இப்படிச் செய்தால் தக்காளியில் நல்ல மகசூல் கிடைக்கும்!

தக்காளி midseason tomatoes Copy

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

க்காளியின் பிறப்பிடம் மெக்ஸிகோ நாடாகும். பின் ஸ்பெயின் காரர்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவியது. ஐரோப்பியர் மூலம் நம்மிடம் வந்தது. இந்தத் தக்காளியை ஆண்டு முழுதும் பயிரிடலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர்ந்த பகுதிகளில் சாகுபடி செய்வது கடினம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. சூரியவொளியைப் பொறுத்துப் பழங்களின் நிறமும் தன்மைகளும் மாறும்.

செடிகள் 1-3 மீட்டர் உயரம் வளரும். வலுவற்ற தண்டுகள் கொடியைப் போல வளருவதால் தாங்கி நிற்க, பந்தலைப் போன்ற குச்சிகளின் உதவி தேவை. இதனால் காய்கள் தரையில் படாமல் இருக்கும். தக்காளி பழவகையாக இருப்பினும், சர்க்கரை குறைவாக இருப்பதால் சமையல் காய்கறியாகப் பயன்படுகிறது.

வெப்பநிலை

விதை முளைக்க, 16-29 டி.செ. வெப்பம், நாற்று வளர, 21-24 டி.செ. வெப்பம், வெப்பம், காய் உற்பத்திக்கு 20-24 டி.செ. வெப்பம், சிவப்பாக மாற 20-24 டி.செ. வெப்பம் தேவை.

மண்

வடிகால் வசதியுள்ள மணல் கலந்த நிலத்தில் நன்றாக வளரும். ஆழ உழுதால் வேர் வளர்ச்சியும் மண்ணுக்கு நல்ல காற்றோட்டமும் கிடைக்கும். மண்ணின் காரத்தன்மை 6.0-7.0 என இருக்க வேண்டும்.

விதை

நோய்த்தொற்று இல்லாத, நன்கு பெருத்துப் பழுத்த பழங்களில் இருந்து விதைகளை எடுக்க வேண்டும். முதல் அறுவடையில் கிடைக்கும் பழங்களில் இருந்து விதைகளை எடுக்க வேண்டும். சீராக வளர்ந்துள்ள விதைகளைப் பிரிக்க வேண்டும். தரமான விதைகள் அதிக மகசூலுக்குச் சாதகமாக அமையும்.

வகைகள்

பி.கே.எம்.1, கோ.1, கோ.2 ஆகிய மேம்படுத்தப்பட்ட வகைகளும், கோ.3, கோ.டி.எச்.2, அர்க்கா ரசாக் ஆகிய ஒட்டு வகைகளும் தக்காளியில் உள்ளன. மேம்படுத்தப்பட்ட விதைகள் ஏக்கருக்கு 125 கிராம், வீரிய ஒட்டு விதைகள் ஏக்கருக்கு 40 கிராம் தேவைப்படும். இவற்றைக் குழித்தட்டுகளில் விதைத்தால் ஏக்கருக்கு 6,000-7,000 நாற்றுகள் தேவைப்படும். இதற்கு 98 குழித்தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். ஜூன்-ஜூலை, நவம்பர்-டிசம்பர், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நாற்று விட்டு நடலாம்.

விதை நேர்த்தி

அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். பிறகு ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப் பாத்திகளில் 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். பிறகு மணலால் மூடிவிட வேண்டும். திரம் மற்றும் கவ்ச்சோ பூச்சி மருந்தைக் கலந்து விதைநேர்த்தி செய்தால் ஒரு மாதம் வரையில் பூச்சி, நோய்கள் நாற்றுகளைத் தாக்காது.

ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளைக் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்ய, மட்கிய தென்னைநார்க் கழிவு 30-50 கிலோ, மண்புழு உரம் 20  அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி தலா அரைக்கிலோ, வேம் ஒரு கிலோ எடுத்துக் கலந்து 30-45 நாட்களுக்கு மூடாக்கில் வைத்துப் பயன்படுத்தினால் விதை முளைப்பு நன்றாக அமையும்.

இடைவெளி

கரையின் ஒரு பக்கத்தில் 25-30 நாள் நாற்றுகளை நாற்றுகளை நட வேண்டும். கோ.1 நாற்றுகளுக்கு 60×45 செ.மீ., பி.கே.எம்.1 நாற்றுகளுக்கு 60×60 செ.மீ., வீரிய ஒட்டுவகை நாற்றுகளுக்கு 150x75x60 செ.மீ. (இரட்டை வரிசை) இடைவெளி விட வேண்டும்.

பாசனம்

நடவு நீருக்கு அடுத்து மூன்றாம் நாள் உயிர் நீரும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மண்ணின் தன்மையைப் பொறுத்து வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம்.

உரம்

அடியுரமாகத் தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், மேம்படுத்தப்பட்ட வகைகளுக்கு அடியுரமாக ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 30 கிலோ தழைச்சத்தை நட்ட 30வது நாளில் இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

வீரிய ஒட்டு வகைகளுக்கு அடியுரமாக ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து, 100 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக, தழைச்சத்து, சாம்பல் சத்து இரண்டையும் தலா 40 கிலோ எடுத்து, 30, 45, 60 ஆகிய நாட்களில் சமமாகப் பிரித்து இட வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் ஏக்கருக்கு, தழை,மணி, சாம்பல் சத்தை 80:100:100 கிலோ எடுத்து, நீரில் கரையும் உரமாக இட வேண்டும்.

பூச்சி, நோய் மேலாண்மை

சூடோமோனாஸ் ஃப்ளூரோசன்சில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு ஐம்பது கிலோ வீதம் வேப்பம் புண்ணாக்கு, ஒரு கிலோ வீதம் சூடோமோனாசை இட வேண்டும். பூச்சி, நோய் தாக்காத விதை மற்றும் நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். வைரஸ் தாக்கிய செடிகளை அழித்து விட வேண்டும். ஓரப்பயிராகச் சாமந்தியை வளர்க்க வேண்டும். ஏக்கருக்கு 5 வீதம் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தால் காய்ப்புழுக்கள் கட்டுப்படும்.

ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் பேசில்லஸ் துரிஞ்சியென்சைக் கலந்து தெளித்தும், ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் டிரைசோகிராமா சிலோனிஸ் ஒட்டுண்ணி முட்டைகளை இட்டும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி மற்றும் 5 சத வேப்பங் கொட்டைக் கரசலைத் தெளித்தும் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தலாம். சதுர மீட்டருக்கு 10 கிராம் வீதம் கார்போபியூரான் குருணை மருந்தை இட்டு, வேர்முடிச்சு நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

நாற்றழுகலைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது திரம் மருந்தில் விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வெள்ளை ஈக்கள் மூலம் பரவும் இலைச்சுருட்டு வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 40 கிராம் வீதம் அசிட்டாமிப்ரைட் மருந்தைப் பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். புள்ளிவாடல் நோயை உண்டாக்கும் இலைப்பேனைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்குச் சுமார் 2 கிலோ வீதம் பியூரிடான் குருணையை இட வேண்டும். நோயுற்ற செடிகளைப் பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

இந்த முறைகளைக் கையாண்டால் சாதா வகைகள் மூலம் ஏக்கருக்கு 12-14 டன், வீரிய வகைகள் மூலம் 22-36 டன் தக்காளியும் மகசூலாகக் கிடைக்கும்.


இரா.வசந்தகுமார்,

தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், 

வாலிகண்டபுரம், பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!