இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

கரும்பு HP 1 scaled e1611890350645

மிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் புராணக் காலத்தில் இருந்தே கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. 3 ஆயிரத்தில் இருந்து 7000 ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட அதர்வண வேதத்தில் கரும்பைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அரேபிய வணிகர்கள் இந்தியாவிலிருந்து பாபிலோனுக்குக் கரும்பை எடுத்துச் சென்றனர். பிறகு, சிரியா, சைப்ரஸ், மால்டா மற்றும் சிசிலித் தீவுகள் போன்ற மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அலெக்சாண்டரும், கொலம்பஸும் இந்தியாவிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்குக் கரும்பை அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது.

கரும்பு வெப்ப மண்டலப் பயிராகும். மிதவெப்பப் பகுதியிலும் வளரும். பூமியின் வட கோளார்த்தப் பகுதியில் 30 பாகை வட அட்சரேகைப் பகுதி வரை பயிரிடப்படுகிறது. 25-28 சென்டிகிரேடு வெப்பநிலை கரும்புக்கு மிகவும் ஏற்றது. ஆனாலும், 40-50 சென்டிகிரேடு என, அதிகளவு வெப்ப நிலையிலும், 10 டிகிரி சென்டிகிரேடு என, குறைந்தளவு வெப்ப நிலையிலும் கரும்பு வளரும்.

கரும்பு செழிப்பாக வளர வெப்பமும் ஈரப்பதமும் முக்கியம். ஆண்டுக்கு 750-1200 மி.மீ. மழை பெய்யும் பகுதிகளில் கரும்பு நன்கு வளரும். இத்துடன் பாசன வசதியும் இருந்தால் அதிக மகசூல் கிடைக்கும். கரும்பின் வளர்ச்சிப் பருவத்தில், நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். முதிர்ச்சிக் காலத்தில் கொஞ்சம் வறட்சி அவசியம். இங்கே குறிப்பிட்டுள்ள தட்ப வெப்பம் தமிழ்நாட்டில் இருப்பதால், தொன்று தொட்டு இங்கே கரும்பு சாகுபடி நடந்து வருகிறது.

கரும்பைக் கற்பக விருட்சத்துக்கு இணையாக ஒப்பிடலாம். கரும்பிலிருந்து சர்க்கரையும் வெல்லமும் தயாரிக்கிறோம். சர்க்கரை ஆலைகளில் சாற்றைப் பிழிந்த பிறகு முதலில் வெளியே வருவது கரும்புச் சக்கையாகும். இது நமக்குப் பல வகைகளில் பயன்படுகிறது. கரும்பாலைகளில் எரிபொருளாகப் பயன்பட்டு நீராவி உற்பத்திக்கு உதவுகிறது. இந்த நீராவி, சர்க்கரை உற்பத்திக்கு உதவுகிறது.

இந்தச் சக்கை மின்சார உற்பத்திக்கும் பயன்படுகிறது. இன்று வரையில் கிராமங்களில் வெல்லம் காய்ச்சப் பயன்படும் முக்கிய எரிபொருள் கரும்புச் சக்கை தான். மேலும், காகிதம், காகித அட்டை தயாரிக்கவும் பயன்படுகிறது.

சர்க்கரை ஆலைகளில் கழிவுப் பொருளாகக் கிடைக்கும் ஆலை அழுக்குச் சிறந்த அங்கக உரமாகும்.  இதில் 1.2% தழைச்சத்தும், 2.2% மணிச்சத்தும், 0.4% சாம்பல் சத்தும் உள்ளன. எனவே, இதை நிலத்தில் இட்டால்,  மண்வளம் மிகுவதுடன், கரும்பு மகசூலும் கூடும்.

கரும்பின் பசுந்தோகைகள் கால்நடைகளுக்கு நல்ல பசுந்தீவனமாகும். காய்ந்த தோகைகள் கூரை வேயவும், கரும்புச் சால் மேடுகளில் மூடாக்காகப் பரப்பி, பாசன நீரின் தேவையைக் குறைக்கவும் பயன்படுகின்றன. மேலும், காய்ந்த தோகைகளை மட்க வைத்து கம்போஸ்ட் உரமாகவும் பயன்படுத்தலாம்.

சர்க்கரையை எடுத்த பிறகு இறுதியாகக் கிடைக்கும் துணைப் பொருள் சர்க்கரைப் பாகாகும். இது எரிசாராயம் மற்றும் மாட்டுத்தீவனத் தயாரிப்பில் முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. எரிசாராயம், வார்னீஷ் மற்றும் பல முக்கியப் பொருள்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இப்படி, கரும்பு நிலத்திலிருந்தும், கரும்பாலையில் இருந்தும் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும், ஒவ்வொரு வகையில் நமக்குப் பயன்பட்டு வருகின்றன.

எனவே, தமிழக விவசாயத்தில் கரும்பு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இங்கே சுமார் 2.3 இலட்சம் எக்டரில் கரும்பு சாகுபடி உள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 162.1 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  மாநிலத்தின் 75% கரும்பு உற்பத்தி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைக்கிறது. தமிழகத்தில் கரும்பு உற்பத்தித் திறன் எக்டருக்கு 98.2 டன்னாக உள்ளது.

ஆனாலும், பெருகி வரும் மக்களுக்கான சர்க்கரைத் தேவையைச் சரி செய்ய வேண்டுமானால், கரும்பு விளைச்சலை மேலும் பெருக்க வேண்டும். மேலும், போதிய மழையின்றி விளைச்சல் குறையும் காலங்களில், சர்க்கரைத் தேவையைச் சரி செய்வதற்காக, சேமித்து வைக்க வேண்டியதும் அவசியம்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தகுதியான நிலங்களில் ஏற்கெனவே கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. புதிய நிலங்களில் கரும்பைப் பயிரிடுவதற்கு ஏற்ற வாய்ப்பு எதுவும் குறிப்பிடும்படி இல்லை. எனவே, இப்போது கரும்பு விளையும் நிலங்கள் மூலம் கரும்பு உற்பத்தியை அதிகரித்தால், தமிழகத்தில் கரும்பு மகசூலை மேலும் கூட்டலாம்.

இதற்கு மூன்று முக்கியக் கூறுகளைக் கவனிக்க வேண்டும். முதலில், அதிக விளைச்சல், உயர்ந்த சர்க்கரைச்சத்து மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். அடுத்து, இந்த இரகங்களுக்கு ஏற்ற மண், நீர், உழவியல், உரம், இயந்திரப் பயன்பாடு போன்றவற்றில் சரியான உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

மூன்றாவதாக, கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரைக் கட்டுமானத்தைப் பாதிக்கச் செய்யும் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

முயன்றால் முடியாதது ஏதுமில்லை. எனவே, இந்த மூன்று கூறுகளையும் ஒருங்கிணைத்து, விஞ்ஞானிகள், விவசாயிகள், ஆலையாளர்கள் இணைந்து செயல்பட்டால்; கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் உயரும் என்பது நிதர்சனமான உண்மை.


கரும்பு DR.C.BABU

முனைவர் .பாபு,

முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் வே.இரவிச்சந்திரன், 

கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!