சின்ன வெங்காயச் சாகுபடி!

வெங்காய 81jdFICh6fS

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

ன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது.

இரகங்கள் 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம் ஏக்கருக்கு 7.2 டன் மகசூலைக் கொடுக்கும். வயது 90 நாட்கள். காய்கள் சிவப்பாக இருக்கும். தமிழகம் முழுதும் பயிரிடலாம்.

பருவம்

மழைக் காலத்தைத் தவிர, ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பரில் நடலாம். ஏக்கருக்கு 400 கிலோ வெங்காயம் தேவை. காய்கள் திரட்சியாக இருக்க வேண்டும். விதையெனில் ஏக்கருக்கு 3.25 கிலோ போதும்.

நிலத் தேர்வு

வடிகால் வசதியுள்ள செம்மண் உள்ளிட்ட நிலங்களில் நடலாம். அதிகக் களிமண் நிலம் ஆகாது. ஏனெனில், நீர் தேங்கினால், முளைப்பும் வளர்ச்சியும் பாதிக்கப்படும். மண்ணின் அமில காரத்தன்மை 6-7 இருக்க வேண்டும். நிலத்தை 4-5 முறை உழுது ஒன்றரை அடி இடைவெளியில் பார்களை அமைத்து, இவற்றின் பக்கவாட்டில் 10-12 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

பாசனம்

நாற்று அல்லது விதைக்காயை நட்டதும் பாசன அவசியம். தொடர்ந்து மூன்றாம் நாளும், அடுத்து வாரம் ஒருமுறையும் பாசனம் தேவை. அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன் பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.

உரம்

மண்ணாய்வின் அடிப்படையில் உரமிடுதல் நல்லது. ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் தேவை. பிறகு 4 பொட்டலம் அசோஸ்பயிரில்லம், 4 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவை 20 கிலோ தொழுவுரம், 40 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நடவுக்கு முன் இட வேண்டும். பிறகு, 30 கிலோ தழை, 60 கிலோ மணி மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். 30 கிலோ தழைச்சத்தை நடவு செய்த 30ஆம் நாள் மேலுரமாக இட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இலைப்பேன் மற்றும் ஈக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 1.2 மில்லி குயினால்பாஸ் அல்லது 10 லிட்டர் நீருக்கு 7 மில்லி டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளிக்கலாம். ஏக்கருக்கு 5 வீதம் மஞ்சள் ஒட்டுப்பொறிகளை வைக்கலாம்.

ஏக்கருக்கு  5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்கலாம். இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மான்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் சூடோமோனாசை எடுத்து, விதைப்புக்கு முன் நிலத்தில் இடலாம். நிலத்தைச் சுற்றி மக்காச்சோளத்தை இரண்டு வரிசையில் விதைக்கலாம்.

விதை நேர்த்தி செய்து நட வேண்டும். நட்டு ஒரு மாதம் கழித்து, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் சூடோமோனாஸ், 5 கிராம் பிவேரியா பேசியானா வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நாற்பது நாளில் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அசாடிராக்டின் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

அறுவடைக்கு 30 நாட்களுக்கு முன் சைக்கோசைல் 200 பி.பி.எம்., கார்பெண்டாசிம் 1000 பி.பி.எம். வீதம் தெளித்து, வெங்காயம் முளைப்பதைத் தவிர்த்து, சேமிக்கும் காலத்தை நீட்டிக்கலாம்.


வெங்காய DHANUSHKODI e1634639335339

முனைவர் வெ.தனுஷ்கோடி,

முனைவர் சு.ஈஸ்வரன், முனைவர் கோ.அமுதசெல்வி, முனைவர் நூர்ஜஹான் ஏ.கே.ஏ.ஹனீப், 

வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி-639115, திருச்சி மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!