். ஏ.டி.ட்டீ.3 உளுந்து திருநெல்வேலியில் இருந்து 1981 இல் வெளியிடப்பட்டது.

நெல் தரிசுக்கு ஏற்றது. கோடை இறவையில் 1,270 கிலோ மகசூலைத் தரும். ஏ.டி.ட்டீ.5 உளுந்து கான்பூர் இரகத்திலிருந்து வந்தது. பலமுறை பூக்கும். 65 நாட்களில் முதிர்ந்த காய்களைக் கையால் பறித்த பின், டி.ஏ.பி.யைக் கரைசலாகவும் உரமாகவும் பயன்படுத்தினால், இன்னொரு முறை காய்க்கும்.

கோ.6 உளுந்து 2010 இல் வெளியிடப்பட்டது. மஞ்சள் தேமல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறனும், வேரழுகல் நோய்க்கு முழு எதிர்ப்புத் திறனும் கொண்டது. வம்பன் 6 உளுந்து 2011 இல் வெளியிடப்பட்டது.

அதிக மகசூல் மற்றும் மஞ்சள் தேமல் நோய்க்கு முழு எதிர்ப்புத் திறனைக் கொண்டது. நெல் தரிசு மற்றும் கோடை இறவைக்கு ஏற்றது.

வம்பன் 7 உளுந்து 2012 இல் வெளியிடப்பட்டது. இது அதிக மகசூலைத் தரும். மஞ்சள் தேமல் நோய், சாம்பல் நோய் மற்றும் இலைச் சுருக்கல் நோயைத் தாங்கி வளரும். ஏடிபி 2003 மற்றும் விபிஜி 66 லிருந்து உருவாக்கப்பட்ட எம்டியூ.1 உளுந்து 2014 இல் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இருந்து வெளியிடப்பட்டது.

70-75 நாட்களில் அறுவடை செய்யலாம். இலைச் சுருங்கல் நோயைத் தாங்கி வளரும். வம்பன் 8 உளுந்து வம்பன் 3 மற்றும் விபிஜி 04-008 லிருந்து 2016 இல் வெளியிடப்பட்டடது. அதிக  மகசூலைத் தரும். மஞ்சள் தேமல் மற்றும் சாம்பல் நோயைத் தாங்கி வளரும். 


இறவை BHARATHI.A e1614978922666

முனைவர் .பாரதி,

முனைவர் ஆ.கார்த்திகேயன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!